சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

"தமிழ் அடையாளங்களைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் அரசியல்!”

Vetrimaaran, dhanush
பிரீமியம் ஸ்டோரி
News
Vetrimaaran, dhanush

- வெற்றிமாறன் ஓப்பன் டாக்

12 வருட சினிமாப் பயணத்தில் ஐந்தே படங்கள். ஆனால், அத்தனையும் தமிழ் சினிமாவுக்குப் புது ரத்தம் பாய்ச்சியவை. ‘வெற்றி மாறனைப் போல படம் எடுக்க வேண்டும்’ என்பதுதான் இன்று கோடம்பாக்கத்துக்குள் நுழைபவர்களின் லட்சியம். இவர் படங்களின் நாயகர்கள் மட்டும் எளிய மனிதர்கள் அல்லர், இவரே எளிமையான மனிதர்தான். அன்புநகரில், வெற்றிமாறனைச் சந்திப்ப தற்காக அவர் காரின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, பைக்கில் வந்து இறங்குகிறார். ‘அசுரன்’ அரசியல் முதல் தமிழக அரசியல்வரை வெற்றி மாறனிடம் பேசப் பல விஷயங்கள் இருக்கின்றன. பேசினோம்!

‘`நீங்கள் இயக்கிய படங்களில் ‘அசுரன்’தான் நேரடி அரசியல் படம். இந்தக் கதையைப் படமாக்க வேண்டும் என முடிவெடுக்கக் காரணம் என்ன?’’

‘` ‘அசுரன்’ ஒரு யுனிவர்சல் தீம். அடக்குமுறை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கேயெல்லாம் இந்தக் கதையைப் பொருத்திப்பார்த்துக்கொள்ள முடியும். அமெரிக்காவில் கறுப்பினச் சிறுவன் வெள்ளையின ஆளைக் கொன்றுவிட்டு அப்பாவுடன் காட்டுக்குள் ஓடினால் அது அமெரிக்காவில் நடக்கும் கதை. பாலஸ்தீனச் சிறுவன் இஸ்ரேலிய ஆளைக் கொன்றுவிட்டுத் தப்பித்து ஓடினால் அது பாலஸ்தீனத்துக்கான கதை. ஒரு தலித் சிறுவன் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரைக் கொன்றுவிட்டு ஓடினால் அது தமிழ்நாட்டில் நடக்கும் கதை. இந்த யுனிவர்சல் தன்மைதான் என்னை இந்தக் கதைக்குள் ஈர்த்தது. நேரடி அரசியல் பேசுவது இந்தக் களத்துக்குத் தேவையாக இருந்தது.’’

‘`ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறக்காதவர் அந்தச் சமூகம் குறித்தும், அந்த மக்களின் வாழ்க்கையைக் குறித்தும் படங்கள் எடுப்பது மிகவும் சவாலானது... இதை எப்படி ‘அசுரன்’ படத்தில் சாத்திய மாக்கினீர்கள்?’’

‘`ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் இயக்குநர் அவர் வாழ்க்கையை, அரசியல் நிலைப்பாட்டைப் படைப்பாக மாற்றும்போது அது நிதர்சனமாகவும், உண்மையான வலியோடும் இருக்கும். அவர்கள் வாழ்க்கையைப் பதிவுசெய்யும் முறையில் பல சுதந்திரங்களும் அவர்களுக்கு இருக்கிறது. மற்ற சமூகத்தினர் இதுபோன்ற படங்களைச் செய்யும்போது பொறுப்பு இன்னும் கூடுகிறது. எந்த அரசியல் நிலைப்பாட்டுக்காக அதைச் சொல்கி றோமோ, எந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறோமோ, அதற்கு எதிராகவே நம்மையும் அறியாமல் போய்விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால் மிகவும் கவனத்துடன்தான் இதைச் செய்ய வேண்டும். இந்தப் படத்துக்கான திரைக்கதையை எழுதும்போது எந்த ஒரு தனிநபரையோ, குறிப்பிட்ட சமூகத்தையோ நேரடியாக விமர்சனத்துக்கு ஆட்படுத்தாமல் உணர்த்த முயல்வதுதான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. மேலும், படைப்புகளுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் என்னால் இருக்க முடியும் என்கிற நம்பிக்கைதான் ‘அசுரன்’ போன்ற படத்தை எடுப்பதற்கான தைரியத்தைக் கொடுத்தது.’’

வெற்றிமாறன் ஓப்பன் டாக்
வெற்றிமாறன் ஓப்பன் டாக்

‘`கோவில்பட்டியில் நடக்கும் கதைதான் ‘அசுரன்.’ ஆனால், அந்தக் கதைக்களத்துக்கும் பஞ்சமி நிலப் போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாதே?’’

‘`உண்மைதான். 1960-களில் பஞ்சமி நிலம் பற்றிப் பேசப்படுவதாகப் படத்தில் காட்டியிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. 60-களில் அப்படிப்பட்ட போராட்டங்கள் நடக்கவேயில்லை. புனைவுக்கான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு அதை நாங்கள் இந்தக் கதைக்குள் புகுத்தினோம். ஏனென்றால், முக்கியமான ஒரு பிரச்னையான பஞ்சமி நிலம் குறித்துப் பேசுவதற்கு எனக்கு இன்னொரு களம் அமையுமா என்று தெரியாது. வெகுமக்கள் மத்தியில் இதுதொடர்பான விவாதத்தைத் தொடங்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்ததால் அதை இந்தப் படத்தில் வைத்தோம். இது ஒரு `காலப்பிழை (Chronological Error)’ ஆனால், இந்தக் காலப்பிழையைத் தெரிந்தேதான் செய்தோம்.’’

‘` ‘அசுரன்’ பேசிய அரசியலைப் புரிந்துகொண்டு தான் தனுஷ் இதில் நடித்தாரா?’’

‘`எந்த ஒரு நடிகரும் அந்தப் படம் என்ன பேசவருகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், தெரியாமல் நடிக்க மாட்டார்கள். தனுஷ் எல்லாவற்றையும் புரிந்துகொண்டுதான் நடித்தார். இந்தப் படத்தின் கதையை நான் தனுஷிடம் சொன்னபோது, ‘சூப்பர் சார்... பண்ணிட லாம். பையன் யார்?’ என்றுதான் கேட்டார். அதுதான் தனுஷ். அவர் வயதுக் கதாநாயகர்கள் வேறு யாராவது இருந்தால் ‘அப்பா யார்?’ என்றுதான் கேட்டிருப்பார்கள். நான் தனுஷை சிவசாமியாக நினைத்துத்தான் அந்தக் கதையை அவரிடம் சொல்லப்போனேன். அவரும் கதையைச் சொல்லும்போதே தன்னை சிவசாமியாகப் பார்த்துவிட்டார். எனக்கும் அவருக்குமான இந்தப் புரிதல்தான் என்னை அவருடன் தொடர்ந்து இயங்கவைக்கிறது.’’

‘` ‘எவ்வளவு ஆண்டுகளுக்குத்தான் ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொண்டேயிருப்பீர்கள்?’ - அசுரன் படத்தின் மிக முக்கிய வசனம் இது. ஆனால், சில சாதி அமைப்புகளிடமிருந்து இந்த வசனத்துக்கு எதிர்ப்பு வந்ததும் படத்திலிருந்து நீக்கிவிட்டீர்களே... ஏன்?’’

‘`குறிப்பிட்ட ஒரு சமூகத்தையோ, தனி நபர்களையோ நோக்கிச் சொல்லப்பட்ட கதை அல்ல ‘அசுரன்.’ வெகுமக்களுக்கான ஒரு கண்ணாடியாகவும், இன்றைய தமிழ் மக்களுடைய அழுத்தத்தை வெளிக்காட்டும் முயற்சி யாகவும்தான் நான் ‘அசுரன்’ எடுத்தேன். இதில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைப் படத்தில் வரும் ஒரு வார்த்தை காயப்படுத்துகிறது என்று சொல்லும்போது அதை நீக்குவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எல்லாச் சமூகமும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும், சாதி வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த மாதிரியான படத்தின் நோக்கம். ஆனால், இந்தப் படத்தில் வரும் வசனத்தை நீக்காமல் இருப்பதன் மூலமாக மக்களுக்குள் ஒரு மோதல் வரும் என்றால் இந்தப் படத்தை எடுத்ததற்கான நோக்கமே தவறாகிவிடும். அதனால்தான் குறிப்பிட்ட வார்த்தை அந்தச் சமூகத்தைக் காயப்படுத்துகிறது என்று சொன்னவுடனேயே அதை நீக்குவதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.’’

"தமிழ் அடையாளங்களைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் அரசியல்!”

“ ‘அசுரன்’ இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கப்போவதாகச் செய்திகள் வருகின்றன. நீங்களும் ஷாருக்கானும் சந்தித்துக்கொண்ட படம்கூட வெளியானதே?’’

‘` ‘அசுரன்’ பார்த்துவிட்டு, படத்தில் பிடித்த, பிடிக்காத விஷயங்கள் குறித்து என்னிடம் பேசினார் ஷாருக்கான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசினோம். ஆனால், ரீமேக் செய்வதைப் பற்றியெல்லாம் பேசவில்லை. மிகவும் தனிப்பட்ட முறையிலான சந்திப்பு அது.’’

‘`வசூலில் 100 கோடி ரூபாய் ஹிட் அடித்த ஒரு சினிமாவைக் கொடுத்துவிட்டு, அடுத்து ஒரு சிறிய படம் இயக்கப் போகிறீர்களே... தொடர்ந்து பெரிய படங்கள் இயக்கும் ஆர்வம் இல்லையா?’’

‘`சினிமாவின் வணிகரீதியான வெற்றி என்பது ஒரு தற்செயல் நிகழ்வு என பாலுமகேந்திரா சார் எப்போதும் சொல்வார். ஒரு படம் வெளியாகும்போது அதனுடன் சேர்ந்து வெளியாகும் திரைப்படங்கள், அப்போது வெளியாகாத திரைப்படங்கள், இயற்கைப் பேரிடர்கள், அரசியல் சூழல் எனப் பல விஷயங்கள் படத்தின் வணிகரீதியான வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய காரணிகளாக இருக்கின்றன. வணிகரீதியான வெற்றிக்குத் தொடர்ந்து முயற்சி செய்யாமல் கதைத்தேர்வில், திரைக்கதை அமைப்பில், படமாக்குவதில் முந்தைய படத்தைவிட ஒரு படி இன்னும் மேலே போகமுடியுமா, வாழ்க்கையைப்பற்றி இதுவரை நமக்குத் தெரியாத ஏதோ ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்வதற்கு இந்தக் கதைக்களம் உதவுமா என்றுதான் நான் பார்க்கிறேன். அப்படிப்பட்ட கதைக்களங்களையே தேர்ந்தெடுக்கிறேன். இதைத்தான் ஒரு படத்தில் இருந்து அடுத்த படத்துக்கு நகர்வதற்கான என்னுடைய அளவுகோலாகவும் வைத்திருக்கிறேன்.’’

‘`சூரியை வைத்து அடுத்த படம் இயக்கப்போகிறீர்கள். இந்தப் படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?’’

‘`நா.முத்துக்குமார் எழுதிய ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ கவிதைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கவிதையை மையமாக வைத்துதான் ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறேன். இது நான் பாலு மகேந்திரா சாரோடு இருக்கும்போது எழுதிய கதை. அவரே ‘20 வரிக் கவிதையை எப்படிடா ஸ்கிரிப்டாக்க முடியும்’ எனக் கேட்டார். ஒரு குறும்படம் இயக்குவதற்காகத்தான் அப்போது இந்தக் கதையை உருவாக்கினேன். அதை இப்போது படமாக எடுக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் இதைத் தயாரிக்கிறார்கள். இதற்கு முன்பாக நெட்ஃபிளிக்ஸுக்காக ஆந்தாலஜி படம் செய்கிறேன். நான்கு இயக்குநர்கள் இயக்கு கிறார்கள். அதில் நான் ஒரு படம் இயக்குகிறேன். என்னுடைய படத்தில் பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி நடிக்கிறார்கள்.’’

‘`அடுத்து சூர்யாவுடன் ஒரு படம் செய்யவிருப்பதாகவும், அதை தாணு தயாரிக்கப்போவதாகவும் ஒரு தகவல். உண்மையா?’’

``முதல்கட்ட வேலைகள் நடந்துகொண்டி ருக்கின்றன. இன்னும் எதுவும் தீர்மானமாக வில்லை.’’

``அப்படியானால் அன்புவின் எழுச்சி?’’

‘` ‘வடசென்னை -2’ எடுப்பது இப்போதைய சூழலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இதன் பட்ஜெட் ரொம்பவும் அதிகம். ஆனால், இன்னும் கொஞ்ச காலத்தில் படத்தை எடுத்துவிடலாம் என நம்புகிறேன்.’’

"தமிழ் அடையாளங்களைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் அரசியல்!”

‘`ரஜினி, விஜய், அஜித்... இவர்களை இயக்கும் இயக்குநராக வெற்றிமாறனை எப்போது பார்க்கலாம்?’’

‘`ரஜினி, விஜய் இருவரையும் சந்தித்துக் கதைகள் சொல்லியிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தைத் தொடர்புகொள்வதற்கும் முயற்சிசெய்தேன். அவர்களுக்குச் சரியான நேரம் வரும்போது கூப்பிடுவார்கள் என நினைக்கிறேன். அந்த நேரம் வரும்போது நிச்சயம் படம் பண்ணுவோம்.’’

‘`நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட இந்த OTT பிளாட்பாரத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்... சினிமாவுக்கு இது சவாலானதாக இருக்குமா?’’

‘`OTT பிளாட்பாரத்தின் வரவை திரைக்கதை எழுத்தின் பொற்காலமாக நான் பார்க்கிறேன். ஒரு படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதுவது என்பது எப்போதுமே 120 பக்கங்களுக்குள் அடங்கிவிடும். ஆனால், வெப்சீரிஸ்கள் அப்படிக் கிடையாது. ஒரு திரைக்கதை ஆசிரியன் தன்னுடைய ஆளுமையைப் பொறுத்து எதை வேண்டுமானாலும் நெடுங்கதைகளாக எழுதும் சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறான். நிச்சயமாக வெப்சீரிஸ்கள் திரையரங்குகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், திரையரங்குகளுக்காக எடுக்கப்படும் படங்களின் கதைத் தேர்வுகளை இது நிச்சயம் பாதிக்கும்.’’

‘` ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘விசாரணை’, ‘அசுரன்’ என உங்களின் எல்லாப் படங்களுமே வெற்றிப்படங்கள். விருதுகளைப் பெற்றுத்தந்த படங்கள்... உங்களின் சினிமாப் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘`ஸ்கூலில் படிக்கும்போது ஒரு பொறுப்போடு நான் படித்ததே கிடையாது. ஆனால், ஒரு படம் எடுக்கும்போது அப்போது சரியாகப் படிக்காமல் விட்டதற்கும் சேர்த்து நிறைய படிக்கவேண்டியிருக்கிறது. தொடர்ந்து தேடலும், வாசிப்புமாக இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இயங்கிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது பாலுமகேந்திரா சாரிடம் நான் கற்றுக்கொண்டது. இப்போதும் அவருக்குப் பிடித்த மாதிரி ஒரு படம் எடுத்துவிடமாட்டோமா என்கிற எண்ணம்தான் எனக்குள் இருக்கும். ஒரு ஷாட் எடுக்கும்போது நன்றாக வந்தால், ‘இந்த ஷாட் சாருக்குப் பிடிச்சிருக்கும்ல’ என்றுதான் நினைக்கத் தோன்றும். அப்படித் தொடர்ந்து அவரின் ரசனையை ஒரு அளவுகோலாக வைத்துக்கொண்டுதான் ஓடிக்கொண்டி ருக்கிறேன். ஒவ்வொரு படத்தையும் கற்றுக்கொள்வதற்கான, என்னை இன்னும் ஒரு மனிதனாக மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறேன். இவ்வளவு நாள் எனக்கு நிறைய படங்கள் பண்ணியிருக்கிறோம் என்கிற நினைவு இல்லை. ஆனால் இப்போது ஒரு கை நிறையும் அளவுக்குப் படங்கள் எடுத்து விட்டோம், அடுத்த கைக்குப் போகவேண்டுமே என்று தோன்றுகிறது. என் கரியரில் 10-12 படங்கள் இயக்குவேன் என நினைக்கிறேன்.’’

‘`அரசியலை மிகவும் கூர்மையாக கவனிப்பவர் நீங்கள். தற்போதைய அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘` ‘சரியான தலைவர்கள் இல்லை... வெற்றிடம் இருக்கிறது’ என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. தலைவர்கள் இங்கு பிரச்னை இல்லை. அரசியலுக்குக் கொள்கையும், கோட்பாடும்தான் தேவை. தலைவர்கள் இரண்டாவதுதான். நண்பர் ஒருவர் இன்றைய அரசியல் சூழல் குறித்து என்னிடம் இப்படிச் சொன்னார். ‘தமிழ் அடையாளங்களை, ஐகான்களைக் கைப்பற்றுவதுதான் அவர்களின் அரசியல். திருவள்ளுவர், ராஜராஜசோழன் தொடங்கி இன்று இருக்கும் முக்கியத் தமிழ் அடையாளங்கள்வரை அனைத்தையும் கைப்பற்றுவதுதான் அவர்களின் திட்டமாக இருக்கிறது’ என்றார். அதுதான் நடந்துகொண்டி ருக்கிறது என நினைக்கிறேன்.’’