
படங்கள்: கிரண் சா
ஜி.வி.பிரகாஷிடம் இசையமைப்பாளராக, நடிகராக அவர் அறிமுகமான முதல் பட அனுபவங்களைக் கேட்டேன்.
`` `வெயில்’ படத்துக்கு இசையமைக்கிறதுக்கு முன்னாடி ரஹ்மான் சார், பரத்வாஜ் சார், ஹாரிஸ் ஜெயராஜ் சார்னு பல இசையமைப்பாளர்கள்கிட்ட கீபோர்டு வாசிச்சிட்டிருந்தேன். விளம்பரப் படங்களுக்கும் இசையமைச்சிட்டிருந்தேன். அப்போ ரேடியோ மிர்ச்சியோட முதலாண்டுக் கொண்டாட்டத்து க்காக நான் போட்ட ஜிங்கிள் நல்லா ஃபேமஸாச்சு. அதைக் கேட்டுட்டுத்தான் வசந்தபாலன் சார், ஷங்கர் சார்கிட்ட சொல்லி ’வெயில்’ படத்தில் என்னை கமிட் பண்ணினார். கமிட்டானதும் ஷங்கர் சார் செக் கொடுக்கும் போது, `என் கம்பெனில பண்ற படங்களோட பாடல்கள் எல்லாமே ஹிட். அதே மாதிரி இந்தப் படத்தோட பாடல்களும் ஹிட்டாகணும்’னு சொன்னார். ‘நிச்சயம் சார்’னு சொல்லிட்டு ’வெயில்’ படத்தோட வேலைகளை ஆரம்பிச்சேன்.’’
“முதல் பாடல் கம்போஸ் பண்ணின தருணம் சொல்லுங்க?”
``முதல்ல ’வெயிலோடு விளையாடி’ பாட்டுதான். நான் போட்ட நாலு ட்யூனுமே வசந்தபாலன் சாருக்கு செட்டாகலை. கம்போஸ் பண்ணிட்டிருந்தப்போ, இன்னொரு பக்கம் நா.முத்துக்குமார் வேற ஓர் இடத்திலிருந்து எழுதிட்டிருந்தார். அஞ்சாவதா நான் போட்ட ட்யூன் வசந்தபாலன் சாருக்குப் பிடிச்சதும், அதை ஓகே பண்ணிட்டார். முத்துக்குமார் போன் பண்ணி, `பாட்டை எழுதி முடிச் சிட்டேன்’னு சொன்னார். அவர் எழுதியிருந்த ‘வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி’ங்கிற வரிகளை நாங்க ஓகே பண்ணுன ட்யூனில் பாடும்போது, பக்காவா பொருந்திப் போச்சு. ட்யூனைக் கேட்காமல் முத்துக்குமார் சார் எழுதின வரிகளும், வரிகள் தெரியாமல் நான் போட்ட ட்யூனும் செட்டானதில் இருந்தே, எனக்கும் நா.முத்துக்குமார் சாருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்டாக ஆரம்பிச்சிடுச்சு. இந்தப் பாட்டுக்கு முன்னாடி `அந்நியன்’ படத்தோட `காதல் யானை’ பாட்டோட ரெக்கார்டிங்கிலேயே நானும் நா.முத்துக்குமார் சாரும் பழக்க மாகிட்டோம். அதுக்கப்புறம் `வெயில்’ படத்திலிருந்து ஆரம்பிச்சுப் பல படங்களில் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செஞ்சோம்.’’

`` ‘வெயில்’ படத்தோட ‘உருகுதே... மருகுதே’ பாடல் செம ஹிட்; அந்தப் பாடல் உருவான மொமென்ட்டைப் பற்றிச் சொல்லுங்க..?’’
``அந்தப் பாட்டுக்கு ஷங்கர் மகாதேவன் சாரையும் ஷ்ரேயா கோஷலையும் பாட வைக்கலாம்னு முடிவு பண்ணினேன். அதுவரைக்கும் அவங்க சேர்ந்து தமிழில் பாடுனதே கிடையாது. ரெண்டு பேரும் ஒரே நாளில், அடுத்தடுத்து வந்து பாடிட்டு, சொல்லிவெச்ச மாதிரியே, ‘இந்தப் பாட்டை எனக்குக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி’ன்னு சொல்லிட்டுப் போனாங்க. எதுக்கு இப்படிச் சொல்றாங்கன்னு எனக்கு அப்போ புரியவே இல்லை. இன்னைக்கு வரைக்கும் பல மேடைகளில் அவங்க இந்தப் பாட்டைப் பாடும்போது, கிடைக்கிற வரவேற்பைப் பார்க்கும் போதுதான், அவங்க சொன்ன வார்த்தைக்கான அர்த்தம் புரிஞ்சது. படத்தோட பாடல்களை ஷங்கர் சார் வீட்டில் கேட்டுட்டிருந்தப்போ அவர் மனைவி `உருகுதே’ பாட்டைக் கேட்டுட்டு, ‘இது என்ன படம். ரொம்ப நல்லா இருக்கே’ன்னு விசாரிச்சாங்களாம். ‘வெயில் படத்துக்காக ஜி.வி.பிரகாஷ்னு ஒரு இசை யமைப்பாளரை அறிமுகப்படுத்துறோம். அந்தப் பையன் போட்ட பாட்டுதான் இது’ன்னு ஷங்கர் சார் சொன்னப்போ, ‘ரொம்ப நல்லா இருக்கு. நிச்சயம் ஹிட்டாகிடும்’னு அவங்க சொன்னதா என்கிட்ட சொன்னார்.

“இசையமைப்பாளரில் இருந்து நடிகரானது எப்போது; எப்படி..?”
`` ‘தாண்டவம்’ என்னோட 25-வது படம். அதனால என் போட்டோவைப் போட்டு போஸ்டர் அடிச்சிருந்தாங்க. அதைப் பார்த்துட்டு ஏ.ஆர்.முருகதாஸ் சார் என்னை நடிக்கக் கூப்பிட்டார். அவரோட தயாரிப்புல மியூசிக்கை மையமா வெச்சு ஒரு படம் பண்றதுக்கான வேலைகளில் அவர் இருந்தார். முதலில் ’வேணாம்’னு சொன்னேன்; அப்புறம் அவர் கொடுத்த நம்பிக்கையில் ஓகே சொல்லிட்டேன். நானும் நஸ்ரியாவும் சேர்ந்து நடிக்கிறதா இருந்து, அப்புறம் அந்தப் படம் டிராப் ஆகிடுச்சி. ஆனால், நான் நடிக்கப்போற செய்தி வெளியில வந்ததால, நிறைய படங்களில் என்னை நடிக்கக் கூப்பிட்டாங்க. முதலில் கமிட்டான படம்தான், `பென்சில்.’ ஆனால், ரிலீஸான படம் `டார்லிங்.’

“நீங்க நடிச்ச முதல் காட்சி ஞாபகம் இருக்கா?”
‘` `பென்சில்’ படத்துல முதல் காட்சியா எடுக்கணும்னு பிளான் பண்ணின சீனே வேற. அந்த சீனுக்கான வசனத்தையெல்லாம் பேசி, பேசி ப்ராக்டீஸ் பண்ணி வெச்சுட்டு, ஷூட் போகும் போது மழை வந்திடுச்சு. உடனே `இந்த சீனை அப்புறமா எடுத்துக்கலாம்; இந்த மழையை வெச்சு ’யாரைப் போலும் இல்லா நீயும்’ பாட்டோட மாண்டேஜ் எடுத்துக்கலாம்’னு டக்குனு ப்ளானை மாத்திட்டாங்க. அப்போ நானும் ஸ்ரீ திவ்யாவும் மழையில நனையிற மாதிரி எடுத்த ஷாட்தான், நான் நடிச்ச முதல் ஷாட். முதல் சீன் நடிக்கும் போது எப்படி மழை வந்துச்சோ, அதே மாதிரி `வெயில்’ படத்தோட கம்போஸிங்கிற்காக நான் வீட்டை விட்டு வெளில கிளம்பும்போதும் மழை வந்துச்சு. மழை எனக்கு நல்ல சென்டிமென்ட்.’’
“ ’டார்லிங்’ ரிலீஸானதுக்கு அப்பறம் வந்த ரெஸ்பான்ஸ் பற்றிச் சொல்லுங்க?”
``நிறைய பேர் பாராட்டுனாங்க. குறிப்பா, நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. பாலா சாரோட டைரக்ஷனில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதுக்கப்புறம்தான் நடிப்பை சீரியஸா எடுத்துக்கிட்டேன். `சீரியஸ் ரோல்களும் பண்ணலாம்’கிற கதவை பாலா சார் ஓப்பன் பண்ணுனதுக்கு அப்புறம், ராஜீவ் மேனன் சார் `சர்வம் தாளமயம்’ கதையோடும், சசி சார் `சிவப்பு மஞ்சள் பச்சை’ கதையோடும் வந்தாங்க. இந்த மூணு படங்களிலும் என்னோட நடிப்பு நல்லா இருந்துச்சுன்னு பல பேர் பாராட்டியிருக்காங்க.’’