
கார்த்திக் டயல் செய்த எண்
லாக்டௌன் காலத்திலும் பிஸியாக இருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை லாக்டெளனிலே முடித்திருக்கிறார். எல்லோரும் ஷூட்டிங் போன நாள்களில் ஓய்வெடுத்த சிம்பு, இந்த லாக்டெளனில் ஷூட்டிங் போயிருக்கிறார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ டீம் எடுத்திருக்கும் இந்தத் திரைப்படம் ஏகப்பட்ட விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
‘’எப்பவும் போல நான் ரொம்ப பிஸிதான். என்ன, வீட்டுக்குள்ளேயே பிஸி. நிறைய ஸ்க்ரிப்ட் எழுதலாம்னு நினைச்சேன். ஆனா, நினைச்ச மாதிரி அது அவ்ளோ ஈஸியா இல்ல. சில நாள்கள் பாசிட்டிவா இருந்தது. சில நாள்கள், ‘ஐயோ, என்ன நடக்கப் போகுதோ’ அப்படிங்குற மாதிரியும் இருந்தது’’ என ஆரம்பித்தார் கெளதம் மேனன்.
‘`குறும்படத்துக்கான ஷூட்டிங்கே ரொம்ப வித்தியாசமா இருந்திருக்குமே?’’
‘`ஆமா, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சீக்வெல் எழுதிட்டு இருந்தப்போ அதுல இருந்து ஒரு சீனை ஷார்ட் பிலிமா எடுக்கலாமேன்னு தோணுச்சு. சிம்புகிட்ட ஐடியாவைச் சொன்ன உடனே ஓகே சொல்லிட்டார். த்ரிஷாவும் ‘நல்ல ஐடியா’ன்னு சொன்னாங்க. ஷூட்டிங் நான் எதிர்பார்த்த அளவுக்கு ஈஸியா இல்ல. ஏன்னா, நேர்ல இருக்குறப்போ நிறைய விஷயங்களை இன்னும் பெட்டரா பண்ணலாம். எல்லாத்தையும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டு ரிமோட்ல ஷூட் பண்றது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. இருந்தும், ரொம்ப என்ஜாய் பண்ணி வொர்க் பண்ணினோம். நினைச்சதைப் பண்ணி முடிச்சிட்டோம்கிற திருப்தி இப்போ கிடைச்சிருக்கு.’’

‘`சிம்பு, ஸ்கிரிப்ட்டைப் படிச்சதும் என்ன சொன்னார்?’’
‘`ஒரு லவ் சீன்ல இருக்குற டயலாக்ஸ் தாண்டி, இது ரொம்ப சென்சிட்டிவான விஷயம். ஸ்க்ரிப்ட் படிச்சு முடிச்சிட்டு சிம்பு, ‘ப்ரதர், இதுல சில விஷயங்கள் இருக்கு. இப்படித்தான் பண்ணுவோமா’ன்னு கேட்டார். ‘ஆமா ப்ரதர். ரெண்டு பேருமே ஒரு ஸ்பேஸ்ல இருக்காங்க. இந்த ஸ்பேஸ்ல இருக்குறவங்களால மட்டும்தான் இப்படிப் பேச முடியும். நம்ம லைஃப்ல இருக்குற எல்லோரிடமும் இப்படிப் பேசிட முடியாது. கார்த்திக் எவ்வளவு நல்லவன், இவனை எப்படி ஹேண்டில் பண்ணணும்னு தெரிஞ்ச ஜெஸ்ஸினாலதான் இதை ஹேண்டில் பண்ணவும் முடியும். அதனாலதான், ஜெஸ்ஸியோட ஃபீல் இப்படியிருக்கு. உங்களுடைய ஃபீலும் இப்படித்தான் இருக்கணும். ரொம்ப மெச்சூர்டா, நாகரிகமாதான் இருக்கும்’னு சிம்புகிட்ட சொன்னேன். ஷூட்டிங்குக்கு முன்னாடி ஒருநாள் முழுக்க ரிகர்சல் பண்ணினோம். கேமரா எங்கே செட் பண்ணலாம்னு போன்ல பேசினோம். மொத்தம் ரெண்டு நாள்ல ஷூட்டிங் முடிச்சிட்டேன். அதேமாதிரி எல்லாத்தையும் ஷூட் பண்ணி, எடிட் முடிச்சிட்டு ரஹ்மான் சாருக்கு அனுப்பினேன். அவர் பார்த்துட்டு ‘very gud and sweet. will do it’னு பதில் அனுப்பினார். அஞ்சு நாள்ல ரீ-ரெக்கார்டிங் முடிச்சி ஃபைலை அனுப்பிட்டார். மொத்தமா எல்லாத்தையும் சேர்த்து இந்தக் குறும்படம் எடுத்து ரிலீஸ் பண்ண ஒரு வாரம் ஆச்சு.’’
‘`ஆனா, குறும்படத்துக்கு சோஷியல் மீடியால கொஞ்சம் ஏடாகூடமா விமர்சனங்கள் வருதே... பார்த்தீங்களா?’’
‘`என்னோட எல்லாப் படங்களுக்கும் முதல்ல கொஞ்சம் மிக்ஸ்டான ரிவியூஸ்தான் வரும். அப்புறம்தான் பாசிட்டிவாவோ, நெகட்டிவாவோ மாறும். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’கூட இப்படித்தான். விமர்சனங்களால நான் பாதிக்கப்பட்டதில்லை. இந்தக் குறும்படத்தைப் பொறுத்தவரைக்கும் 80 சதவிகிதம் பாசிட்டிவான ரிசல்ட்தான் எனக்கு வந்திருக்கு. நான் விரும்பிப் படிக்கிற, இல்ல, எனக்குத் தெரிஞ்ச ஆறு விமர்சகர்கள் உட்பட நுணுக்கமா விமர்சனம் பண்றவங்க பாசிட்டிவாதான் சொல்லியிருந்தாங்க. 20 சதவிகிதம் நெகட்டிவ் விமர்சனங்களும் இருக்கு. ஆனா, இதுல 10 சதவிகித விமர்சகர்கள் குறும்படத்தையே புரிஞ்சிக்காம வேணும்னே ரொம்பத் தாக்கி விமர்சனம் பண்ற மாதிரி தோணுது. இதோட கதை அவங்களுக்குப் புரியல. இல்ல, அவங்க மைண்ட்ல இருக்குற நெகட்டிவிட்டியைப் புகுத்தப் பார்க்குறாங்கன்னு தோணுது. இதை பொயட்டிக்கா பார்க்காம வேறொரு மைண்ட் செட்ல பார்த்துட்டு தப்பா ப்ரொஜெக்ட் பண்றாங்கன்னு நினைக்குறேன்.’’

‘`குறும்படம் முடியும்போது கார்த்திக்குங்கிற பேர் அழிக்கப்பட்டு கெளதம் மேனன் என வருது. அப்போ, இது உங்க வாழ்க்கைல நடந்த கதையா?’’
‘`இது என்னோட கதையில்லை. கார்த்திக், ஜெஸ்ஸி ரெண்டுமே நான் க்ரியேட் பண்ணுன கற்பனை கேரக்டர்ஸ். ரெண்டு பேருக்குள்ளயும் கார்த்திக்கா, ஜெஸ்ஸியா நானிருக்கேன்கிறது மட்டும்தான் உண்மை. இதுல, எந்தவொரு ரியல் லைஃப் இன்சிடென்ட்டும் இல்ல. இந்தக் குறும்படத்தில் வர்ற இரண்டு பேருக்கான உரையாடல்ல சிலருக்கு உடன்பாடில்லாம இருக்கலாம். அதை ஏத்துக்க நான் ரெடி. ‘எல்லாரும் அவங்கவங்க எக்ஸ்கிட்ட பேசலாமா’ன்னு என்கிட்ட கேட்டாங்க. பிரிஞ்ச அந்த ரெண்டு பேருமே அந்த ஸ்பேஸ்ல இருந்தாதான் பேச முடியும். ரெண்டு பேருமே சண்டை போட்டு அசிங்கமா திட்டிப் பிரிஞ்சிருந்தா நிச்சயமா பேச முடியாது. இதுலகூட ஜெஸ்ஸி அவளோட கணவர்கிட்ட சொல்லிட்டுத்தான் கார்த்திக்கிட்ட பேசுறா. ராய் இதைத் தப்பா எடுத்துக்கிட்டு அசிங்கமா திட்டல. என்னோட வாழ்க்கைல இப்படியொரு விஷயம் நடந்திருந்தாகூட, ‘இந்த மாதிரி ஒருத்தருக்கு ஹெல்ப் தேவைப்படுது. நான் பேசிக்குறேன்’னு சொன்னா எனக்கு எந்தவொரு கோபமும் வராது. அதுக்காக நான் கையாலாகாதவன்னு அர்த்தமில்ல. இதுல இருக்குற லிமிட் மற்றும் லைன் எனக்குத் தெரியும்.’’
‘` ‘விடிவி-2’ எப்ப எதிர்பார்க்கலாம்?’’
‘’` ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ சீக்வெல்ல 80 சீன்ஸ் வரைக்கும் எழுதிட்டேன். இது முழுப் படமா வர்றப்போ, ‘ஓ இதுதான் அந்த ஷார்ட் பிலிம் சீன்’னு எல்லோர்க்கும் ஒரு விளக்கம் கிடைக்கும். இப்போ சொல்லிட்டா, கதையைச் சொல்ற மாதிரி ஆகிடும். உண்மையில இப்போ இந்தக் குறும்படம் பத்தி எல்லோரும் பேசுறதைக் கேட்டு சிரிச்சிட்டுதான் இருக்கேன். படம் வர்றப்போ ஜெஸ்ஸி வாழ்க்கையில அவரோட கணவர்கூட எந்த ஸ்பேஸ்ல இருக்கான்னு தெரிய வரும். ‘உன் ஆளு எப்படியிருக்கா’ன்னு கார்த்திக் கேட்டவுடனே ஒரு மூணு செகண்ட் கழிச்சுதான் பதில் சொல்லுவா. இது எல்லாத்துக்குமான விளக்கம். படமா பார்க்குறப்போ தெரியும்.’’

‘`படங்கள் நேரடியா ஓடிடி-ல ரிலீஸாக ஆரம்பிச்சிருக்கு... ஒரு சீனியர் இயக்குநரா இந்தப் புது டிரெண்டை எப்படிப் பார்க்கிறீங்க?’’
‘`ஓடிடி-ல முதல்ல படம் ரிலீஸாகுறதுன்றது அந்தந்தத் தயாரிப்பாளர்கள் எடுக்குற முடிவுதான். நான் ஹார்ட்கோர் தியேட்டர் ரசிகன். தியேட்டர்ல படம் பார்க்கத்தான் விரும்புவேன். சில க்ளாசிக் படங்கள் மட்டும்தான் வீட்ல பார்ப்பேன். ஓடிடி-ல பெரும்பாலும் சீரிஸ்தான் பார்ப்பேன். இனி தயாரிப்பாளர்கள் டைரக்டர்ஸ்கிட்ட கதைகேட்கும் போதே சிலதை ஓடிடி-க்கும், தியேட்டர்ஸுக்கும் பண்ணலாம்னு முடிவு எடுப்பாங்கன்னு தோணுது. எதிர்காலம் இப்படித்தான் இருக்கும். அதே நேரத்துல பிலிம் மேக்கர்ஸுக்கு ஓடிடி சரியான மாற்றுவழின்னு நினைக்குறேன். ஓடிடி-யால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். அதேநேரத்துல பெரிய ஸ்டார்ஸ் படங்களைப் பார்க்க தியேட்ட ருக்குத்தான் மக்கள் வருவாங்க. அதுல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.’’

‘`இப்போ பிஸியான நடிகராவும் ஆகிட்டீங்க... தொடர்ந்து நடிப்பீங்களா?’’
‘`சினிமால நடிக்குறது ஈஸியான விஷயமே இல்லை. ஏன்னா, கதை, களம், டீம்... இதெல்லாம் எனக்கு செட்டாகுமா, சரியா இருக்குமான்னு யோசிச்சுதான் நடிக்க ஓகே சொல்றேன். அதேநேரம் ஒரு படத்துல கமிட்டாகி அஞ்சு நாள் வரைக்கும் நடிச்சிட்டு, ‘எனக்கு செட்டாகல, ஸாரி’ன்னு சொல்லிட்டும் வந்திருக்கேன். இப்போ, ஜி.வி.பிரகாஷ்கூட பண்ணிட்டு இருக்குற படத்தோட டைரக்டர் எனக்கு நல்லா தெரியும். எனக்குத் தெரிஞ்ச ரெண்டு பேரும், ‘இதை நீ பண்ணுனா நல்லாருக்கும்’னு சொன்னாங்க. அதனால அந்தப் படத்துல நடிச்சிருக்கேன். எனக்கு அதுல நல்ல அனுபவம் கிடைச்சது. இந்த மாதிரி நல்ல அனுபவத்துக்காக மட்டுமே சில படங்கள்ல நடிக்க விரும்புறேன்.’’