சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு அக்கா!”

 பவானி
பிரீமியம் ஸ்டோரி
News
பவானி

பாசம் பொழியும் ஜி.வி.பி தங்கை

ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானி, ‘க/பெ ரணசிங்கம்’ படத்தில் விஜய் சேதுபதிக்குத் தங்கையாக நடித்திருக்கிறார். சினிமாவில் நியூ என்ட்ரியாக நுழைந்திருக்கும் பவானியிடம் பேசினேன்.

நடிப்பு மேல எப்போ ஆசை வந்தது..?

``நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சு, நானே ஆசைப்பட்டுத் தேடிப்போன ஒரு விஷயம். அது `க/பெ ரணசிங்கம்’ படம் மூலமாக இப்போ நடந்திருக்கு. முதல் படமே ரொம்ப அழுத்தமான கதைக்களத்தோடு கிடைச்சதில் ரொம்பவே சந்தோஷம். முதலில் நான் சினிமாவில் உதவி இயக்குநராகத்தான் வேலை பார்த்திட்டு இருந்தேன். என்னோட காலேஜ் புராஜெக்டுக்காக உதவி இயக்குநரா வேலை பார்த்திட்டிருந்த சமயத்தில், என்னோட வேலை பார்த்த மற்ற உதவி இயக்குநர்களோட குறும்படத்தில் என்னை நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்படி நடிக்க ஆரம்பிச்சுத்தான் எனக்கு நடிப்பு மேல ஆர்வம் வந்தது. அதுக்கப்புறம், நடிப்பை முறைப்படி கத்துக்கணும்னு முடிவு பண்ணி கூத்துப்பட்டறை கலைராணி மேடம்கிட்ட க்ளாஸ் போனேன். `க/பெ ரணசிங்கம்’ பட இயக்குநர் விருமாண்டி, கலைராணி மேடம்கிட்ட புதுமுக நடிகை வேணும்னு கேட்டிருக்கிறார். அவங்க என்கிட்ட சொல்லி இந்தப் படத்தோட ஆடிஷனுக்கு நான் போனேன். முதலிலேயே, ‘இந்தப் படத்தில் நீங்க ஹீரோயின் கிடையாது. ஆனால், உங்களுக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர்’னு சொல்லிட்டு படத்தோட ஒன்லைனையும் சொன்னார்.’’

 பவானி
பவானி

நீங்க சென்னைப் பொண்ணு; இந்தப் படத்தில் ‘மாயி’ங்கிற ராமநாதபுரப் பெண்ணாக நடிக்கிறதில் சிரமங்கள் இருந்துச்சா..?

``நான் சென்னையிலேயே பிறந்து, வளர்ந்தனால என் ஸ்லாங்கே வித்தியாசமா இருக்கும். லாங்குவேஜும், ஸ்லாங்கும் கத்துக்க வேண்டியிருந்துச்சு. ஷூட்டிங் போகுறதுக்கு முன்னாடியே சென்னையில் இருக்கும்போது, இயக்குநரோடு உட்கார்ந்து ஸ்லாங்கைப் பேசிப் பழகுறது; ராமநாதபுரப் பெண்கள் பேசுற வீடியோக்களைப் பார்க்கிறதுன்னு சில விஷயங்கள் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம், என் போர்ஷனோட ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு சில நாள்கள் முன்னாடியே அந்த ஊருக்குப் போய், அங்கு இருக்கிற பெண்கள்கிட்ட பேசிப் பழக ஆரம்பிச்சேன். அவங்களோட பாடி லாங்குவேஜ் அண்ட் ஸ்லாங்கை நேரில் பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் ஈசியா இருந்துச்சு.’’

 “ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு அக்கா!”

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷோடு நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது..?

``விஜய் சேதுபதி சார் ரொம்ப நல்ல டீச்சர். நமக்கு ஏதாவது ஒரு சந்தேகம்னு அவர்கிட்ட போய்க் கேட்டால், விளக்கமாப் பதில் சொல்லுவார். அதில் நம்ம குழப்பங்கள் எல்லாமே போயிடும். அவரோடு நடிச்ச முதல் சீனே போராட்ட சீன்தான். அதை முடிச்சிட்டு அன்னைக்கு நைட்டே எனக்கும் அவருக்குமான ஒரு முக்கியமான காம்பினேஷன் சீன் எடுத்தாங்க. தான் நல்லா நடிச்சிட்டுப் போயிடுவோம்னு நினைக்காமல், தன்னோடு நடிக்கிறவங்களையும் நல்லா நடிக்க வைக்கணும்னு நினைக்கிறவர் விஜய் சேதுபதி சார். அந்த சீன் நடிச்சு முடிச்சதும், ‘ரொம்ப நல்லாப் பண்ணுனீங்கம்மா’ன்னு சொன்னார்.

ஐஸ்வர்யா மேம் ரொம்ப அனுபவமுள்ள நடிகை. நான் தொடர்ந்து அவங்களோட படங்களைப் பார்த்துட்டு இருந்ததனால, அவங்களோடு நடிக்கும்போது நிறைய விஷயங்கள் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். ஷூட்டிங் ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே ஐஸ்வர்யா மேம், எனக்கு அக்காவா மாறிட்டாங்க. நான் சாப்பிடுறதுக்குக் கொஞ்ச லேட்டானாலும், ‘பவானி, சாப்பிடாம என்ன பண்ணிட்டிருக்க; சீக்கிரம் வந்து சாப்பிடு’ன்னு உரிமையா பேச ஆரம்பிச்சிட்டாங்க.’’

உங்களோட முதல் படம் தியேட்டரில் ரிலீஸாகலைன்னு வருத்தமிருக்கா..?

“நாம நடிக்கிற முதல் படம்; தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சிக்கு கேங்கா போய் மாஸ் காட்டலாம்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனால், இப்போ இருக்கிற நிலைமைக்கு ஏற்றமாதிரி படத்தை ஓடிடியில ரிலீஸ் பண்ணியிருக்காங்க. நான் ஆரம்பத்தில் இருந்தே எல்லா ஓடிடியையும் பாலோ பண்ணிட்டிருக்கேன். மற்ற மொழிகளில் ரிலீஸாகுற வெப் சீரிஸ், படம்னு நல்ல, நல்ல கன்ட்டென்ட் உள்ள படங்களா தேடித்தேடிப் பார்க்கிற பழக்கம் எனக்கு இருக்கு. இப்போ நம்ம படமும் ஓடிடியில் வந்திருக்கிறனால, உலகம் முழுக்க இருக்கிறவங்க பார்ப்பாங்கன்னு நினைக்கிறப்போ மகிழ்ச்சியா இருக்கு.’’

யாரோட இயக்கத்தில் நடிக்கணும்னு ஆசை..?

``வெற்றிமாறன் சாரோட படத்தில் நடிக்கணும்னு ரொம்ப ஆசை. எனக்கு அவரோட படங்கள் எல்லாமே ரொம்பப் பிடிக்கும். என் அண்ணாவும் அவரும் `பொல்லாதவன்’ படத்துல இருந்து இப்போவரைக்கும் ஒண்ணா ட்ராவல் பண்ணிட்டு இருக்கிறதால, வெற்றி சாரைப் பற்றி அண்ணா நிறைய சொல்லியிருக்கார்.”