
சில நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து எடுத்த முயற்சி அது.
கமல்ஹாசனுடன் சினிமா, அரசியல், காதல் என எதைப்பற்றியும் பேசலாம். காலில் ஏற்பட்ட விபத்துக்காக அறுவைசிகிச்சை செய்து வீடு திரும்பியவருக்கு திடீரெனக் கையில் காயம். இப்போது மீண்டும் சிகிச்சை என ஓய்வில் இருப்பவரைச் சந்தித்துப் பேசினேன்.
‘`50 வருடங்கள் கழித்து நீங்கள் படித்த சர். முத்தையா செட்டியார் பள்ளிக்குச்சென்று நண்பர்களுடன் ரீ-யூனியன் நடத்திய அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்.’’
“சில நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து எடுத்த முயற்சி அது. பள்ளி நாள்களை தெளிவில்லாத நாள்கள் என்று சொல்வதா, தெளிவான நாள்கள் எனச் சொல்வதா என்று தெரியவில்லை. மக்கு, படிப்பே வராது, பேக்பெஞ்சர்ஸ் என ஒதுக்கப்பட்டவர்களெல்லாம் அன்று சாதனையாளர்களாக நெஞ்சை நிமிர்த்தி நின்றது பெருமையாக இருந்தது. அந்தப் பின்வரிசை மாணவர்களில் ஒருவன்தான் நான்.

திருவல்லிக்கேணி இந்து ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த எனக்கு டிசி கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார்கள். என் அப்பா பதைபதைத்துப் போய்விட்டார். யார் யாரையோ பிடித்து என்னை இந்தப் பள்ளியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் நரசிம்மன், ‘நீ நடிகன் என்று தெரியும். அதனால் இந்தப் பள்ளியில் நல்லவனாகவாவது நடி’ என்று சொல்லி என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டார். குப்பு, ஐவன் மார்ஷல், ஏகே விஜயன் என நாங்கள் நான்கு பேர்தான் நெருங்கிய நண்பர்கள். குப்பு படிப்பில் ஆர்வம் உள்ளவர். ஐவன் மார்ஷல் ஒரு சீனர். ஏற்காடு ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தவர் வீட்டில் திடீரெனப் பொருளாதாரச் சரிவு ஏற்பட புரசைவாக்கம் முத்தையா பள்ளிக்கு வந்துவிட்டார். ஏகே விஜயன் ஒரு டாக்டரின் மகன். ஒரே கிளாஸில் பலமுறை படித்தவர் என்பதால் எங்களைவிட நான்கு வயது மூத்தவர். நாங்கள் நான்கு பேரும்தான் ஒன்றாக இருப்போம். ஏகே விஜயன்தான் எங்களுக்கு லீடர். அவரிடம் இருந்துதான் ஃபேஷன் கற்றுக்கொண்டேன். ‘16 மேகஸின்’ என இசை பற்றி ஒரு புத்தகம் படிப்பார். அப்படியெல்லாம் ஒரு பத்திரிகை இருக்கிறது என்பதே அவர்மூலம்தான் எங்களுக்குத் தெரியும். குப்பு தமிழ்சினிமாவின் விமர்சகர். ஒவ்வொரு படத்தைப் பற்றியும் நச் ஜட்ஜ்மென்ட் சொல்லிவிடுவார். நான் ஆங்கில சினிமாக்கள் பார்ப்பேன். குப்புவைத் தவிர நாங்கள் மூன்று பேரும், என்ன செய்தால் இன்று பள்ளிக்கூடத்துக்கு லீவ் விடுவார்கள் என்று யோசிப்பவர்கள். பள்ளியைக் கொளுத்திவிடலாமா, ஃப்யூஸைப் பிடுங்கிவிடலாமா, தலைமை ஆசிரியரை ஏதாவது செய்துவிட்டால் லீவ் விட்டுவிடுவார்களா என்றுகூட யோசித்திருக்கிறோம். அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது ‘அய்யய்யோ நரசிம்மன் போயிட்டாரே’ என்று நண்பன் ஒருவன் அழ ஆரம்பிக்க, நான் அதை இன்னும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோய்விட்டேன். ‘பாகப்பிரிவினை’ படத்தில் சிவாஜி புரண்டு புரண்டு அழுவாரே அதுபோல் நான் ‘நரசிம்மா போயிட்டியா’ என ஒப்பாரிவைத்து அழ ஆரம்பிக்க, நண்பர்களெல்லாம் சிரிக்க, நான் இன்னும் என்னவெல்லாமோ சொல்லி அழுது நடித்துக்கொண்டிருந்தேன். திடீரென சிரிப்புச் சத்தம் நின்றுவிட்டது. நிமிர்ந்து பார்த்தால் தலைமையாசிரியர் நரசிம்மன் நிற்கிறார். ‘what kamal... Practicing art is it?’ எனக் கேட்டவர் என்னை அவருடைய அறைக்கு அழைத்துச்சென்றார். ‘அய்யோ எல்லாம் போச்சு’ என நினைத்துக்கொண்டே போன என்னை அவர் ஹேண்டில் செய்தவிதம் பயங்கர ஆச்சர்யம். ‘I understand the humour in it. ஆனா, பெரியவங்களைப் பேர் சொல்லிப் பேசக்கூடாது. நான் உங்களையெல்லாம் வாடா, போடான்னு சொல்லிப் பார்த்திருக்கியா?’ என்று சொல்லிவிட்டு என்னை அனுப்பிவிட்டார். நான் நடிகனான பிறகு, அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி வந்தது. உண்மையாகவே எனக்குத் தொண்டை அடைத்துப்போய்விட்டது.
இந்த நரசிம்மன் சார் சாதாரணமானவர் அல்லர். ஆங்கில கிராமர் புத்தகங்களுக்கு ரென் அண்ட் மார்ட்டின் புத்தகம்தான் அதிக பிரபலம். அதன்பிறகு ஆங்கில கிராமர் புத்தகத்துக்குப் பெயர்போனது ஷெப்பர்டு மற்றும் நரசிம்மன் எழுதிய புத்தகம்தான். அதேபோல் எங்கள் பள்ளியின் ஆசிரியர் கேடிஜியும் என் வாழ்வில் மறக்கமுடியாத ஆசிரியர். பல சினிமாக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல உலகத்திரைப்படங்களைப் பார்க்கச் சொல்வார்.’’

‘`காதலர் தினம் வருகிறது. காதல் இளவரசன் என்று அழைக்கப்பட்ட கமல்ஹாசன் இன்றைய காதலர்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன?’’
“செக்ஷுவல் உறுப்பு என்பது காலுக்கு இடையில் இருப்பதாகச் சிலர் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது இரு காதுகளுக்கு இடையில் இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டால் எல்லாம் சரியாகிவிடும். உடல்தாண்டியது காதல் என்பதை இந்தத் தலைமுறை வெகுசீக்கிரத்தில் புரிந்துகொள்ளும் என நினைக்கிறேன். அதற்கான சாத்தியங்கள் இப்போது நிறையவே இருக்கின்றன.’’
‘`5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வைத் தமிழக அரசு ரத்து செய்திருக்கிறதே?’’
“வரவேற்கவேண்டியது. பல நாடுகள் தேர்வுகளே இல்லாத கல்விமுறையை நோக்கிச்சென்றுகொண்டிருக்கும்போது 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குத் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டது நம் கல்விமுறையைப் பின்னோக்கிக் கொண்டுசெல்லும் செயல். என்னைப் பொறுத்தவரை தேர்வுகளை மொத்தமாகவே ரத்து செய்யவேண்டும். பல நாடுகளில் 16 வயதுவரை எந்தப் பரீட்சையும் இல்லை. அதை நோக்கித்தான் நாம் செல்ல வேண்டும். பள்ளிகளில் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள், வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். திறன் வளர்ப்புக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.’’
‘`சமூக வலைதளங்களில் கமல்ஹாசனின் கருத்துகளுக்குப் பெரிதாக எதிர்வினைகள் வருவதில்லை. ஆனால், ரஜினிகாந்த் எதுவும் சொல்லிவிட்டால் கடுமையாக அவர் விமர்சிக்கப்படுகிறார். இதையெல்லாம் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
“என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை ஏற்றுக்கொண்டால் மேம்படுவோம். ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் மேம்படமுடியாது. என்னைச் செதுக்கியவை எல்லாம் விமர்சனங்கள்தான். என்னுடைய நடிப்பையெல்லாம் யாரும் ஆரம்பத்தில் வரவேற்கவில்லை. ‘எம்ஜிஆர், சிவாஜி இருக்கும்போது எதை நம்பி நீயெல்லாம் ஹீரோவா வந்த?’ என, நான் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பில் என்னை ஒரு நிருபர் கடுமையாக விமர்சித்தார். நான் கோபப்படவில்லை. அவரை ஆள்வைத்து அடிக்கவில்லை. அவர் சொன்னதில் இருக்கும் உண்மையைப் புரிந்துகொண்டேன். என்னை பாலசந்தர் மாதிரியான ஒரு இயக்குநரிடம் கொண்டுபோய் ஒப்படைத்துவிட்டேன். இப்படித்தான் கமல்ஹாசன் என்கிற நடிகன் உருவானான். என்னைத் தரம்தாழ்ந்து விமர்சித்தவரை, மீம் போட்டவரை என்னைப் பாராட்டி மீம் போட வைக்கவேண்டும் என்றுதான் நான் யோசிப்பேன்.’’
‘`தி.மு.க-வின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்... மக்கள் செல்வாக்கை நம்பாமல் அரசியல் ஆலோசகர்களை நம்புவது சரியா?’’
“அது அவர்களுடைய தேர்வு. மக்களில் ஒருவர்தானே ஆலோசகர்களும். பிரசாந்த் கிஷோர் ஒரு கெட்டிக்காரர். மக்கள் பலம் இருக்கக்கூடியவர்களுக்கு பலம் கூட்டக்கூடியவர். அவர்களுக்கு என் வாழ்த்துகள். அதேசமயம் அவர் கணக்குப்பிள்ளை மாதிரியான ஒருவர்தான். கணக்குப்பிள்ளையை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு உங்களிடம் செல்வம் இருக்கவேண்டும். அப்போதுதான் கணக்குப்பிள்ளைக்கு வேலை இருக்கும். செல்வத்தைக் கணக்குப்பிள்ளைகள் ஈட்டித்தரமாட்டார்கள்.’’
‘`டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அடிக்கடி குறிப்பிட்டுப் பேசுகிறீர்கள். அவர்தான் அரசியலில் உங்களுக்கு முன்மாதிரியா?’’
‘`நன்மை செய்கிறவர்கள் எனக்குப் பிடித்தவர்களாக மாறிவிடுகிறார்கள். அவ்வளவுதான். அவர்கள் இடது, வலது, மையம் என யாராக இருந்தாலும் சரி. அர்விந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன், நவீன் பட்நாயக் என நம் நாட்டிலேயே நல்ல முன்மாதிரிகள் இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை அப்படியே அப்பட்டமாக நாம் காப்பியடிக்கலாம்.’’
‘` ‘இந்தியன் -2’, ‘தலைவன் இருக்கிறான்’ அப்டேட்ஸ் சொல்ல முடியுமா?’’
‘`வேகவேகமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த மாத இறுதியில் மீண்டும் நான் நடிக்கப்போக வேண்டும். ஷூட்டிங் முடிந்தும் டெக்னிக்கலாக நிறைய வேலைகள் இருக்கின்றன. ஓடி ஓடிச் செய்த வேலையை உட்கார்ந்து படமாகப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் உங்களைப்போலவே எனக்கும் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்தியனில் பார்த்த வேகத்தைவிட இரண்டு மடங்கு அதிவேகமாக ஷங்கர் இயங்கிக்கொண்டிருக்கிறார். ‘தலைவன் இருக்கிறான்’ படத்துக்கான வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.’’