சினிமா
தொடர்கள்
Published:Updated:

“எதிரிகளிடம் ஜெயிச்சிட்டேன்... நண்பர்களிடம் தோத்துட்டேன்...”

சிநேகன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிநேகன்

என்னைப் பொறுத்தவரை சூர்யா சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை.

பாடல் வரிகளால் மட்டுமல்லாது, தன் பாசமான கட்டிப்பிடிகளாலும் பிரபலமானவர் சிநேகன். மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து மாநிலச் செயற்குழு உறுப்பினராக அரசியலிலும் பரபரப்பாக இருப்பவர்... அடுத்து நாயகனாக ‘பொம்மி வீரன்’ படத்தில் நடித்து முடித்து ரிலீஸ் வேலைகளில் மூழ்கியிருந்தவரை, சாலிகிராமத்தில் அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

‘`எழுத்து, நடிப்பு, அரசியல் இவற்றை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’’

‘`நான் தினமும் இறைவனிடம் கேட்பது `எனக்கு 24 மணி நேரம் போதவில்லை, 48 மணி நேரம் கொடுங்கள்’ என்றுதான். எனக்கு வேலை செய்வது ரொம்பப் பிடிக்கும். நீங்க சொன்னதெல்லாம் போக, நான் வேறு பல வேலைகளும் பார்க்கிறேன். நான் ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கர். கிட்டத்தட்ட 41 நாடுகள் சுற்றி வந்திருக்கிறேன். ‘சிநேகம்’ என்கிற பவுண்டேஷன் வைத்திருக்கிறேன். அதில் 13 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறேன். 22 திருநங்கைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கக்கூடாது என்று நினைப்பவன். நான் வாய்ப்புத் தேடிய காலத்தில் நிறைய நேரத்தை வீணாக்கியிருக்கிறேன். அதை எல்லாம் சரிசெய்யக்கூடிய ஒரு காலகட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்.’’

“எதிரிகளிடம் ஜெயிச்சிட்டேன்... நண்பர்களிடம் தோத்துட்டேன்...”

`` `பொம்மி வீரன்’ படம் என்ன நிலையில் இருக்கிறது... ரிலீஸ் எப்போது?’’

‘`என்னுடைய தயாரிப்பில், நானே நடித்திருக்கும் படம் ‘பொம்மி வீரன்.’ அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இதுபோக மூன்று படங்களில் நாயகனாக நடிக்கிறேன். ஏழு படங்களுக்குப் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.’’

‘`எப்ப திருமணம், ஏன் இவ்வளவு தாமதம்?’’

‘`பட ரிலீஸ் வேலைகள், அப்பாவுக்காக ஊரில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த இரண்டும் முடிந்த பிறகு, திருமணம்தான். அம்மா இல்லாததாலும், எடுத்துச் செய்ய ஆட்கள் இல்லை என்பதாலும் திருமணம் இத்தனை நாள்கள் தள்ளிப் போய்க்கொண்டி ருந்தது. இத்தனை வருடங்களில் துரோகங்களால் நிறைய சொத்துகளை இழந்திருக்கிறேன். நிம்மதியை இழந்திருக்கிறேன். உண்மையில் நான் ஒரு ஏமாளி. எதிரிகளிடம் ஜெயிச்சிட்டேன். நண்பர்களிடம் தோத்துட்டேன். என்னுடைய வாழ்வை புரிந்து கொண்டு என்னை ஏற்றுக்கொள்ளக் கூடிய துணைவியைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.’’

‘`டயனமிக் திருமண முயற்சிகள் இன்னும் தொடர்கிறதா?’’

‘`தேவைப்படும் இடத்தில்தான் அதைச் செய்கிறோம். எனக்குப் பெரியாரைப் பிடிக்கும். ஆனால், திராவிடக் கட்சிகளில் இல்லை. இதுவரை 23 மறுமணங்களைச் செய்து வைத்திருக்கிறேன். ஏறத்தாழ 41 ஜாதிமறுப்புத் திருமணங்கள் செய்து வைத்திருக்கிறேன். என்னுடைய ஜாதகம் உட்பட 5000க்கும் அதிகமான ஜாதகங்களைக் கொளுத்தி யிருக்கிறோம். நன்றாக இருக்கும்வரை சேர்ந்து வாழப்போகிறோம். இல்லை என்றால் இன்னொரு வாழ்க்கையைப் போராடி ஏற்றுக் கொள்ளப் போகிறோம் அவ்வளவுதானே. இதையெல்லாம் எடுத்துச் சொல்லாத சமூகம், தொட்டாலே கற்பு போய்விடும் என்று சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இதையெல்லாம் புரட்சியாக நினைக்கவில்லை. இது மானுட அன்பின் வெளிப்பாடு.’’

``இப்போது எப்படியிருக்கிறது அ.தி.மு.க?’’

‘`அம்மாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்வார்கள் என்று நினைத்தோம். ஆனால், அது முப்பிரிவுகளாகியது. இன்று அது மக்கள் விரோத இயக்கமாக மாறிவிட்டது.

“எதிரிகளிடம் ஜெயிச்சிட்டேன்... நண்பர்களிடம் தோத்துட்டேன்...”

எம்.ஜி.ஆருக்குப் பிறகு, ஜெயலலிதா வந்ததால்தான் அந்தக் கட்சி நிலைபெற்று நின்றது. மறுபடியும் ஒரு நடிகர் அந்த இடத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் என ஜெயலலிதா இறந்த நாள் அன்று இரவு அஜித், விஜய், ரஜினி, கமல் என எல்லோருடைய பெயரும் அடிப்படுகிறது. ஒவ்வொரு குழுவும், தனித்தனியாகப் பேசிக்கொண்டிருக்கும்போது இந்தக் குழுக்களை ஒன்றாகச் சேர்ப்பதற்கு யாராவது ஒருவர் தலைமை ஏற்க வேண்டியிருந்தது. அப்படி அக்கறையுள்ள நபர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். எல்லோரையும் அழைத்துப்பார்க்கப் பேசியபோது, ‘நான் கமலை அழைக்கவா?’ என்று கேட்டேன். எல்லோரும் என்னை வேடிக்கையாக, கேளிக்கையாகப் பார்த்துச் சிரித்தார்கள். ‘ரஜினிகூட அரசியலுக்கு வருவார். கமல் வருவாராங்க’ என்று கேட்டார்கள். `அவருக்குள்ள இருக்கிற சிவப்பு சித்தாந்தம் எனக்குத் தெரியும். அதைப்பற்றி நானும், அவரும் நிறைய பேசியிருக்கிறோம். என்றாவது ஒரு நாள் கமல் அரசியலுக்கு வருவார். அவரை அழைத்துப் பார்ப்பதில் தவறில்லை’ என்றேன். மூன்று நாள்கள் கழித்துச் சொல்கிறோம் என்று உயர்மட்டக் குழுவில் இருந்தவர்கள் சொன்னார்கள். மூன்று நாள்களில் எல்லாமே மாறிப்போய்விட்டது.’’

‘`மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தது, அ.தி.மு.க மீதான வெறுப்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவா?’’

‘`ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்ததும், அரசியலே வேண்டாம் என விலகியிருந்த நேரத்தில்தான், கமலுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. மக்களுக்கான அரசியலை யார் முன்னெடுத்தாலும் அவர்களுடன் நான் இருப்பேன்.’’

‘`உங்களுடைய உண்மையான சித்தாந்தம்தான் எது?’’

‘`திராவிடம் என் வீடு, தேசியம் என் நாடு. இது இரண்டையும் விட்டுவிட முடியாது. அதற்கு நடுவில் இருக்கிற சிவப்பு சித்தாந்தம் உழைப்பவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவது. அதனால் நான் எப்போதும் மய்யம்தான். தலைவன் சொல்கிற வழிதான் என்னுடைய வழியும். எனக்குக் கிடைத்த மய்யம் சரியான மையமாக இருப்பதாக நினைக்கிறேன்.’’

‘`கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் முடிவுகள் வெளியானபோது உங்களின் மனநிலை எப்படி இருந்தது?’’

‘`எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நிறைய பேர் என்னிடம் வாக்கு எண்ணிக்கையில் ஏதோ பிழை நடந்திருப்பதாகச் சொன்னார்கள். எங்களுடைய கிராமம் என்று சொல்கிற இடத்திலேயே எங்களுக்கான வாக்குகள் இல்லை. அந்தக் குழப்பத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. உறவுகள், நண்பர்கள் என எனக்கு யாரும் கிடையாது. கமல் என்கிற முகத்தோடு சென்றுதான் நின்றேன். 25,000 வாக்குகள் எனக்குக் கிடைத்தது. அதுவே மகிழ்ச்சி அளிக்கிறது.’’

‘`சமீபத்தில் நடிகர் சூர்யாவின் கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு இரண்டுமே இருக்கின்றன. இதில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?’’

‘`என்னைப் பொறுத்தவரை சூர்யா சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை. ஒரே மாதிரியான கல்வியைக் கொடுக்கத் தெரியாத அரசுக்கு, ஒரே மாதிரியான தேர்வைக் கொடுக்கவும் தகுதியில்லை. யானைக்கு வாழைமரம் ஏறப் பழக்கிக் கொடுக்கிறார்களோ என்று பயமாக இருக்கிறது. யானை தேர்வாகவும், வாழைமரம் எங்களின் பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள்.’’