
சைக்கோவைக் கண்டுபிடிக்கிற கதாபாத்திரம் என்னுடையது.
பார்த்ததும் காதல், ஃபாரீன்ல ஒரு சாங், லவ் ஃபெயிலியர், பார்ல ஒரு சாங்னு நடிச்சுட்டு இருந்தது எனக்கே போர் அடிச்சது. அப்போ மக்களுக்கும் போர் அடிச்சிருக்குமே! அதான் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குற படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். அதுலயும் `சைக்கோ’ ரொம்ப வித்தியாசமா, மிரட்டலா இருக்கும்” புத்தாண்டை நம்பிக்கையுடன் தொடங்கி யிருக்கிறார் `நடிகர்’ உதயநிதி. ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் அரசியல் எனச் சுழன்று கொண்டிருந்தவரை, ஓர் இரவில் அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்...
யார் சைக்கோ?
“மிஷ்கின் சார்தான் சைக்கோ (சிரிக்கிறார்). நான் சைக்கோ கிடையாது. சைக்கோவைக் கண்டுபிடிக்கிற கதாபாத்திரம் என்னுடையது. ராஜ்னு ஒருத்தர் சைக்கோவா பண்ணியிருக்காப்ல. அவர் கதாபாத்திரமும், நடிப்பும் நிச்சயம் பேசப்படும். ஒரு உண்மையைச் சொல்லணும்னா, மிஷ்கின்தான் என்னை அறிமுகப்படுத்துறதா இருந்தது. எனக்காக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட்தான் `யுத்தம் செய்.’ அது தொடங்குற நேரத்தில்தான் `ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஸ்க்ரிப்டும் வந்தது. முதல் படம் கொஞ்சம் ஜாலியா, கலர்ஃபுல்லா பண்ணலாம்னுதான் `ஓகே ஓகே’ பண்ணினேன். ஒருவேளை, `யுத்தம் செய்’ என் முதல்படமா வந்திருந்தால் என் கிராஃபே மொத்தமா மாறியிருக்கும்.”
பார்வைக் குறைபாடுள்ள கதாபாத்திரம். அதற்காக ஏதேனும் ஹோம் ஒர்க் பண்ணுனீங்களா?
“ஹோம் ஒர்க்லாம் நானே ஆர்வமா பண்ணினேன். `அந்தாதூன்’ படத்துல உபயோகிச்ச லென்ஸை மும்பையிலிருந்து வரவெச்சு, மாட்டிக்கிட்டு நடந்து, கீழே விழுந்து, வீடியோஸ்லாம் எடுத்து மிஷ்கின் சாருக்கு அனுப்பி வெச்சேன். அவர் ‘ஐயோ, இதெல்லாம் வேணாம்’னு ரெண்டு வார்த்தையில் சொல்லிட்டுப் போயிட்டார். ஆனால், அதற்கு பதில் பார்வைக் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி ஒருத்தரை, கூடவே இருந்து கவனிச்சேன்.

அவங்க உடல்மொழி எப்படி இருக்கும், அவங்க எப்படி ஸ்டிக்கைப் பிடிப்பாங்க, போன் எப்படி யூஸ் பண்ணுவாங்க, எப்படி இன்னொருத்தரைப் பிடிச்சு நடப்பாங்கன்னு எல்லா விஷயங்களையும் அவரைப் பார்த்து, அவர்கிட்ட கேட்டு புரிஞ்சுகிட்டேன். என் கதாபாத்திரத்தின் பெயர் கௌதம். அவன் ஒரு கிடாரிஸ்டும் கூட. அதனால், என்னை கிடார் கத்துக்கச் சொன்னார். நானும் முயற்சி பண்ணேன். கத்துக்க முடியல. நல்ல வேளையா ஷூட்டிங்கின்போது கிடார் வாசிக்கத் தெரிஞ்ச பசங்க ரெண்டு பேர் இருந்தாங்க. அவங்ககிட்டே ஒவ்வொரு ஷாட்டுக்கும் எப்படி ஸ்ட்ரிங்ஸ் பிடிக்குறதுன்னு கேட்டுத் தெரிஞ்சுகிட்டு சரியா பண்ணிட்டேன்.”
கௌதம் கதாபாத்திரத்தில் நடித்தது எவ்வளவு சவாலாக இருந்தது?
“ரொம்ப கஷ்டமாதான் இருந்தது. ஷுட்டிங்கின்போது என் காதுகள்தான் என் கண்கள்ன்ற அளவுக்கு மாறிட்டேன். மிஷ்கின் சாரே எப்படி நடிக்கணும்னு சொல்லிக் கொடுத்துடுவார். அதை நாம பண்ணுனாலே போதும். கொஞ்சம் ஓவரா நடிச்சுட்டாலும், `ஏம்மா இவ்ளோ நடிக்குற, வேணாம்மா’ன்னு பதறிடுவார். ஒவ்வொருநாள், நாம இன்னைக்கு வேற லெவல்ல நடிச்சுடணும்னு தயாரா இருப்போம். அன்னைக்கு நம்ம கால்களுக்கு ஷாட் வெச்சிட்டுக் கிளம்பிடுவார். ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும், எல்லோரையும் உட்கார வெச்சு, நடிகர்கள்ல ஆரம்பிச்சு லைட்மேன் வரைக்கும் எல்லோரையும் சொல்லிக் கைத்தட்டல் வாங்கிக்கொடுப்பார். பண்ணுனது ரொம்பப் பிடிச்சுப்போச்சுன்னா, முத்தம் கொடுப்பார். அப்படி நானும் ரெண்டு முறை அவர்கிட்ட முத்தம் வாங்கியிருக்கேன்.”
ராம், நித்யா மேனன், அதிதி ராவ்னு படத்தில் எல்லோரும் பர்ஃபாமர்ஸா இருக்காங்களே. எப்படி சமாளிச்சீங்க?
“ராம் சார், காவல்துறை அதிகாரியா நடிச்சிருக்கார். தாடியெல்லாம் ஷேவ் பண்ணி, ஆளே வேற மாதிரி இருப்பார். நித்யா கூடதான் எனக்குப் படம் முழுக்க டிராவல். அவங்க கதாபாத்திரம், ஒரு சவாலான கதாபாத்திரம். இயக்குநர் கதை சொன்னப்போ, `எனக்கு ஹீரோயின் ரோல் வேணாம், இந்த ரோல்தான் வேணும்’னு கேட்டு வாங்கியிருக்காங்க. அதிதியை ஷூட்டிங்ல மூணு நாள்தான் பார்த்தேன். எங்கள் காம்பினேஷன் குறைவு. இவங்க எல்லோரையும்விட இந்தப் படத்தில் சர்ப்ரைஸ் யாருன்னா, சிங்கம்புலி அண்ணன்தான். இதுவரைக்கும், காமெடி பண்ணிக்கிட்டு இருக்குறதாதானே அவரைப் பார்த்திருக்கோம். இந்தப் படத்தில், எனக்கு அண்ணன் மாதிரியான கதாபாத்திரம். சினிமாவுலகில் எனக்குப் புதுசா கிடைச்சிருக்கிற அண்ணன் அவர். ஷூட்டிங்லாம் முடிஞ்ச பிறகு `மிஸ் யூ தம்பி’ன்னு மெசேஜ்லாம் அனுப்புவார். ரொம்ப அன்பான மனுஷன்!”
இளையராஜாவின் இசை?
“அது எந்த நடிகருக்குமே பெரிய கனவா இருக்கும். எனக்கு இவ்ளோ சீக்கிரம் அது அமைஞ்சதற்குக் காரணம் மிஷ்கின் சார் மட்டும்தான். படத்தின் மூணு பாடல்களும் எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி வந்திருப்பதில் ரொம்ப சந்தோஷம். நான் இன்னும் இளையராஜா சாரைப் பார்க்கலை. ஆனால், அவர் படம் பார்த்துட்டு, `உதய் தம்பி ரொம்ப நீட்டா பண்ணிருக்காப்ல’னு சொன்னதா, மிஷ்கின் சார் சொன்னார்.”
சினிமா - அரசியல், எப்படி பேலன்ஸ் பண்றீங்க?
“முழுநேர அரசியலுக்கு வந்து ஆறுமாசம் ஆகுது. எல்லா விஷயங்களையும் பக்காவா ப்ளான் பண்ணிடுறதுதான் பேலன்ஸ் பண்ணக் காரணம். என்கிட்ட ரெண்டு குழுக்கள் ஒர்க் பண்ணுது. சினிமாவுக்கு ஒரு குழு, அன்பகத்தில் ஒரு குழு. அவங்களுக்குள்ளே ஒரு கோ-ஆர்டினேஷன் இருக்கும். அதனால், பெரிய கஷ்டம் இல்லை. இதுதவிர, முரசொலி நிர்வாக இயக்குநர், படம் விநியோகம்னு மற்ற வேலைகளும் இருக்கும். அதையெல்லாம், இஷ்டப்பட்டுப் பண்ணும்போது சந்தோஷமாவும் இருக்கும்.
டீசரில் ஒரு நிர்வாணக் காட்சி... (கேள்வியை முடிப்பதற்குள் சிரித்துவிட்டார்)
“அதைப் பார்த்துட்டு நிறைய பேர் போன் பண்ணி, `படத்துக்காக ரொம்ப உழைச்சிருக்கீங்க போல. அதிலும் அந்த ஷாட்’னு இழுப்பாங்க. `என்ன ஷாட்ங்க?’ன்னு கேட்டால், `அதாங்க அந்த ஷாட்...’னு தயங்கித் தயங்கிக் கேட்பாங்க. ஆனால் அது, ராஜ்னு சொன்னேன்ல, அவர்தான். நான் கிடையாது”
சிரிப்புடனே முடிக்கிறார்.