சினிமா
தொடர்கள்
Published:Updated:

ரொமான்ஸ் பண்ணப் பிடிக்காது!

வரலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
வரலட்சுமி

ஜூனியர் விஜய சாந்தியாக முழுநீள ஆக்ஷன் கதாபாத்திரத்தில் களமிறங்கியிருக்கும் வரலட்சுமி...

துருவேறிய ராட்சசக் குழாய்கள், இயந்திரங்கள் நிறைந்த பாழடைந்த ஃபேக்டரி, நூறு கிலோ எடையும், முறுக்கிய மீசையும், இரக்கமற்ற பார்வையும் நிறைந்த வில்லன்கள் சூழ்ந்திருக்கி றார்கள். மைக்கில் ‘டஸ்ட்’ என்றதும், ஒருவர் பட்டனை அழுத்த, அந்த இடம் முழுவதும் புழுதி பறக்கிறது. மீண்டும் மைக் குரல், ‘ஆக் ஷன்’, தடியான ஒருவர் தாக்க ஓடிவர, அவரை எட்டி உதைக்கிறார் வரலட்சுமி. அப்படியே திரும்பி, பின்புறம் வருபவரை இரு கைகளாலும் தள்ளி, சுழன்று மூன்றாவது நபரின் கழுத்தில் உதைக்கிறார். உக்கிரமாகத் திரும்பும் வரலட்சுமியை சாந்தப்படுத்துகிறது அதே மைக் குரல், ‘கட்!’

அறிமுக இயக்குநர் வீரகுமார் இயக்கத்தில் ‘சேஸிங்’ திரைப்படம். ஜூனியர் விஜய சாந்தியாக முழுநீள ஆக்ஷன் கதாபாத்திரத்தில் களமிறங்கியிருக்கும் வரலட்சுமியை ஒரு ஜாலி உரையாடலுக்காகப் படப்பிடிப்புத் தளத்திலேயே சந்தித்தோம். புன்னகை மாறாமல் அனைத்துக் கேள்விகளுக்கும் புல்லட் வேகத்தில் பதில்கள் வந்தன.

“எந்த அடிப்படையில் உங்கள் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்கிறீர்கள்?”

“ஹீரோயின் இப்படித்தான் இருக்கணும்னு சினிமாவுல ஒரு வரையறை இருக்கு. ஆரம் பத்துல நானும் அப்படி நினைச்சு சில தவறுகள் பண்ணியிருக்கேன். ஆனா, ஒரு கட்டத்துக்கு அப்புறம், நடிகைன்னா என்னன்னு யோசிச்சுப் பார்த்தேன். எந்த மாதிரி கதாபாத்திரம் கொடுத்தாலும், அதைச் சிறப்பா செய்யணும்; அவ்வளவுதான். அது 17 வயசுப் பொண்ணு மாதிரி இருந்தாலும், 70 வயசுக் கிழவி மாதிரி இருந்தாலும் நாம நடிகை, அவ்ளோதான். ரெண்டு குழந்தைக்குத் தாயா நடிச்சா, உங்களை யாரும் அவ்ளோ வயசானவங்களா பார்க்கப் போறதில்லை. அப்படி யோசிக்க ஆரம்பிச்சதுல இருந்து, நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய எல்லாக் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன்.”

“பெண்களை மையப்படுத்திய கதைகள், ஹீரோயின் வேடம், வில்லி, துணைக் கதாபாத்திரம்னு வெரைட்டியா பண்றீங்க. இவற்றில் உங்களுக்குப் பிடிச்சது எது?”

“வித்தியாசமான எந்தக் கதாபாத்திரமா இருந்தாலும் நான் குஷியாகிடுவேன். சினிமா மீதான என் காதல் ரொம்பப் பெருசு. சினிமாவில் எல்லாமே எனக்குப் பிடிக்கும்.”

“சினிமாவுல எல்லாமே பிடிக்கும்னு சொல்றீங்க. நடிப்பைத் தாண்டி, இயக்குநராகும் விருப்பம் இருக்கா?”

“பலபேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க. நிச்சயமா ஒருநாள் நான் இயக்குநரா வருவேன். அதுக்கு நிறைய டைம் இருக்கு.”

ரொமான்ஸ் பண்ணப் பிடிக்காது!

“ ‘சேஸிங்” படம் பற்றி?”

“இது முழுக்க முழுக்க ஒரு பெண் கதா பாத்திரத்தை மையமாகக் கொண்ட முழுநீள ஆக் ஷன் படம். ஒரு பெண்ணை ஆக் ஷன் கதாபாத்திரத்துல மக்கள் ஏத்துக்கிறதே எனக்கு சந்தோஷமான விஷயம். விஜயசாந்தி மேடத்துக்கு அப்புறம் யாரும் பெருசா அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்கல; எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சதில் சந்தோஷம்.”

“ஆக் ஷன் படத்தில் நடிப்பது எவ்வளவு சவாலாக இருந்தது?”

“பொதுவா எந்தப் படத்துக்கும் முன் தயாரிப்பு பண்ற ஆள் இல்லை நான். இந்த முறையும் எவ்வளவு கஷ்டமான காட்சியா இருந்தாலும் பயிற்சி பண்ணலாம்னு முடிவுல தான் ஆரம்பிச்சேன்; அப்படித்தான் பண்றேன். பல காட்சிகள்ல டூப் இல்லாம நானேதான் நடிச்சிருக்கேன். ‘மேடம், உங்களுக்கு நாங்க டூப் இல்லை; எங்களுக்குத்தான் நீங்க டூப்’னு ஸ்டன்ட் கலைஞர்கள் என்னைக் கிண்டல் பண்ணுவாங்க. அந்தளவுக்கு ரிஸ்க்கான காட்சிகளில்கூட நானே நடிச்சேன்.”

“சினிமாத் துறையில் உங்களுக்குப் பிடிக்காத விஷயம்?”

“ஹீரோகூட ரொமான்ஸ் பண்ணினாதான் ஹீரோயின் என்பது எனக்குப் பிடிக்காது. அதுல எனக்கு உடன்பாடும் இல்லை. ஒரு படத்தில் வரும் முக்கியமான பெண் கதாபாத்திரம் ஹீரோயின்தான். உண்மையிலேயே அவங்களுக்கு நிறையவே நடிக்கிற வாய்ப்பு ஒரு கதையில இருக்கும்னு நான் நினைக்கிறேன், அதனாலதான் நான் எந்தக் கதாபாத்திரமா இருந்தாலும் ஈகோ இல்லாம நடிக்கிறேன்.”

“நடிகர் சங்கப் பிரச்னை பற்றி?”

“நிறைய குழப்பம்தான் இருக்கு. அதுவும் அணிகள் உருவான பிறகு, ஒரு கூட்டுக் குடும்பமா இருந்த சினிமாத் துறை இப்போ பிரிஞ்சிருக்கு.”

“நடிகர் சங்கக் கட்டடத்துல நடக்கப்போற நடிகர் விஷாலின் திருமணத்துல நீங்க கலந்துக்குவீங்களா?”

“கூப்பிட்டா, கண்டிப்பா கலந்துப்பேன்.”

“ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நீங்கள் சசிகலாவாக நடிக்கிறீர்களா?”

“இல்லை. ஒருவேளை ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டால், நிச்சயம் நடிப்பேன்.”

“உங்க ‘save shakthi’ அமைப்பு எப்படி இருக்கு?”

“குடும்ப வன்முறையால பாதிக்கப்படுற பெண்களுக்கு உதவிகள் செய்துகிட்டிருக்கோம். அது தவிர்த்து, பத்துப் பெண்களுடைய படிப்புச் செலவை நான் ஏத்துக்கிட்டிருக்கேன். ஆனாலும் சிலர், ‘நீங்க இவங்களுக்கு என்ன பண்ணுனீங்க; அவங்களுக்கு என்ன பண்ணுனீங்க’ன்னு கேட்கிறதுதான் கஷ்டமா இருக்கு. அவங்ககிட்ட நான் ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டும் பணம் மரத்தில் காய்க்கிறதில்லை. எங்க வருமானத்தில் குடும்பத்துக்கும் எங்களுக்குமான செலவுகளைத் தாண்டி, நாங்க விருப்பப்பட்டு மத்தவங்களுக்கு உதவுறோம், அவ்ளோதான்.”

“அப்பா வழியில் உங்களுக்கும் அரசியலுக்கு வர்ற ஐடியா இருக்கா?”

“நிச்சயம் இருக்கு. அப்பா அரசியலில் இருக்கிறதால் இல்லை; எனக்கு, பெண்கள் சமூகத்தின் ஒரு குரலா, மக்களுக்கு உதவணும்னு ஆசை இருக்கு. அதுக்காக நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.”

என் ஹீரோக்கள்

சிம்பு: “ரொம்பத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மனிதர்னு சொல்வேன். ‘wrong time in the wrong place’ன்னு சொல்வாங்க. அப்படிப் பிரச்னையில் மாட்டிக்கிற ஒரு மனுஷன். ஆனா, உண்மையில் அவர் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்.”

சசிகுமார்: “இந்த உலகத்துலயே நான் சந்திச்ச ரொம்ப அன்பான, கண்ணியமான மனிதர். அவ்வளவு பணிவா, ஸ்வீட்டா ஒருத்தரைப் பார்க்க முடியாது.”

விஜய்: “அவர்கிட்ட ஒரு ரசிகையாதான் நான் ஃபீல் பண்ணினேன். அவரோடு நடிக்க ஆசைப்படறேன்.”

ரொமான்ஸ் பண்ணப் பிடிக்காது!

விஷால் “பல வருட நண்பர். கடுமையான உழைப்பாளி, ஒவ்வொருமுறையும் ஷூட்டிங் ஆரம்பிக்கும் போதும் முடியும்போதும் கேமராவைத் தொட்டுக் கும்பிடுவார். சினிமாமேல அவ்வளவு மரியாதையோடு இருக்கிற ஆள்.”

விஜய் சேதுபதி: “சேது சார், என்னைப் பார்த்ததும், ‘வரூ... தயவுசெஞ்சு என்னைக் கலாய்க்காத! நீ அதைத்தான் பண்ணுவன்னு தெரியும்’னு சொல்வார். அந்தளவுக்கு அவரைக் கிண்டல் பண்ணுவேன். ரொம்பத் திறமையான நடிகர். அவர்கூட பல படங்கள்ல நடிக்கணும்னு எனக்கு ஆசை. ஏன்னா, அவர்கிட்ட நிறைய கத்துக்கலாம்.”

தனுஷ்: “அற்புதமான நடிகர், ஒருமுறை ஷாட்டுக்கு முன்னாடி அவர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். சாதாரணமாதான் பேசிக்கிட்டு இருந்தோம். ஷாட் ரெடின்னு சொன்னதும், அடுத்த நிமிடம் அவர் கண்ணுல கண்ணீராக் கொட்டுது. ஒரு நொடியிலே அவர் அந்தக் காட்சிக்குள்ளே போயிட்டார். எனக்கு ரொம்ப ஆச்சரியம். நானும் கிளிசரின் போடாமதான் நடிப்பேன். ஆனா, எனக்குக் கண்ணீர் வர ஒரு நிமிடமாவது தேவைப்படும். அவருக்கு அதெல்லாம் இல்லை, சுவிட்ச் போட்ட மாதிரி அழுதார். நடிக்கிறதுல சரியான போட்டி அவர்தான்.”