
‘பொசுக்’குனு ஆரம்பிக்க, அரசியல் கட்சி என்ன திடீர் உப்புமா பண்ற சமாசாரமா...?
ஒரு தீபாவளிப் பரபரப்பு தெரிகிறது. ரஜினி, கமல் உட்பட ஒட்டுமொத்த தமிழ் சினிமா மக்களையும் சிங்கப்பூர், மலேஷியா கலைவிழாவுக்கு அழைத்துப் போகிற பணிகளில் பம்பரமாக இருக்கிறார் விஜயகாந்த்.
ஜல்லிக்கட்டு ஓவியம், வீரவாள். சிங்க பொம்மை என்று விஜயகாந்த் வீட்டுச் சுவரெல்லாம் வீரம் பேசுகிறது.
' "யோகா பண்ணிட்டிருந்தேன் " என்றபடி ஸ்பிரிங்முடி துள்ள வந்தமர்கிறார் விஜயகாந்த்.
" முன்னைக்கு இப்போ உடம்பை ரொம்பவே குறைச்சிருக்கீங்க! ' ரமணா'வில் இருபத்தஞ்சு வயசு ஆளா நடிக்கிறீங்களாமே? ' '
' ஆமா... அது ஒரு ஜாலி மேட்டர். என்னோட சின்ன வயசுப் படத்தை எங்கேயோ தேடியெடுத்து வைச்சு விளையாடறாங்க. படத்திலே நீங்க சொல்ற அளவு இளம் வயசெல்லாம் வராட்டியும் எவ்வளவு வயசைக் குறைக்க முடியுமோ அதைப் பண்ணி இருக்கோம். இது வித்தியாசமான ஒரு படமா அமையும்னு தோணுது. சமூகப் படமா... அரசியல் கலப்பில்லாமல் பண்ணியிருக்கோம். "

" ' ராஜ்ஜியம் ' படத்துல கிடைச்ச பாடமா இது?
" அந்த அரசியல் பாட்டைச் சொல்றீங்களா? கன்னியாகுமரியில் ஆரம்பிச்சு தமிழ்நாடு முழுக்க மக்கள் கூட்டத்தோடு நான் நடந்து வர்ற மாதிரி பரபரப்பான வரிகளோட ஒரு பாட்டு ரெடிபண்ணினதுமே எனக்குத் தயக்கமா இருந்தது. ' ' எதுக்கு இது? வேணாம்'னு சொன்னேன். ' இருக்கட்டும்.அப்போ தான் விறுகவிறுப்பா இருக்கும்'னு சொல்லி சம்பந்தமே இல்லாத அந்தப் பாட்டைப் புகுத்திட்டாங்க. அரசியல் படம்னு நினைச்சு வந்த சிலருக்கு ஏமாற்றம். அரசியல் படம்னு பலர் வராம போனது படத்துக்குச் சறுக்கல். ஆனா, கேரளாவிலே ' ராஜ்ஜியம் ' ரொம்ப நல்லாப் போயிருக்கு... '
' நடிகர் சங்கக் கலை நிகழ்ச்சி பற்றி சொல்லுங்க...ரஜினியை எப்படிச் சம்மதிக்க வெச்சீங்க?
“ நான் நடிகர் சங்கத் தலைவரானதுமே முதல்ல கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை அடைக்கணும்னு முடிவெடுத்தேன். ஏதாவது ஒரு கலைநிகழ்ச்சியில கலந்துச் கிட்டு, நலிந்த கலைஞர்களுக்கு உதவணும்னு அப்பவே ரஜினிகிட்டே பேசி வெச்சிருந்தேன் ' ஒண்ணுதானே.. ஒண்ணே ஒண்ணுதானே! அவசியம் கலந்துக்கறேன்'னு அவர் வாக்குக் கொடுத்திருந்தார். கொடுத்த வாக்கைக் காப்பாத்த இப்போ வரேன்னிருக்கார். சீனியர் நடிகரில்லையா அவர்! அதான், முக்கிய நடிகர்களோட போய் அவரைப் பார்த்தோம். உடனே ஒப்புக்கிட்டார்... "
" கலைவிழாவுல என்ன பண்ணப் போறாங்க ரஜினியும் கமலும்? ” '
அதை அவங்களே முடிவு பண்ணிப்பாங்க. நானும் ரஜினியும் கூடிப் பேசி, எங்க பங்களிப்பை முடிவு செய்துக்கறோம்'னு கமல் சொன்னார். அநேகமா, கமல் ஒரு பாட்டு பாடுவார். ரசிகர்கள் கேட்டுக்கிட்டா, ரஜினி டான்ஸ் பண்ணினாலும் பண்ணலாம். அதை அவர் முடிவுக்கே விட்டிருக்கோம்... ”
" ஒட்டுமொத்த நட்சத்திரங்களையும் ஒன்றுதிரட்டி விமானத்துல கிளம்பப் போறீங்க... ஒரு தமாஷுக்குக் கற்பனையா ஒரு விஷயம் கேட்கிறோம். உங்க விமானத்தை திடீர்னு பின் லேடன் கடத்திட்டா, தமிழ் சினிமா என்ன ஆகும்? ”
( வாய்விட்டுச் சிரிக்கிறார் விஜயகாந்த். ) “ வாய்ப்பே இல்லை. ஏன்னா, வெவ்வேற ஃப்ளைட்ல பிரிச்சுப் பிரிச்சுத்தான் டிக்கெட் எடுத்திருக்கோம். தமிழ் சினிமாவைக் காப்பாத்தற அக்கறையிலதான் இப்படிப் பண்ணியிருக்கோம்னு வெச்சுக்கங்களேன்... "
"நடிகர் நடிகைகள் டி.வி - யில் தலைகாட்டக் கூடாது'ன்னதுக்கு வரவேற்பு எப்படி இருக்கு? ”
'தியேட்டருக்கு வர்ற ஜனங்க எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு! ' எண்பத்தஞ்சு நாடுகள்ல ஒரே நேரத்துல தெரிவேன்'னு அடம்பிடிச்சு டி.வி - யில நடிகர்கள் முகத்தைக் காட்டினா, அவங்கமேல ஜனங்களுக்கு இருக்கிற ஆர்வம் குறைஞ்சு போயிடும். விளைவு, சினிமாவைத்தான் பாதிக்கும். சினிமாவை எப்படிக் காப்பாத்தறதுனு நாம யோசிப்போம். டி.வி - யை எப்படிக் காப்பாத்தறதுனு டி.வி - க்காரங்க யோசிக் கட்டும்னுதான் ஸ்ட்ரிக்ட்டா அப்படியொரு முடிவெடுத்தோம்... "
ஆனா, அப்படியும் டி.வி - யில சினிமா க்ளிப்பிங்ஸ் வர்றது குறையலையே? ”
“ தெரியலை... இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய கூட்டமைப்பினரைத்தான் கேட்கணும். அதோட தலைவர் செல்வின் தான் இதுக்குப் பதில் சொல்லணும். கூட்டமைப்பிலே நடிகர் சங்கமும் ஒரு அங்கம், அவ்வளவுதான்... நாங்க கட்டுப்பாடா இருக்கோம்... ”
" தனிப்பட்ட விஜயகாந்த் பற்றி.... நீங்க நடத்தற ரசிகர்மன்ற விழாக்கள் மாநாடு மாதிரி நடக்குது. இலவசக் கல்யாணங்கள், தையல் மெஷின், படிப்பு உதவினு லட்ச லட்சமாத் தர்றீங்க... ”
" நான் படிக்காதவங்க... நாலு பேர் படிக்கணும். நல்லாருக்கணும். அதான் என் ஆசை. அடிப்படையில நான் எம்.ஜி.ஆர் ரசிகன். தவிர, எங்கப்பாவோட காரெக்டர் பிறருக்கு உதவறது..... அது என் பிறவிக்குணமா அமைஞ்சுடுச்சு! ”
" அரசியலுக்கு வர்றதுக்கான முன்னோட் டமா இதெல்லாம்? ”
'ஒரு படம் நல்லா ஓடினதுமே அந்த நடிகனுக்கு அரசியல் ஆர்வத்தைத் தூண்டிவிடறதும், பத்துக் கேள்வியில இதையும் ஒண்ணா வைக்கறதும் மீடியாக்காரங்க பண்ற குறும்புதான். சினிமா வேற, அரசியல் வேற! எம்.ஜி.ஆர். மட்டும் தான் மக்கள் செல்வாக்கைப் படங்கள் மூலம் சம்பாதிச்சவர். வேற யாருக்கும் அந்த அதிர்ஷ்டம் அமையலை! ”
“ தெளிவாச் சொல்லுங்க... ' வர்றதா இருந்தா, தைரியமா வருவேன்'னு அரசியல் பிரவேசம் பத்திப்பேசறீங்க. ரஜினியை மறைமுகமா கோடிட்டுப் பேசறீங்க... குழப்பாம ' பளிச்'னு சொல்லுங்க? ”
" இதுல குழப்பம் என்ன இருக்கு? ( கோபம் எட்டிய பார்க்கிறது ) நானும் ரஜினியும்தான் நாட்டைக் குழப்பறோமா அரசியல்ங்கிறது குளம் குட்டை இல்லே சட்டையைச் கழட்டிட்டுக் குதிக்க....
ஜெயலலிதாவையே எடுத்துக்குங்க... எத்தனை பெரிய அடிகள் அவமானங்கள், தோல்விகள், போட்டி, பொறாமை எல்லாத்தையும் மீறி வந்திருக்காங்க. அதுக்கு எவ்ளோ பொறுமை இருக்கணும், உழைப்பு இருக்கணும். திடீர்னு வந்துடாது கிரீடம்... அதுக்குப் பெரிய போராட்ட குணம் வேணும்.
கலைஞர், எவ்வளவு அடிமட்டத்திலேருந்து உயர்ந்த இடத்துக்கு வந்தாரு. அவரோட அரசியல் வாழ்க்கை அடியும் வலியும் சோகமும் தான் இருக்கு! பதவிங்கிறது அப்போ பட்ட காயங்களுக்கான மருந்து, ஒரு ஆறுதல். அவ்வளவுதான்...
‘பொசுக்’குனு ஆரம்பிக்க, அரசியல் கட்சி என்ன திடீர் உப்புமா பண்ற சமாசாரமா? அதுக்குன்னு ஒரு நேரம் வரும். அப்படியே வந்தாலும், தெளிவான திட்டங்களும் கட்டுக்கோப்பான நிர்வாகமும் இருந்தாதான் லஞ்ச லாவண்யம் இல்லாத தெளிவான அரசியல் பண்ண முடியும்.
நான் என் படங்கள்ல பொழுதுபோக்கோடு கொஞ்சம் பொது நலமும் சொல்லணும்னு ஆசைப்படறேன். தேசப்பற்று வேணும்னு சொல்றேன். நேர்மையா நடக்கணும், நியாயமா இருக்கணும், மதவெறி கூடாதுனு முடிஞ்ச அளவு என் படங்கள் மூலமா பொதுநலத்துல அக்கறை காட்டறேன். இப்போதைக்கு அது மட்டும்தான்!”
“ போன வருஷம் சிவாஜிக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வந்தாங்க. சிங்கம் மாதிரி இருக்கற நீங்க, அப்போ திடீர்னு வாய் பொத்திப் ' பவ்யம் ' காட்டினீங்களே? "
அவங்க இந்த மாநிலத்தின் முதலமைச்சர். என்னை விட மூத்தவங்க. சினிமாவிலே எனக்கு சீனியர். அவங்களுக்கு மரியாதை காட்டறதுல தப்பில்லையே! கலைஞரைப் பார்த்தா, இன்றைக்கும் அவர் கால்ல விழுந்து வணங்குவேன். அவரே பல முறை தடுத்தும் நான் அந்த மரியாதையை விடறதில்லே.... அதுதான் நான்.
ஜெயலலிதா பத்தி எப்பவும் நான் நண்பர்கள்கிட்டே, 'அவங்க ஒரு Lady Lion ' னு சொல்றதுண்டு. கலைஞர் முதல்வரா இருந்தபோது, அவரை ஈஸியா சந்திச்சுட முடியும். ஆனா, இவங்களைச் சந்திக்கறது சிரமம். அது அவங்க உருவாக்கினதில்லை. அப்படியொரு இமேஜ் வந்துவிட்டது. ஆனா, நேர்ல அவங்ககிட்டே பேசினா, அந்த பந்தா எதுவுமே தெரியலை. நாற்பத்தஞ்சு நிமிஷம் பேசினேன் நான். அவங்கமேல கட்சிக்காரங்களுக்குப் பெரிய பயம் இருந்தாலும் கட்சிக்காரங்களுக்காக நிறையவே செய்திருக்காங்க மேடம்... "

"அவங்க கட்சிக்காரங்களுக்கு மட்டுமா பயம்? மத்த கட்சிக்காரங்ளையும் ' தடா, பொடா'னு பயமுறுத்தறாங்களே?"
" அது அரசியல் ஆட்டம். நான் பொதுவான ஆளு. அதுக்குள்ள தலையிடறது நல்லாயிருக்காது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஸ்டைல். கலைஞர் ஸ்டைல் சாஃப்ட்டா இருக்கும். முரசொலி ஆபீஸ்ல கலைஞரைச் சந்திச்சேன். ' ஒரு நடிகர் சங்கத்தலைவரா நீங்க அந்தம்மாவைச் சந்திச்சுத்தான் ஆகவேண்டி யிருக்கும். ஆளுங்கட்சிக்காரங்களைப் பார்க்கிறதைத் தவிர்க்க முடியாதே'னு அவரே சொன்னார். எனக்கு எந்தக் குழப்பமும் கிடையாது... ”
" அடுத்த பத்து வருஷத்துக்கப் புறம் நீங்க யாரு? "
'தெரியலை. காலேஜ் நிர்வாகத்தைக் கவனிச்சிட்டிருப்பேன். இல்லேன்னா, இதே சினிமாவில் அப்பா, அண்ணன்னு காரெக்டர் ரோல் பண்ற சீனியர் நடிகனாக இருக்கலாம். அல்லது, சம்பந்தமே இல்லாம ஒரு பிஸினஸ்மேனா இருப்பேன். ரைஸ் மில்லுல அரிசி அளந்து போட்ட விஜயகாந்த் இங்கே வருவேன்னு யாரும் திட்டமிடலை. எந்தத் திட்டமும் நான் போட்ட தில்லை. காலம் கைகாட்டற திசையிலே நடக்கறவன் நான்! "
- எஸ்.பி.அண்ணாமலை
(28.07.2002 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)