
‘அட்டகாசம்’ படத்திலும் அண்ணன் அஜித் கிட்டத்தட்ட வில்லன்.
நெருப்பு பறக்கும் சண்டைக்காட்சிகள், நீளநீளமான பஞ்ச் வசனங்கள் - இவைதான் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் அடையாளம்.
ஆனால் ஒருகட்டத்தில் இந்த ஃபார்முலா, நடிக்கும் ஹீரோக்களுக்கே சலிப்புத்தட்டிப்போகும்.
வில்லனாக அறிமுகமாகி ஹீரோக்களாக மாறிய இரண்டு முக்கியமான நடிகர்கள் ரஜினிகாந்தும் சத்யராஜும். கதாநாயகனாக மாறிப் பல படங்களில் நடித்தாலும் இடையில் சத்யராஜ் வில்லனாக மாறி அல்வா கொடுத்த ‘அமைதிப்படை’ அவர் இமேஜை உயர்த்தியது. கமல்ஹாசன் ‘தசாவதாரம்’ படத்தின் பிளெட்சர் அவதாரத்தில் வில்ல மகிமை காட்டியிருப்பார். ’சூப்பர் ஸ்டார்’ ஃபார்முலாவிலேயே நடித்த ரஜினிகாந்த்கூட ஒரு மாறுதலுக்கு ‘சந்திரமுகி’ வேட்டையனாக, ‘எந்திரன்’ சிட்டி ரோபாவாக வில்லன் முகம் காட்டினார். அதிலும் ’சிட்டி’ ரோபோவாக வழக்கத்தைவிட அதிக க்ளாப்ஸ் அள்ளினார்.

’ப்ரியமுடன்’ விஜய்க்கு அப்படியான பென்ச்மார்க். அஜித்துக்கு ‘வாலி.’ பேசும், கேட்கும் சவால் உள்ளவராக, தம்பி மனைவியின் மீது தீரா மோகம் கொண்ட அண்ணன் வில்லனாக அசத்தியிருப்பார் அஜித். அதற்குப்பிறகும் அப்படியான வில்லத்தனம் கொண்ட அல்லது முரட்டுத்தனம் கொண்ட பாத்திரங்கள் அவர் கரியர் முழுக்கவே தொடர்ந்திருக்கின்றன. ‘வில்லன்’ என்ற டைட்டிலிலேயே ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

‘அட்டகாசம்’ படத்திலும் அண்ணன் அஜித் கிட்டத்தட்ட வில்லன். நிழலுலக வாழ்க்கையில் ஸ்டைலும் வில்லத்தனமும் காட்டும் வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு ‘பில்லா’வும் ‘பாட்ஷா’வும் சாட்சி. அந்த வரிசையில் ‘பில்லா’வைத் தேர்ந்தெடுத்து ரீமேக் செய்த அஜித், அடுத்தடுத்து ‘அசல்’, ‘பில்லா 2’ படங்களில் நடிக்கவும் செய்தார். ‘மங்காத்தா’வில் அஜித் ஆட்டம் வேற லெவல். ஓடும் காரிலிருந்து கொஞ்சம்கூட யோசிக்காமல் காதலியின் தந்தையைத் தள்ளிவிட்டது வெறித்தன வில்லத்தனம்.


அடுத்து வந்த ‘ஆரம்பம்’ போன்ற படங்களிலும் அஜித் பாத்திரத்தில் வில்லத்தன சாயல் இருக்கும். ‘ப’ வரிசை பாசப்படங்களை பீம்சிங் உருவாக்கியதைப்போல, அஜித்தை வைத்து ‘வி’ வரிசைப் படங்களை இயக்கிய சிவா, அஜித்தை சென்டிமென்ட் ஏரியாவுக்குத் தூக்கிப்போனார். ‘விஸ்வாசம்’ படம் பார்த்துக் கண்ணீரால் கர்ச்சீப்பை நனைத்த தாய்க்குலங்கள் ஏராளம். 1990-ல் சுரேஷ், நதியா நடித்த ‘என் வீடு என் கணவர்’ படத்தில்தான் முதன்முதலாக வெள்ளித்திரையில் அறிமுகமானார் அஜித். அந்தக் கணக்குப்படி இந்த 30 ஆண்டு்கால சினிமா வாழ்க்கையில் அஜித்துக்கு அதிகம் விருப்பமானவை வில்லத்தனம் கலந்த பாத்திரங்களே என்று சொல்லலாம். சரி.... இப்போ ஏன் இந்த ‘வில்ல புராணம்’னு கேக்குறீங்களா?!

விகடன் இணையதளத்துக்காக ரா.பார்த்திபன் எழுதிவரும் ‘ஆண்Line பெண்Line Thought காம்’ தொடரில் விகடன் வாசகர் ராஜபாளையம் கருப்பசாமி ஒரு கடிதம் எழுதியிருந்தார். ‘`அஜித்துடன் இரண்டு படங்கள் இணைந்து நடித்திருக்கும் நீங்கள் ‘தல’க்கு வில்லனாக நடித்தால் அது அருமையான படமாக இருக்கும்’’ என்று தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.


‘`மிஸ்டர் அஜித்கூட நான் ஏன் வில்லனா நடிக்கணும்? அவரே வில்லனா நடிக்கலாம். வில்லனா நிக்கணும்னா நல்லா நடிக்கணும். அதனாலதான் மிஸ்டர் அஜித் வில்லனாக்கூட நடிக்கலாம்னு சொல்றேன். ஹாலிவுட்ல வந்த ‘ஜோக்கர்’ மாதிரி ஒரு படத்துல அஜித் நடிக்கிறார்னு வெச்சிக்கங்க, எப்படியிருக்கும்? ஜோக்கரை நீங்க ஹீரோன்னு சொல்லுவீங்களா, வில்லன்னு சொல்லுவீங்களா. அத்தனை கொலைகள் பண்ணிட்டு நடந்துபோகும்போது அவ்ளோ விசில் கேட்கும். அந்த மாதிரி ஒரு ரோல் அஜித் பண்ணுனாருன்னா தியேட்டர்ல பட்டையைக் கிளப்பும்’’ எனத் தன் ஸ்டைலில் பதிலளித்திருந்தார் பார்த்திபன். அந்த பதிலுக்கு பிரேம் டாவின்சியின் கேன்வாஸ் மூலம் ஒரு உருவம் கொடுத்தோம்.

லியானார்டோ டிகாப்ரியோவின் ரசிகர் அஜித். டிகாப்ரியோ நடித்த ‘தி வுல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்’ அவருக்கு மிகவும் பிடித்த படம்.


அஜித் ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற அடைமொழியைத் தூக்கிப்போட்டார். ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். படப்பிடிப்பு தவிர எந்தப் படவிழாக்களுக்கும் வருவதில்லை. நோ பேட்டி, நோ சோஷியல் மீடியா. ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஹேர்ஸ்டைலிலேயே நடிப்பவர் அஜித். எனவே ஹீரோயிச இமேஜ் பார்க்காமல் சவாலான வில்லன் பாத்திரங்களில் அவருக்கு ஆர்வம் இருப்பது இயல்புதான்.

ஆகவே எம் இனிய இயக்குநர்களே... `ஜோக்கர்’, ‘வுல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்’ போன்ற கதைகளுடன் அஜித்திடம் போகலாம். உங்கள் கதை அந்த ‘வில்லன் வுல்ஃப்’புக்கு பிடித்துவிட்டால், தமிழ் சினிமா ரசிகர்கள் செம ஸ்டைலான வில்லனைப் பார்க்கலாம்.
என்ன....ஓ.கேதானே!?