இளையராஜாவை சந்திப்பது எப்போதும் பேரனுபம். அவரை சந்திப்பதற்கு ஒரு மரபிருக்கிறது. அவரது எதிர்கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லத்தெரிந்தால் தவிர அவரை எதிர்கொள்வது கடினம். புகழுரைகள் அவரை எதுவும் செய்யாது. பதில் சொல்ல ஆரம்பிக்கும்போது அவரிடம் இருக்கும் அந்த கம்பீரம் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. எத்தனைப்பேரை சந்தித்து கேள்வி தொடுத்த அனுபவம் இருந்தாலும், அவருக்கு முன் எதுவும் செல்லுபடியாகாது. அவரோடு பேசுவதும், அதை எழுதுவதும் எனக்கு எப்போதும் ஒரு சாகசப்பயணமே!
ஆனந்த விகடனுக்காக சில நாட்களுக்கு முன்பு அவரை பேட்டி கண்டபோது சில பாடல்கள் உருவாகி வந்த விதத்தை முன்னெடுத்துப் பாடினார். அதில் அவர் இசையின் அற்புதத்தையும், வசீகரத்தையும் நேரில் உணரமுடிந்தது. சொன்ன வார்த்தைகள் சரியாகப் போய் சேர வேண்டுமென்பதில் அவர் மெனக்கெடல் அவ்வளவு முக்கியமானது.
ஆனந்த விகடனுக்காக இளையராஜாவுடனான உரையாடல் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீண்டது. அவரது கோபமும், உக்கிரமும், நகைச்சுவையும்கூட உண்மைத்தன்மை கொண்டதுதான். சொல்லப்படாத பகுதிகளும் சுவாரஸ்யம் கொண்டதே!
பேட்டியின்போது எஸ்.பி.பி பற்றி பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அவருடனான நட்பு, சண்டை, புகழ், பெருமிதம் என பேச்சு நீண்டது. அப்போது, "என்னுடைய பாடல்ப திவிற்கு வரும்போதெல்லாம் எஸ்.பி.பியும், ஜானகியும் 'இங்கே பாட வருவது பள்ளிக்கூடத்திற்கு போய் பரிட்சை எழுதுவது மாதிரியே இருக்கிறது' என்பார்கள். அவர்கள் எல்லோரும் என்னைப் புரிந்துவைத்திருந்தார்கள்" என்றார்.
எஸ்.பி.பி-யுடனான ஆரம்பகாலம், இசையின் மாயநிலை, பாடலின் தன்மை, பின்னணிக் குரலின் பங்கு, ஆன்மிக வாசல் திறப்பு, இசையின் உண்மைத்தன்மை எனப் பல கேள்விகளுக்கு மனம்திறந்து மிக விரிவாகப் பேசியிருக்கிறார் இளையராஜா.
இளையராஜாவின் முழுமையான பேட்டி இன்று வெளியாகியிருக்கும் ஆனந்த விகடனில் இடம்பெற்றிருக்கிறது. தவறாமல் படியுங்கள்!