Published:Updated:

"அவரை பெண்களுக்கும் பிடிக்கும்!" - ஈரோட்டில் சில்க் ஸ்மிதா பிறந்தநாளைக் கொண்டாடிய குடும்பம்!

சில்க் ரசிகர் குமார்

"சில்க் ஸ்மிதாவை ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும். இதை என் கடைக்கு வரும் பல பெண் வாடிக்கையாளர்களும் கூறியிருக்கின்றனர்!" - சில்க் ரசிகர் குமார்

Published:Updated:

"அவரை பெண்களுக்கும் பிடிக்கும்!" - ஈரோட்டில் சில்க் ஸ்மிதா பிறந்தநாளைக் கொண்டாடிய குடும்பம்!

"சில்க் ஸ்மிதாவை ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும். இதை என் கடைக்கு வரும் பல பெண் வாடிக்கையாளர்களும் கூறியிருக்கின்றனர்!" - சில்க் ரசிகர் குமார்

சில்க் ரசிகர் குமார்
சில்க் ஸ்மிதா... தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கவர்ச்சி நடிகை. 1979-ல் முதன்முறையாக `வண்டிச்சக்கரம்' படத்தில் அறிமுகமாகிக் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகின் கவர்ச்சி ராணியாக வலம் வந்து அவருக்கென தனி இடத்தை வைத்திருந்தார். 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்த அவர்தான் 1980, 90களில் பல ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த கனவுக் கன்னி. அவரால் ஈர்க்கப்பட்ட பல ரசிகர்களும் இன்றும் அவரது நினைவைப் போற்றத் தயங்குவதில்லை என்பதற்கு உதாரணம்தான் ஈரோடு, அகில்மேடு வீதியில் உள்ள பிரியா டீ ஸ்டாலின் உரிமையாளர் குமார்.
சில்க்கின் அலங்கரிக்கப்பட்ட புகைப்படம், கேக்
சில்க்கின் அலங்கரிக்கப்பட்ட புகைப்படம், கேக்
நேற்று 2-12-2022 சில்க் ஸ்மிதாவின் 63வது பிறந்தநாள். இந்த நாளை மறக்காமல் தன்னுடைய டீ ஸ்டால் முழுவதும் சில்க் ஸ்மிதாவின் புகைப்படங்களை ஒட்டி வைத்து, பலூன், தோரணங்கள் போன்றவற்றால் அலங்கரித்து வைத்திருந்தார்.

அவருடன் ஈரோட்டைச் சேர்ந்த ஏராளமான சில்க் ஸ்மிதாவின் ரசிகர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அவரது பிறந்தநாளைப் பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடினர். சில்க்கின் பிறந்தநாளையொட்டி தூய்மைத் தொழிலாளர்கள் 50 பேருக்கு இலவசமாக வேட்டி, சேலைகளையும், சில்க்கின் படத்தை அச்சிட்ட தினசரி காலண்டர்களையும் வழங்கினர். சில்க் ஸ்மிதா மீது அப்படியென்ன தீராத மயக்கம் என்று சிரித்தபடியே நிகழ்ச்சியின் நாயகனான குமாரிடம் கேட்டோம்.

"நான் 18 ஆண்டுகளாக சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை இனிப்பு கொடுத்துச் சிறப்பாகக்கொண்டாடி வருகிறேன்.

நல உதவிகளை வழங்கும் குமார் குடும்பத்தார் மற்றும் ரசிகர்கள்
நல உதவிகளை வழங்கும் குமார் குடும்பத்தார் மற்றும் ரசிகர்கள்

எனக்குக் கஷ்டமான, சோதனையான காலகட்டத்தில் கூட எனது டீக்கடையில் ஒட்டி வைத்துள்ள சில்க்கின் கறுப்பு, வெள்ளைப் புகைப்படத்தையும், அவரது கண்களையும் சற்று நேரம் உற்று நோக்குவேன். அதில் மனம் சாந்தமும், தெளிவும் அடைந்து விடும். பின்னர் சுறுசுறுப்பாக வேலையைப் பார்ப்பேன். இத்தனை நாளும் கேக் வெட்டிதான் சில்க்கின் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.

இந்த முறை ஏழைத் தொழிலாளர்களுக்கு சர்ட், சேலைகளை வழங்கி அவரின் பிறந்த நாளை கொண்டாடலாம் என்று என்னுடைய மகள் பிரியா ஆலோசனை கூறினார்.

சில்க் ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து எங்கள் சொந்தப்பணத்தில் 50 தூய்மைப் பணியாளர்களுக்குச் சேலைகள், சர்ட்கள் வழங்கியும், கேக் வெட்டியும் சில்கின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறோம்.

இன்றைக்கு எத்தனையோ கதாநாயகிகள் வந்து போறாங்க. முன்பெல்லாம் கவர்ச்சி காட்டத் தனியே நடிகைகளைப் போடுவார்கள். இப்போ வரும் கதாநாயகிகளே, கவர்ச்சியைக் காட்டி நடிக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் நீண்ட நாள் நிலைப்பதும் இல்லை. ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடிப்பதும் இல்லை. ஆனால் சில்க் அப்படியல்ல. ஒரு கவர்ச்சி கதாநாயகியாக இருந்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த பெண் அவர்.

குமார் மகள் பிரியா
குமார் மகள் பிரியா

அவரை ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும். இதை என் கடைக்கு வரும் பல பெண் வாடிக்கையாளர்களும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

நான் முதலில் சில்க் ஸ்மிதாவின் படம் போட்ட காலண்டரை அச்சிட்டு தருமாறு 2010-ல் அச்சகத்தில் கேட்ட போது மறுத்து விட்டார்கள். அதனால், தனியே ரெடிமேடு காலண்டர் வாங்கி சில்க்கின் ஸ்டிக்கர் போட்டோவை ஒட்டி காலண்டர் தயாரித்து, கடையில் மாட்டி வைத்தேன். ஆரம்பத்தில் ரூ.100 செலவு செய்து 5 காலண்டரை தயாரித்து முக்கியமான ரசிகர்களுக்குக் கொடுத்தேன். இப்போது நிறைய அச்சகங்களில் சில்க் ஸ்மிதாவின் புகைப்படத்தைப் போட்டு காலண்டர் அச்சிட்டுத் தருகிறார்கள். அதையும் அதிகமான மக்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக சில்க் படம் போட்ட காலண்டரை அச்சிட்டு, அவரது உண்மையான ரசிகர்களுக்கு மட்டுமே கொடுத்து வருகிறேன். இந்த காலண்டரை வாங்கிச் செல்வதற்காக சென்னை கொளத்தூரில் இருந்தும், மதுரை, அந்தியூர், அத்தாணி என பல்வேறு இடங்களிலிருந்து சில்க்கின் உண்மையான ரசிகர்கள் வருகின்றனர்" என்றார்.

குமாரின் மூத்த மகளான பிரியா நம்மிடம் கூறுகையில், "நான் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.ஏ.எல்.எல்பி., படித்து வருகிறேன். நான் பிறப்பதற்கு முன்பே சில்க் ஸ்மிதா இறந்து விட்டார். இருந்தாலும், நான் அவரது இளம் ரசிகை என்று சொல்வதில் பெருமிதம் அடைகிறேன். சில்க் ஸ்மிதாவா என்று முகம் சுளிப்பவர்களை விடக் கண் பூரித்து வியப்பவர்கள்தான் அதிகம். அந்தளவுக்கு அவர் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்.

சில்க்கின் தீவிர ரசிகர்
சில்க்கின் தீவிர ரசிகர்

எங்கள் வீட்டில் எனக்கு விவரம் தெரிந்த வரையிலும் சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளை குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடி வருகிறோம். சில்க் நடித்த படங்களையும், அவரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வாழ்வில் பல பிரச்னைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற பெண் என்பதால் அவரை எனக்குப் பிடிக்கும்" என்றார்.

சில்க் ஸ்மிதா காலங்களைக் கடந்து இன்னும் ரசிகர்கள் நெஞ்சில் வலம் வருகிறார் என்பது வியப்பாகத்தான் உள்ளது.