சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஃபர்ஹானா - சினிமா விமர்சனம்

ஃபர்ஹானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபர்ஹானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஒரு புதுக்கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து, தொய்வடையாத படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்

வீட்டை விட்டு முதன்முறையாக வேலைக்கு வரும் பெண், முகம் தெரியாத சிக்கலில் மாட்டிக்கொண்டால், அதுதான் ‘ஃபர்ஹானா.’

விற்பனை மந்தமான செருப்புக் கடையைக் கவனிக்கும் தந்தை, கணவன். பள்ளிக்கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் குழந்தை. வீட்டுப் பொருளா தாரத்தைச் சரிசெய்ய கால் சென்டர் வேலைக்கு வருகிறார் ஃபர்ஹானா. ‘ஃபிரெண்ட்ஸ் சாட்' என்ற பெயரில் முகமறியாத ஆண்களுடன் பேசும் பணி. அதில் அறிமுகமாகும் ஒரு முகமறியாத குரல், தன் இன்னொரு கொடூர முகத்தைக் காட்ட, திண்டாடிப்போகிறார் ஃபர்ஹானா. சிக்கலிலிருந்து மீண்டாரா இல்லையா என்பதைப் படபடப்பும் பரபரப்பும் நிறைந்த திரைக்கதை மூலம் சொல்கிறது படம்.

ஃபர்ஹானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
ஃபர்ஹானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

கதைநாயகி ஃபர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷ். வேலைக்குச் செல்லும் பெண்களை ஏக்கத்துடன் கவனிக்கும் கண்கள், புதுவேலையில் கொஞ்சம் கொஞ்சமாகத் தயக்கமுடைக்கும் தருணங்கள், புது உறவின் மகிழ்ச்சியில் திளைப்பது, அதுவே அச்சுறுத்தலாக மாறும்போது பரிதவிப்பது என ஒட்டுமொத்தப் படத்தையும் தன் புர்ஹா அணிந்த தோள்களால் தூக்கிப்பிடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். வறுமையின் இயலாமையில் புழுங்கி, அதேநேரம் தன் மனைவியின் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும் கணவனாக மனம் கவர்கிறார் ‘ஜித்தன்' ரமேஷ். செருப்புக்கடை வைத்திருக்கும் ரமேஷ் திருமணம், நேர்முகத்தேர்வுக்கான அலுவலகம் என எல்லா இடங்களிலும் கால்களை மட்டுமே கவனிப்பது, முதன்முறை வேலைக்குச் செல்லும் தன் மனைவியின் கால்களுக்குச் செருப்பு அணிவிப்பது எனக் காட்சிகள் கவிதை. பழைமைவாதத்தில் திளைக்கும் கண்டிப்பான தந்தையைப் பிரதிபலிக்கிறார் கிட்டி என்கிற கிருஷ்ணமூர்த்தி. குரலிலும் முகத்திலும் இரு பரிமாணம் காட்டி அசத்துகிறார் செல்வராகவன். அனுமோள், ஐஸ்வர்யா தத்தாவும் தங்கள் பாத்திரங்களை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை தங்குதடையில்லாமல் பயணிக்கிறது நெல்சன் வெங்கடேசன், ரஞ்சித் ரவீந்திரன், சங்கர்தாஸ் கூட்டணியின் திரைக்கதை. ‘இந்தியாவில் 98 சதம் ஆண்களின் செக்ஸ் மைண்ட்லதான் நடக்குது', ‘நம் உரையாடலுக்கு இடையில் மௌனம் ஆறாகப் பாய்கிறது' என்று பல இடங்களில் கவித்துவ ஆழமும் உணர்வுகளின் அடர்த்தியும் நிறைந்த நெல்சன் வெங்கடேசன் - மனுஷ்யபுத்திரன் வசனங்கள் படத்துடன் ஒன்றிப் பயணிக்கின்றன. ஐஸ்ஹவுஸ் குறுகலான தெருக்கள் முதல் மெட்ரோ ரயில் வழித்தடம் வரை நம்மைக் கைபிடித்து அழைத்துச்செல்கிறது கோகுல் பினாயின் ஒளிப்பதிவு. சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு த்ரில் காட்சிகளுக்குக் கூடுதல் பலம். உணர்வுகளின் அலைவரிசைக்கு ஏற்ப பயணிக்கிறது ஜஸ்டின் பிரபாகரனின் இசை.

ஃபர்ஹானா - சினிமா விமர்சனம்
ஃபர்ஹானா - சினிமா விமர்சனம்

ஒரு புதுக்கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து, தொய்வடையாத படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். அதேநேரம் இதை இஸ்லாமியப் பின்னணியில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன, முதன்முறையாக வேலைக்கு வரும் பெண்களை இத்தகைய கதைகள் அச்சுறுத்தி வீட்டுக்குள்ளேயே முடக்கிவிடாதா என்ற கேள்விகள் எழுகின்றன.

என்றாலும், தன் பிரச்னையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு பணியில் தொடர்ந்து பயணிக்கும் ஃபர்ஹானாவைப் பாராட்டலாம்.