Published:Updated:

Farhana Review: பரபர திரைக்கதை, க்ரைம் த்ரில்லராக மிரட்டல்; ஆனால் படத்திலிருக்கும் பிரச்னைகள் என்ன?

Farhana Review

சர்ப்ரைஸ் பேக்கேஜாக செல்வராகவன். பாதி படம் வரைக்குமே அவரின் முகம் காட்டப்படவில்லை என்றாலும் அவரின் குரலே தேவையானதைச் செய்துவிடுகிறது. குறிப்பாக, அவரின் குட்டு உடைந்தபின், வெளிப்படும் அந்தக் குரல் பயமுறுத்தவே செய்கிறது.

Published:Updated:

Farhana Review: பரபர திரைக்கதை, க்ரைம் த்ரில்லராக மிரட்டல்; ஆனால் படத்திலிருக்கும் பிரச்னைகள் என்ன?

சர்ப்ரைஸ் பேக்கேஜாக செல்வராகவன். பாதி படம் வரைக்குமே அவரின் முகம் காட்டப்படவில்லை என்றாலும் அவரின் குரலே தேவையானதைச் செய்துவிடுகிறது. குறிப்பாக, அவரின் குட்டு உடைந்தபின், வெளிப்படும் அந்தக் குரல் பயமுறுத்தவே செய்கிறது.

Farhana Review
ஒரு குடும்பத்திலிருந்து முதன்முதலாக வேலைக்குச் செல்லும் ஒரு குடும்பப் பெண், ஆபத்தானதொரு பிரச்னையில் மாட்டிக்கொண்டால் என்னவாகும் என்பதே `ஃபர்ஹானா' (Farhana).

இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் (ஃபர்ஹானா), அப்பா, கணவர் மற்றும் சொந்தங்களுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் குடும்பச் சூழ்நிலை காரணமாக அவர் வேலைக்குச் செல்ல நேரிடுகிறது. பெண்கள் என்றாலே வீட்டு வேலையையும் குடும்பத்துக்குத் தேவையான பணிவிடைகளையும் செய்தாலே போதும் என்ற பிற்போக்கு எண்ணம் கொண்ட அப்பாவையும் மீறி கால் சென்டர் வேலைக்குச் செல்கிறார். வேலை நன்றாகச் சென்றாலும் அதிக ஊக்கத்தொகை கிடைக்கும் மற்றொரு டிபார்ட்மென்ட்டின் பணி ஐஸ்வர்யா ராஜேஷின் ஆசையைத் தூண்டுகிறது. பணத்தேவை இருப்பதால் அந்த டிபார்ட்மென்ட்டுக்கு மாற்றலாகிப் போகிறார். ஆனால், அங்கிருக்கும் பணி அவர் நினைத்ததைவிடவே விபரீதமாக இருக்கிறது. வேறு வழியின்றி அங்கேயே பணியைத் தொடர்பவர், சமய சந்தர்ப்பத்தாலும், நிறுவன விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாலும் பெரியதொரு ஆபத்தில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பதே கதை.

Farhana Review
Farhana Review

ஃபர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷ். வேலைக்குச் சென்று சுயமாக முன்னேற வேண்டும் என்ற விருப்பம், அன்றாட பணிக்குச் செல்லும் பெண்களை வீட்டின் ஜன்னல் வழியே பார்த்து வெளிப்படுத்தும் ஏக்கம், அதிர்ந்து பேசாத குணம் எனச் சிறப்பானதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார். பிற்பாதியில் வெளிப்படும் குற்றவுணர்வு, கணவருடனான தயக்கம், புதிய நட்பு தரும் உற்சாகம் என வேறொரு பரிமாணத்தையும் யதார்த்தமாகக் கண் முன் நிறுத்துகிறார். கணவராக வரும் ஜித்தன் ரமேஷுக்கு வசனங்கள் குறைவுதான் என்றாலும், தன் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். சிக்கலான பிரச்னைகள் தலைதூக்கும்போது கூட இவர் வெளிப்படுத்தும் அமைதி, நம் பரிதாபத்தைச் சம்பாதித்துவிடுகிறது.

சர்ப்ரைஸ் பேக்கேஜாக செல்வராகவன். பாதி படம் வரைக்குமே அவரின் முகம் காட்டப்படவில்லை என்றாலும் அவரின் குரலே தேவையானதைச் செய்துவிடுகிறது. குறிப்பாக, அவரின் குட்டு உடைந்தபின், வெளிப்படும் அந்தக் குரல் பயமுறுத்தவே செய்கிறது. 'ஃபர்-ஹா-னா' என்று அவர் உச்சரிக்கும்போதே ஒருவித கிலி உணர்வு நமக்குமே எட்டிப் பார்க்கிறது.

பழைமைவாதம் நிரம்பிய மனிதராக, ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவாக கிட்டி என்கிற கிருஷ்ணமூர்த்தி. கோபத்தில் வெடித்துச் சிதறும்போது தன் அனுபவத்தைச் சிறப்பாகப் பறைசாற்றுகிறார். கால்சென்டர் ஊழியர்களாக, நண்பர்களாக வரும் ஐஸ்வர்யா தத்தா, அனுமோள், சக்தி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியைச் சரியாகச் செய்திருக்கின்றனர்.

Farhana Review
Farhana Review

ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்கு ஏற்ற இருக்கை நுனி திரைக்கதையை அமைத்து முடிந்தளவு பரபரப்புடன் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். குறிப்பாக அந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் வரும் இடைவேளை காட்சி, அதன் எடிட்டிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்துமே கவனிக்க வைக்கின்றன. முதல் பாதியின் தொடக்கத்தில் மிஸ்ஸான த்ரில் மோடை, இரண்டாம் பாதியில் முதலிலிருந்தே சேர்த்து கடைசி ஒரு மணி நேரம் அந்த எனர்ஜி குறையாதவாறு பார்த்துக் கொள்கிறார். அந்த வகையில் திரைக்கதை அமைத்த நெல்சன் வெங்கடேசன், சங்கர் தாஸ், ரஞ்சித் ரவீந்திரன் கூட்டணிக்குப் பாராட்டுகள். மனுஷ்யபுத்திரன், நெல்சன் வெங்கடேசன் கூட்டணியின் வசனங்கள் கவித்துவமும் அழுத்தமும் இணைந்து மனதை ஈர்க்கின்றன.

கோகுல் பினாயின் ஒளிப்பதிவு, ஐஸ்ஹவுஸின் குறுகலான சந்துகள், நெருக்கமான வீடுகள் போன்றவற்றைச் சிரத்தையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது. மெட்ரோ ரயில் காட்சிகள், அதிலும் குறிப்பாக டிராக் மாறும் காட்சிகள், அண்டர்கிரவுண்ட் ரயில் காட்சிகள் ஆகியவைப் படமாக்கப்பட்ட விதமும், அதைக் கதை சொல்லும் யுக்தியாகத் தேவையான இடங்களில் பயன்படுத்திய விதமும் சிறப்பு. சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு த்ரில் காட்சிகளுக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. முக்கியமாகப் படம் முழுவதுக்கும் உயிர் கொடுப்பது ஜஸ்டின் பிரபாகரனின் இசைதான். பாடல்கள் ஈர்க்கவில்லை என்றாலும் த்ரில்லர் காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது.

இந்தக் கதையில் இஸ்லாமியக் குடும்பமாகக் காட்டப்படுவதற்கான அவசியம் பெரிதாக இல்லாவிட்டாலும் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையை முடிந்தவரை எதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். முதன்முறையாக ஒரு பெண் வேலைக்குச் செல்கிறாள், அவள் ஒரு குற்றப் பின்னணியில் சிக்கிக் கொள்கிறாள், அவளுக்கும் அவள் குடும்பத்துக்கும் ஆபத்து என்பது போன்ற காட்சிகள் மறைமுகமாக அந்தப் பெண் பொருளாதார ரீதியாகச் சுதந்திரம் அடைவதற்கு எதிரான கருத்தியலாகவே பார்க்கப்படும் ஆபத்தும் உண்டு.
Farhana Review
Farhana Review

அதே சமயம், பிரச்னைகளைக் கண்டு முடங்கிவிடாமல் பாதிக்கப்பட்ட பெண்ணே துணிச்சலுடன் எதிர்கொள்வதும் புரிதலுடன் கணவன் துணை நிற்பதும் பாராட்டத்தக்கவை. பிரச்னையிலிருந்து மீண்டபின் மீண்டும் ஃபர்ஹானா இயல்பாக வேலைக்குச் செல்லும் காட்சி வரவேற்கத்தக்கது. கிருஷ்ணமூர்த்திக்கும் பக்கத்துக் பழக்கடை அம்மாவுக்குமான அந்த உரையாடல் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிந்தாலும், அதில் சொல்லப்பட்ட கருத்து பாராட்டுக்குரியது.

மொத்தத்தில், ஒரு க்ரைம் த்ரில்லராக திருப்தியளிக்கும் படைப்பாகவே வந்திருக்கும் `ஃபர்ஹானா'வில் இருக்கும் சில அரசியல் சிக்கல்களைக் களைந்திருந்தால் இன்னும் சிறப்பானதொரு படைப்பாக மாறியிருக்கும்.