Published:Updated:

"பிராமணியம் பற்றிப் பேசவில்லை என்றால் சாதி ஒழிந்துவிடுமா?" - கன்னட நடிகரின் பேச்சும், சர்ச்சைகளும்!

நடிகர் சேத்தன் குமார்

பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் ட்வீட் செய்தார், வீடியோவில் பேசினார் என கன்னட நடிகர் சேத்தன் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காரணம் என்ன ?

Published:Updated:

"பிராமணியம் பற்றிப் பேசவில்லை என்றால் சாதி ஒழிந்துவிடுமா?" - கன்னட நடிகரின் பேச்சும், சர்ச்சைகளும்!

பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் ட்வீட் செய்தார், வீடியோவில் பேசினார் என கன்னட நடிகர் சேத்தன் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காரணம் என்ன ?

நடிகர் சேத்தன் குமார்

சில நாட்களுக்கு முன்பு, கன்னட நடிகர் சேத்தன் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து பெரிய சர்ச்சையானது. '' 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவை எல்லாவற்றையும் மறுக்கிறது பிராமணியம். அதனால், அதனை களைந்தெறிய வேண்டும்' - அம்பேத்கர். 'நாம் அனைவரும் பிறப்பால் சமம் என்றாலும் பிராமணர்கள் மட்டும் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் அனைவரும் தாழ்ந்தவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கூறுவது முட்டாள்தனம். இது பெரிய புரளி' - பெரியார்'' என்று அம்பேத்கர், பெரியார் சொன்னதை எழுதி ட்வீட் செய்திருந்தார் சேத்தன் குமார்.

அவருடைய இந்த ட்வீட்டிற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத்தொடர்ந்து இந்த விஷயம் குறித்து பேசி வீடியோ வெளியிட்டார் சேத்தன் குமார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட பிராமணிய அமைப்புகள் புகார் அளித்ததன் பேரில் சேத்தன் குமார் மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

''நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை என நம்புகிறேன். அம்பேத்கர் மற்றும் பெரியார் சொன்னதைத்தான் பதிவிட்டிருந்தேன். கன்னட மண்ணில் நிறைய பிராமணர்கள் பிராமணியத்தை எதிர்த்து போராடியிருக்கிறார்கள். இந்த வழக்குப் பதிவு ஒரு மிரட்டல் தந்திரம்தான். இதனை சட்ட ரீதியாக சந்தித்துக்கொள்கிறேன். பிராமிணியத்தையும், சமத்துவமின்மையையும் எதிர்க்கும் அரசியல் பொறுப்பு எனக்கும் இருக்கிறது'' என்று இந்த வழக்குப்பதிவு குறித்து பேசியிருக்கிறார் சேத்தன் குமார்.

நடிகர் சேத்தன் குமார்
நடிகர் சேத்தன் குமார்

தொடர்ந்து அவருக்கு எதிர்ப்புகள் வந்தாலும், அவர் சொன்னது சரி என்று ஒரு கூட்டம் அவர் பக்கம் நிற்கிறது. மேலும், இது குறித்து இரண்டு வீடியோக்களை பதிவிட்ட சேத்தன் குமார், ''நான் பிராமணர்களை எதிர்க்கவில்லை, பிராமணியத்தைதான் எதிர்க்கிறேன்'' என குறிப்பிட்டிருந்தார். மேலும், ''கொரோனா வைரஸ் பற்றி பேசவில்லை என்றால் கொரோனா ஒழிந்துவிடுமா... இப்படித்தான் இருக்கிறது என்னை சாதி பற்றி பேசாதே, பிராமணியம் பற்றி பேசாதே என்று சொல்வது. சாதி பற்றி பேசித்தான் சாதியை ஒழிக்கமுடியும்'' என்று அவர் தொடர்ந்து பேசியிருக்கிறார். ட்விட்டரிலும் தொடர்ந்து தனது கருத்துகளைப் பதிவிட்டு வரும் இந்த சேத்தன் குமார் யார்... இவரின் பின்னணி என்ன?

சேத்தன் குமாரின் பூர்வீகம் கர்நாடகாவே தவிர, பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில்தான். அமெரிக்க குடிமகனும் கூட. அங்கே நாடகம் படித்து முடித்துவிட்டு, பெங்களூருவில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் இணைந்து பல்வேறு மேடை நாடகங்களில் பங்குபெற்றார். இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் வர, நாயகனாக கன்னட சினிமாவில் களமிறங்கினார் சேத்தன். 'ஆ தினகலு' என்ற இவரின் முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கிறது. ஆனால், அதன் பிறகு இவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் 'ரணம்' என்ற திரைப்படம் வெளியானது. அடுத்ததாக, இன்னும் மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் சேத்தன்.

நடிகர் சேத்தன் குமார்
நடிகர் சேத்தன் குமார்

சினிமா நடிகராக மக்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும் இந்த சமூகத்திற்காக பல இடங்களில் குரல் கொடுத்திருக்கிறார் சேத்தன். விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களுடன் சேர்ந்து போராடுவது, தலித் மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்க ஏற்பாடு செய்வது, LGBTQ மக்களுக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைப்பது, அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கும்படி அரசாங்கத்திடம் முறையிடுவது, இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து ஏரிகளை தூர்வாறி அவற்றை பராமரிக்க உதவுவது, பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் இறந்தபோது அதனை கண்டித்து குரல் கொடுத்தது என சமூக நலன் சார்ந்த பல விஷயங்களில் பங்கெடுத்திருக்கிறார் சேத்தன் குமார். தவிர இவர் Film Industry for Rights and Equality (FIRE) என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு அறக்கட்டளையும் நடத்தி உதவி செய்தும் வருகிறார்.

தன் மனதில் தோன்றும் கருத்துக்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் பொதுவெளியில் கூறிவரும் இவருக்கு ஆதரவாக ஒரு கூட்டம் இருந்தாலும், இவரை எதிர்ப்பவர்கள் இவரது படங்களையும் எதிர்க்கின்றனர். அவை எல்லாவற்றையும் கடந்து சினிமாவில் சமூகத்தில் தன்னுடைய பெயரை நிலைநாட்ட ஓடிக்கொண்டிருக்கிறார், சேத்தன்.