சினிமா
Published:Updated:

FIR - சினிமா விமர்சனம்

எப்.ஐ.ஆர்
பிரீமியம் ஸ்டோரி
News
எப்.ஐ.ஆர்

அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும் பிரசன்னா ஜி.கேயின் படத்தொகுப்பும் திரைக்கதையின் பதைபதைப்பைத் தக்க வைக்க உதவியிருக்கின்றன.

மதத்தின் அடிப்படையில் சிறுபான்மையினரைப் பொதுச்சமூகம் எப்படி சந்தேகக்கண்ணோடு பார்க்கிறது என்பதைப் பேச முற்படும் படமே இந்த ‘எப்.ஐ.ஆர்.’

கெமிக்கல் இன்ஜினீயரான விஷ்ணு விஷால் வேலையில்லாப் பட்டதாரியாக, காவல்துறையில் வேலை பார்க்கும் தன் அம்மாவோடு வாழ்ந்துவருகிறார். நாட்டில் நடக்கும் ஒரு பெரிய சதித்திட்டத்தில் அவருக்குப் பங்கு இருப்பதாய் நினைத்து அவரைக் கண்காணிக்கிறது தேசியப் புலனாய்வு முகமை. சந்தர்ப்பச் சூழ்நிலைகள் விஷ்ணு விஷாலுக்குப் பாதகமாய் அமைய, கைது செய்யப்படுகிறார். உண்மையில் இவற்றையெல்லாம் செய்வது யார், ஏன் விஷ்ணு விஷால் இதில் சிக்கினார் என்பவற்றையெல்லாம் விறுவிறு த்ரில்லராகச் சொல்கிறது இந்தப் படம்.

இர்பான் அஹமதாக விஷ்ணு விஷால் உடலைத் தீட்டி, நடிப்பில் மெருகேற்றி, முடிந்த அளவிற்கு கதாபாத்திரத்தில் பொருந்த முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார். தனக்குக் கொடுத்ததைச் சரியாகச் செய்திருக்கிறார் ரைஸா வில்சன். கெளதம் மேனனுக்கு வழக்கமான இங்கிலீஷ் பேசும் ஆபீஸர் வேடம். மஞ்சிமா மோகன், ரெபா, பார்வதி போன்ற மற்ற நடிகர்கள் இயக்குநர் நம்பிய ‘அரசியலை’ வசனமாகப் பேச உதவியிருக்கிறார்கள்.

FIR - சினிமா விமர்சனம்

அஸ்வத்தின் பின்னணி இசை த்ரில்லருக்கான பலம். அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும் பிரசன்னா ஜி.கேயின் படத்தொகுப்பும் திரைக்கதையின் பதைபதைப்பைத் தக்க வைக்க உதவியிருக்கின்றன.

ஒரு த்ரில்லருக்கான திரைக்கதையைக் கோத்தவகையில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக நினைக்கும் பொதுப்புத்தியைக் கேள்வி கேட்க நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அவரின் கதை சொல்லல் முறையே மதகுருவையும் விஷ்ணு விஷாலையும் சந்தேகத்திற்கு ரியவர்களாகக் காட்டுகிறது. படத்தில் வரும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்று, தேசத்திற்காக விருப்பு வெறுப்புகளைத் துறந்து தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள், இல்லையெனில் பயங்கரவாதிகளாக இருக்கி றார்கள். தங்கள் நாட்டுப் பற்றை அவர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்கிற ஆதிக்க மனநிலைக்கு வலுச்சேர்ப்பதாகவே இருக்கிறது இந்தக் கதை சொல்லல்.

FIR - சினிமா விமர்சனம்

இறுதியாக, கெளதம் மேனன் பிரதமர் போன்ற ஒருவருக்கே உண்மையைச் சொல்லாமல் இருப்பதன் அவசியம் என்ன? தவறே செய்யாத ஒருவர் அவப்பெயரைத் தூக்கிச் சுமக்க வேண்டிய தேவை என்ன? இப்படி படம் பேசும் அரசியலில் ஏகப்பட்ட ஓட்டைகள்.

அடக்குமுறைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாய்ப் பேசுகிறோம் என அரைகுறைப் புரிதலோடு அப்படியே எதிர்த்திசையில் பதிவாகியிருக்கிறது இந்த ‘எப்.ஐ.ஆர்.’