
ஒரு நல்ல கதை, அதுக்கான ஆட்களை அதுவாகவே தேடிக்கொள்ளும்னு சொல்வாங்க. அது உண்மைதான். இந்தக் கதையைத்தான் என் முதல் படமாகப் பண்ணியிருக்க வேண்டியது.
“இங்கே காதலை அழகியலோடு சொன்ன படங்களைப் பட்டியலிட்டால் ‘அழகி’, ‘பிரேமம்', ‘96' என நிறையவே சொல்லலாம். அதையெல்லாம் பார்க்கறப்ப உணர்வுபூர்வமா படத்தோட இணைஞ்சு ஃபீல் பண்ணியிருப்போம். காதலைப் போலவே காமமும் அழகான விஷயம்தான். அதிலும் பதின்பருவ வயதில் தோன்றும் காமத்தை ஒவ்வொருவருமே கடந்துதான் வந்திருப்போம். அந்த உணர்வை அழகியலோடு சொன்ன படங்கள் மிகக்குறைவு. இந்தப் படத்தைப் பார்க்கிறவங்க அத்தனை பேருக்கும் இதிலுள்ள சம்பவங்கள் அவ்ளோ கனெக்ட் ஆகும். மனசுல ஒரு இதமான உணர்வு வந்து ஒட்டிக்கும். அதனால்தான் கதைக்குப் பொருத்தமாக ‘பிளாஷ்பேக்'னு தலைப்பை வச்சிருக்கோம்'' - மனமகிழ்வுடன் பேசுகிறார் இயக்குநர் டான் சாண்டி. சிம்பன்ஸியுடன் ஜீவா நடித்த ‘கொரில்லா' படத்தை இயக்கியவர். இப்போது பிரபுதேவா, ரெஜினா கஸன்ட்ராவை வைத்து ‘பிளாஷ்பேக்'கை மலர வைக்கிறார்.

``இப்படி ஒரு கதையில் பிரபுதேவா, ரெஜினா எப்படி வந்தாங்க?’’
‘‘ஒரு நல்ல கதை, அதுக்கான ஆட்களை அதுவாகவே தேடிக்கொள்ளும்னு சொல்வாங்க. அது உண்மைதான். இந்தக் கதையைத்தான் என் முதல் படமாகப் பண்ணியிருக்க வேண்டியது. ஆனா, காமெடிக் கதையாக எல்லாரும் விரும்பியதால் ‘கொரில்லா'வை இயக்கினேன். தயாரிப்பாளர் ரமேஷ் சார்கிட்ட இந்தக் கதையைச் சொன்னதும், சந்தோஷமா தயாரிக்க முன்வந்தார். இந்தக் கதையை நிறைய கதாநாயகர்கள்கிட்ட சொல்லியிருப்பேன். அவங்க அத்தனை பேருமே இதுல நடிக்க பயந்தாங்க, தயங்கினாங்க.
ஆனா, பிரபுதேவா சார் இந்தக் கதையைக் கேட்டதும், ஆச்சரியமானார். ‘செமயா யோசிச்சிருக்கீங்க'ன்னு பாராட்டினார். படத்துல எழுத்தாளராக வர்றார். பிரபுதேவான்னாலே இப்படித்தான் வருவார், அப்படித்தான் நடிப்பார்னு இருக்கிற எண்ணத்தை இந்தப் படம் மாத்திடும். நீங்க ரைட்டரா வர்றீங்கன்னு சொன்னதும் ‘நான் எப்படி இந்த கேரக்டருக்குப் பொருந்தமா இருப்பேன்னு யோசிச்சீங்க’ன்னு கேட்டார். அவர் இயக்குநராகவும் இருக்கறதால, எழுத்தும் அவருக்கு எளிதானதுதானேன்னு சொன்னேன். என் லாஜிக்கை ரசித்தார்.



இந்தக் கதையை ஹீரோக்கள் நிறைய பேர்கிட்ட எப்படிச் சொன்னேனோ, அப்படி ஹீரோயின்கள் நிறைய பேர்கிட்டேயும் சொன்னேன். ‘சூப்பரா இருக்குங்க'ன்னு முகமலர்ச்சியோடு சொல்வாங்க. ஆனா, கடைசியில ‘நடிக்க மாட்டேன்'னு சொல்லிடுவாங்க. ரெஜினா இந்தக் கதையைக் கேட்டதும், ‘இதெல்லாம் வாழ்க்கையில நடக்கற விஷயங்கள்தானே’ன்னு சொன்னதோடு, ‘எப்போ படப்பிடிப்பு’ன்னு கேட்டாங்க. இதுல அவங்க டீச்சரா நடிக்கிறாங்க.
இதுல பிரபுதேவா, ரெஜினா தவிர, தெலுங்கில் பிரபலமான அனுசுயா பரத்வாஜும் முக்கியமான ரோல்ல நடிச்சிருக்காங்க. இளவரசு, உமா ரியாஸ், இவங்களோடு புதுமுகங்கள் நிறைய பேர் நடிச்சிருக்காங்க. ஆர்யா நடிச்ச ‘டெடி' படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணின எஸ்.யுவா, இதுக்கும் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். சாம் சி.எஸ். இசையமைச்சிருக்கார். சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனிச்சிருக்கார்.''



``டிரெய்லரைப் பார்த்தவர்கள் ‘இது ஹாலிவுட்ல மோனிக்கா பெலூச்சி நடித்த ‘மெலினா' பட சாயல்ல இருக்குன்னு சொல்றாங்களே?’’
‘‘என்கிட்டேயும் அப்படிக் கேட்டாங்க. அஜித்தின் ‘துணிவு' டிரெய்லர் வெளியானதும் ‘இது மணி ஹெய்ஸ்ட் தொடர்பான கதை'ன்னு சொன்னாங்க. ஆனா, படமா வந்ததும் வேற ஒரு கதையா இருந்துச்சு. அதைப்போல, இந்தப் பட டிரெய்லரைப் பார்த்தவர்களுக்கு இது ‘மெலினா'வாகத் தோணியிருக்கலாம். ஆனா, இது அது கிடையாது. இந்தக் கதை எப்பவோ தோணின கதை. ஒருமுறை மகாத்மா காந்தியோட சுயசரிதையான ‘சத்திய சோதனை’யை வாசிச்சேன். அதைப் படிக்கறப்ப ஒரு வரி என்னை உலுக்கிடுச்சு. பதின்பருவ வயதில் அவர் காமத்தைக் கடக்க முடியாமல் அவதிப்பட்டதைப் பத்தி எழுதியிருந்தார். அதில் அவர் சொன்ன விஷயம் இது. ‘என் தந்தை இறக்கும் தறுவாயில் நான் என் மனைவியுடன் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்' என்று எழுதியிருந்தார். அந்த வரியில் தோணின கருவே இந்தக் கதை. காந்திஜி தன் சுயசரிதையில் இப்படி ஒரு விஷயத்தைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். ஆனால், தைரியமாக இதைச் சொல்லியிருக்கார். அதனாலதான் டிரெய்லரில்கூட இந்த வரிகளை வைத்திருந்தேன். பாலுமகேந்திரா சார் ‘அழியாத கோலங்கள்' படத்தில் காதலைச் சொல்லாமல் காமத்தைச் சொல்லியிருப்பார். ஒருவகையில் அந்தப் படத்தின் இன்ஸ்பிரேஷனும் எனக்கு வந்திருக்கலாம். ஆனால் இந்த ‘பிளாஷ்பேக்'கில் 1990 காலகட்டத்தின் இனிமையான நினைவலைகள் நிறையவே இருக்கு.''