
படத்துல மொத்தம் மூணு ஹீரோ... அதுல முக்கியமானவர் கான்ட்ராக்டர் நேசமணி!
நண்பர்களின் கதை. எக்கச்சக்க காமெடி, எதிர்பாராத க்ளைமாக்ஸ் என்று களம் இறங்கியிருக்கிறார் டைரக்டர் சித்திக்.விஜய், சூர்யா, ரமேஷ்கண்ணா மூவரும் உயிர் நண்பர்கள். இவர்களின் நட்பு வளையத்துக்கு நேரும் சோதனைகளை அந்த நட்பு டீம் எப்படிச் சமாளித்து ஜெயிக்கிறது என்பதுதான் கதை.

படத்தின் முன்பாதியில் விஜய் தர்பார். அடிதடி, ஆட்டம், பாட்டம், `ல்தகா சைஆ' (திருப்பிப் போட்டுப் படிக்கணுமாம்!). விளையாடுகிறார். இரண்டாம் பாதியில் சூர்யா காலம். சீற்றம், குமுறல் என்று பிரமிக்கும் விதமாக, தன் காரெக்டரில் அசத்துகிறார் சூர்யா.சூர்யாவின் காதலியாக வளையவரும் விஜயலட்சுமி `ஸோ க்யூட்...!'நட்புதான் கதைக்கான அடிப்படை என்று எடுத்துக்கொண்ட பிறகு ஒரு மரணமும் அதை தொடர்ந்த குற்ற உணர்ச்சியும்தான் அந்த நட்புக்குப் பின்னணி என்று சொல்லும் போது விஜய்-சூர்யா நட்பின் ஈர்ப்பு வெகுவாக குறைந்து போகிறது நமக்கு.
படத்தின் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட், வடிவேலு அண்ட் கோ அடிக்கும் லூட்டி. வடிவேலுவின் கோஷ்டி அந்த ஜமீன் வீட்டில் பெயிண்ட் அடிக்கப் புகுந்தவுடன் தியேட்டர் சிரிக்கிறது பாருங்கள்... ஆஹா, அந்த அரைமணி நேரம் செம காமெடி ரகம்!ரேக்ளா ரேஸ் காட்சிகளில் ஆனந்தக்குட்டனின் காமிரா சிலிர்க்க வைக்கிறது. `ருக்கு ருக்கு' பாட்டை டீக்கடை பெஞ்சுகளுக்கும் திருவிழா கச்சேரிகளுக்கும் அமர்க்களமாக அர்ப்பணித்திருக்கிறார் இசைஞானி.

முன்பாதியில் கலகலப்பான காட்சிகளில் காமெடி கும்பமேளா கொண்டாடியிருக்கிறார் டைரக்டர் சித்திக். இரண்டாம் பாதியில் ஆளுக்கொரு பகையை வைத்துக்கொண்டு அரை மணிக்கொரு காரெக்டர் வில்லத்தனம் காட்டி சீறுவதும் பிறகு மாறுவதும் நம் பொறுமைக்கு பரீட்சை!
- விகடன் விமரிசனக் குழு