
கேரள நிலப்பகுதி, பொள்ளாச்சி நிலப்பகுதி, குஸ்தி ஆடுகளம் என ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் கேமரா படத்திற்கு அழகைச் சேர்த்திருக்கிறது.
சாதிக்க நினைக்கும் பெண், ஆடுகளத்து சக போட்டியாளர் களுடன் மட்டுமல்ல, குடும்பம் விதிக்கும் தடைகளையும் எதிர்த்து ஆடும் ஆட்டமே ‘கட்டா குஸ்தி.'
பெண் என்றால் அதிகம் படித்திருக்கக்கூடாது, அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும், பெண்ணுக்கு அழகே நீளமான கூந்தல் என்று நினைக்கும் பிற்போக்கான கிராமத்து இளைஞன் வீரா (விஷ்ணு விஷால்). முடியைக் கத்தரித்து, கேரளப் பாரம்பரிய தற்காப்புக்கலையான ‘கட்டா குஸ்தி'யில் பதக்கங்கள் பெற்று, இன்னும் சாதிக்கும் கனவில் இருக்கும் பெண் கீர்த்தி (ஐஸ்வர்யா லெட்சுமி). சிலபல பொய்கள் சொல்லி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார் கீர்த்தியின் சித்தப்பா (முனீஸ்காந்த்). உண்மை வெளியானதா, இருவரின் திருமண வாழ்க்கை நிலைத்ததா என்பதைக் கலகலப்பாகச் சொல்கிறது கதை.

ஆண்திமிருடன் ஆணைகள் பிறப்பிப்பதும் உண்மை தெரிந்ததும் அப்படியே யு-டர்ன் அடித்து அடங்குவதுமாக ‘வீரா' கதாபாத்தி ரத்துக்குக் கச்சிதம் விஷ்ணு விஷால். ஹீரோயின் பாத்திரத்துக்குப் பெரிய ஸ்பேஸ் கொடுத்து நடித்துள்ளதற்கு வாழ்த்துகள் விஷ்ணு! கதையின் நாயகி, கட்டா குஸ்தி வீராங்கனையாக ஐஸ்வர்யா லெட்சுமி கலக்கியுள்ளார். ஆடுகளத்திலும் நிஜக்களத்திலும் அடித்து நொறுக்குவதும், தன் உண்மை முகத்தை மறைத்துக் குடும்ப வாழ்க்கை நடத்துவதும் என்று இரு பரிமாணங்களிலும் அசத்தல் லெட்சுமி. பொதுப்பிரச்னைக்காகக் குரல் கொடுக்கும் நேர்மையான மனிதர் என்றாலும் வீட்டில் ஆணாதிக்கவாதியாக வாழும் எதார்த்தத்தைக் கலகலப்பாகப் பிரதிபலிக்கிறார் கருணாஸ். காளிவெங்கட், ரெடின் கிங்ஸ்லியும் நகைச்சுவைக்குத் தோள் கொடுக்கிறார்கள். ‘‘சார்பட்டா பரம்பரை பார்த்திருக்கியா?’’ என்று விஷ்ணு விஷாலிடம் கேட்டு ரெடின் சொல்லும் பதில் அதகளம்.
கேரள நிலப்பகுதி, பொள்ளாச்சி நிலப்பகுதி, குஸ்தி ஆடுகளம் என ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் கேமரா படத்திற்கு அழகைச் சேர்த்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையும் ‘மைக் டைசன்' பாடலும் சிறப்பு. பிரசன்னா ஜி.கே-வின் படத்தொகுப்பு, படத்தைத் தொய்வின்றி நகர்த்துகிறது.

ஆண்மை என்றால் வீரம் போன்ற கற்பிதங்களையும், குடும்ப அமைப்பு பெண்களின் முன்னேற்றத்துக்கு விதிக்கும் தடைகளையும் கலகலப்பான திரைக்கதை வழியாகக் காட்சிப்படுத்தியதற்கு செல்லா அய்யாவுவிற்கு வாழ்த்துகள். அதேநேரத்தில் கடைசிவரை ஆணாதிக்க கருணாஸிடம் எந்தவித மாற்றமும் ஏற்படாதது, ஐஸ்வர்யா லெட்சுமிக்கு விஷ்ணு விஷால்மீது வரும் காதலுக்கு அழுத்தமான காரணங்கள் இல்லாதது, க்ளைமாக்ஸில் ஆணே வெற்றிபெறுவது போல் காட்டுவது என்று பேசும் விஷயத்தில் முழுமையும் தெளிவுமில்லை. இரண்டு வில்லன்களும் எதற்கென்று தெரியாமல் வந்துபோகிறார்கள்.
சின்னச்சின்னக் குறைகள் இருந்தாலும் பெண்களின் பிரச்னைகளை சுவாரஸ்யமான காட்சிகள் வழியே சொல்லியிருக்கும் இந்தக் கலகலப்பான குஸ்திக்குக் கைதட்டலாம்.