
எத்தனை தடவ பார்த்தாலும், இந்தப் படம் சலிக்கறதே இல்ல!!!
கொஞ்சம் கபடி... கொஞ்சம் காதல்... எக்கச்சக்க அடிதடி என சரியான ஆக்ஷன் மசாலா!சீறிப் பாயும் சிவகாசி ராக்கெட் போல படம் முழுக்க வேகம்... வேகம். தெலுங்கின் சூப்பர்ஹிட் படம் `ஒக்கடு'-வின் ரீமேக் இந்தக் கில்லி. ஜாக்கிசான் ஸ்டைல் படம் பார்ப்பதுபோல ஆர்வப் படுத்தியிருப்பதுதான் பெரிய ப்ளஸ். `தில்', `தூள்'க்குப் பிறகு `கில்லி'... டைரக்டர் தரணிக்குக் கலாட்டா ஹாட் ட்ரிக்..!போலீஸ் அதிகாரி ஆஷிஷ் வித்யார்த்தியின் மகன் விஜய், அப்பாவுக்குத் தெரியாமல் கபடிக் காதலுடன் அலைகிற பையன். வீட்டுக்குத் தெரியாமல் கபடி மேட்ச் ஒன்றுக்காக விஜய் தன் டீமுடன் மதுரை செல்கிறார். அங்கே மந்திரி மகன் பிரகாஷ்ராஜ், தன் வயதில் பாதி தானிருக்கிற த்ரிஷாவை விரட்டி மிரட்டி `செல்லமே... செல்லமே' என வெறிநாய் போலத் துரத்திக் கொண்டிருக்கிறார். தட்டிக்கேட்கிற த்ரிஷாவின் இரண்டு அண்ணன்களையும் வெட்டி குத்திச் சாய்க்கிறார். தப்பித்து ஓடுகிற த்ரிஷாவை அவர் இழுத்துச்செல்ல முற்படும்போது, தற்செயலாக அந்தப் பக்கம் வருகிற விஜய், தடுத்துக் காப்பாற்றி சென்னைக்கு அழைத்துச் செல்கிறார். பிரகாஷ்ராஜ் குரோதத்துடன் இருவரையும் தேடி அலைவதும் அந்த அராஜக சவால்களை விஜய் சமாளிப்பதும்தான் படம்.மிகச் சாதாரண காதல் கதைதான். ஆனால் திரைக்கதை... ஏரோப்ளேன் பெட்ரோல். பொருத்தமாக பரதனின் வசனங்கள்... வத்திக்குச்சிப்பெட்டி!

உற்சாகப் புயலாக விஜய். ஆகாசத்துக்கும் பூமிக்குமாக பறக்கிற பையன் அடிதடியிலும் காமெடியிலும் பிரமாதமான ஸ்கோப். ஆட்டத்திலும் அப்படியொரு நளினம். விஜய்க்கு கில்லி ஒரு வெற்றிப்புள்ளி!த்ரிஷாவுடன் விஜய் ஓட்டம் எடுப்பதில் படமும் ஸ்பீடெடுத்து விடுகிறது. சுற்றி வீச்சரிவாளோடு நிற்கிற தாதாவின் படைகளை விஜய் சமாளிக்கிற ஸீன்கள் அத்தனையும் பளிச்... பளிச். காட்சிக்குக் காட்சி ஈடுகொடுத்து ஓடியிருக்கிற கோபிநாத்தின் காமிரா, சண்டைக் காட்சிகளில் வேகம் என்றால், பாடல் காட்சிகளில் மேகம்! குறிப்பாக சேஸிங் காட்சிகள் ரொம்பநாளைக்குப் பேசப்படும். ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஸுக்கும் எடிட்டர் விஜயனுக்கும் ஸ்பெஷல் பொக்கே!கபடி, அடிதடி என ஊரைச் சுற்றித் திரிந்துவிட்டு, வீட்டுக்கு அடங்கின பிள்ளை மாதிரி நடிக்கிற விஜய், மாடி வழியே தனக்கென தனி வழி அமைத்துக் கொண்டு, வீட்டுக்குள் நுழைவதும் அவரது அப்பாவி குடும்பம் அது தெரியாமல் அவரை நம்புவதும் காமெடி டைம். விஜய்யின் தங்கையாக வருகிற ஜெனிபர், சுறுசுறு சுட்டிப் பட்டாசு.கோடி ரூபாய் செட்டாமே! லைட் ஹவுஸை ஒட்டி அமைந்திருக்கிற அந்த ஏரியா படு யதார்த்தம். ஆர்ட் டைரக்டர் மணிராஜ் ரொம்பவே உழைத்திருக்கிறார்.த்ரிஷாவை மையமாக வைத்துதான் கதை. பொண்ணு அழகுதான் என்றாலும் அவருக்கு இதில் பெரிதாக வேலை இல்லை. மருண்ட விழிகளுடன் முதல் பாதி, காதல் பார்வையுடன் இரண்டாம் பாதி என்று சிம்பிளாக வருகிறார். லைட்ஹவுஸ் பின்னணியில் இதமான மெலடிபோட வேண்டிய இடத்திலும் அதிரடி பாட்டு கேட்டு வாங்கியிருக்க வேண்டுமா? அதனால் காரெக்டருக்குச் சம்பந்தமே இல்லாமல் அந்தப் பாடலில் த்ரிஷா முரட்டு ஆட்டம் ஆட வேண்டியதாகிவிட்டதே!

மதுரை மைனராக வருகிற பிரகாஷ்ராஜ், த்ரிஷாவிடம் அவ்வப்போது உருகலான குரலில் `செல்லம்... ஐ லவ் யூ!' என்று கொஞ்சுவதெல்லாம் சரியான கிச்சுகிச்சு. வித்யாசாகரின் இசையில் த்ரிஷாவின் தாவணிப்பாட்டு தவிர, மற்றதெல்லாமே டப்பாங்குத்து ரகம். `தூள்' ஸ்டைல் அதிரடி இசை இதிலும் தொடர்கிறது. பாராட்டுக்கள்..!

படத்தின் கிளை நாதமாய் வருகிறது கபடி. முதல் போட்டி பரபர... க்ளைமாக்ஸ் ஆட்டமோ... சொதசொத. முதல் பாதியில் தந்த பிரமிப்பை தக்கவைக்க இரண்டாம் பாதியில் திணறியிருக்கிறார்கள். ஸ்டேட் லெவல் கபடி வீரர் வீட்டுக்கே தெரியாமல் வலம்வருவது, மதுரையில் செமிஃபைனலில் சொதப்பியவர்கள் ஃபைனலுக்கு வருவது, பஸ் டிக்கெட் போல படு ஈஸியாக பாஸ்போர்ட் வாங்குவது, ஒட்டு மொத்த போலீஸ்படையும் தேடுகிற விஜய் கபடி ஆடுவதை போலீஸ், அமைச்சர் என அத்தனை பேரும் வேடிக்கை பார்ப்பது என லாஜிக் மறந்த காட்சிகள் படத்தில் நிறைய!இருந்தாலும் கில்லி - சம்மர் ஜாலி!
- விகடன் விமரிசனக் குழு