
பெரும் வலியைச் சுமந்துகொண்டிருப்பவராக தன் கதாபாத்திரத்திற்குத் தேவையான மெல்லிய நடிப்பைக் குறைகளின்றி வழங்கியிருக்கிறார் மீதா ரகுநாத்
குறட்டைப் பிரச்னையால் ஓர் இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை காமெடியாகச் சொல்லும் படமே ‘குட் நைட்.'
ஐ.டி-யில் பணிபுரியும் மோகன் (மணிகண்டன்), தன் அம்மா, அக்கா, அக்காவின் கணவர், தங்கை ஆகியோருடன் நிறைவாக வாழ்ந்துவருகிறார். ஆனால், அவருக்கு இருக்கும் குறட்டைப் பிரச்னையால் காதல் வாழ்க்கையில் சிக்கல், அலுவலகத்தில் சிக்கல் எனப் பல இன்னல்களைச் சந்திக்கிறார். இப்படியான சூழலில், தன் அக்காவின் கணவர் மூலம் (ரமேஷ் திலக்) அனுவுடன் (மீதா ரகுநாத்) பழக்கம் ஏற்பட, அது காதலாகித் திருமணத்தில் முடிகிறது. குறுகிய காலத்தில் அவரின் வாழ்க்கையே மாறிவிட, குறட்டைப் பிரச்னை குறுக்கே வந்து நிற்கிறது. அதனால் அடுத்தடுத்து அவருக்கு நிகழும் பிரச்னைகள் என்னென்ன, அவற்றிலிருந்து அவர் மீண்டு வந்தாரா என்பதே படத்தின் கதை.

குறட்டைப் பிரச்னையால் ‘மோட்டார் மோகன்’ என்ற அடைமொழியுடன் வலம் வரும் மணிகண்டன் ஆற்றாமை, உளவியல் சிக்கல்கள் என நுண்ணுணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டு இயல்பாக வசீகரிக்கிறார். பெரும் வலியைச் சுமந்துகொண்டிருப்பவராக தன் கதாபாத்திரத்திற்குத் தேவையான மெல்லிய நடிப்பைக் குறைகளின்றி வழங்கியிருக்கிறார் மீதா ரகுநாத். இவர்களைத் தாண்டி படத்தைக் கலகலப்பாக்குவது ரமேஷ் திலக்கின் டைமிங் பன்ச்கள்தான். மணிகண்டனுக்கும் இவருக்குமான காமெடி கெமிஸ்ட்ரி அட்டகாசம். தன் மனைவியின் உடல்நலச் சிக்கலால் உடைந்து அழும் இடத்தில் தான் ஒரு திறமையான நடிகர் என்பதையும் நிரூபிக்கிறார் ரமேஷ் திலக். அக்காவாக வரும் ரேச்சல் ரெபேக்காவின் தனிக்கதை பேசும் ஆழமான கருத்துகள் கவனத்தில்கொள்ள வேண்டியவை. ‘‘குழந்தை இல்லைன்னா எனக்கு வேல்யூ இல்லையா?’’ என்று அவர் பேசும் வசனமும் அந்தக் காட்சியும் அப்ளாஸ் ரகம். அனுவின் ஹவுஸ் ஓனராக வரும் பாலாஜி சக்திவேல் - கௌசல்யா ஜோடி சர்ப்ரைஸ் பேக்கேஜ்.
காமெடி காட்சிகளுக்குத் தேவையான ரகளையான பின்னணி இசையைச் சிறப்பாகக் கொடுத்தி ருக்கிறார் ஷான் ரோல்டன். ‘நான் காலி' பாடல் முணுமுணுக்க வைக்கிறது. ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும், பரத் விக்ரமனின் எடிட்டிங்கும் ஒரு இயல்பான படத்துக்கு வேண்டியதைக் கச்சிதமாகச் செய்திருக்கின்றன.

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் முதல் பாதியை எந்த மீட்டரும் குறையாத ஃபீல் குட் காட்சிகளால் நிரப்பியிருக்கிறார். குறட்டைப் பிரச்னை, காதல் எபிசோடு எனக் கலகலப்பாகவும் யதார்த்தமாகவும் படத்தை நகர்த்தியது ப்ளஸ். ஆனால், இரண்டாம் பாதி தடுமாறி எங்கெங்கோ செல்கிறது. ரேச்சல் ரெபேக்காவின் கிளைக்கதை யூகிக்கக் கூடியதாக முடிவதும் சறுக்கல். ஹீரோ தங்கை காதல் பிரச்னையும் தேவையற்ற இடைச்செருகல். ஆங்காங்கே வெளிப்படும் நாடகத் தன்மையும் படத்துக்கு மைனஸ்.
மெலோ டிராமா உணர்வு மேலிட்டாலும் ஆத்மார்த்தமான படைப்பாக ரசிக்கவே வைக்கிறது இந்த ‘குட் நைட்.'