Published:Updated:

Good Night Review: குறட்டைப் பிரச்னை உண்மையிலேயே பெரும் பிரச்னையா? கலகலப்பூட்டும் காமெடி டிராமா!

Good Night Review

மிகவும் யதார்த்தமான மாமன் - மச்சானாக ரமேஷ் திலக், மணிகண்டனின் கெமிஸ்ட்ரி அசத்தல். அதிலும் ரமேஷ் திலக் அடிக்கும் ஒன்லைனர்கள் காமெடி சரவெடி.

Published:Updated:

Good Night Review: குறட்டைப் பிரச்னை உண்மையிலேயே பெரும் பிரச்னையா? கலகலப்பூட்டும் காமெடி டிராமா!

மிகவும் யதார்த்தமான மாமன் - மச்சானாக ரமேஷ் திலக், மணிகண்டனின் கெமிஸ்ட்ரி அசத்தல். அதிலும் ரமேஷ் திலக் அடிக்கும் ஒன்லைனர்கள் காமெடி சரவெடி.

Good Night Review
`குறட்டைதானே!' என நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் விஷயம் ஓர் இளைஞரின் வாழ்க்கையில் எந்த அளவு பிரச்னைகளை உருவாக்குகிறது என்பதை காமெடி டிராமாவாகச் சொல்லும் படம்தான் `குட் நைட்'.

ஐ.டி துறையில் பணிபுரியும் நடுத்தர இளைஞன் மோகனுக்கு அம்மா, அக்கா, தங்கை, அக்கா கணவர் என நிறைவான குடும்பம். ஆனால், 'மோட்டார்' மோகன் என கலாய்க்கும் அளவுக்கு குறட்டை பிரச்னை அவரை படாதபாடு படுத்துகிறது. ஒருகட்டத்தில் கைகூடப்போகும் காதல்கூட இதனால் நிராகரிக்கப்படுகிறது. இப்படியான சூழலில், ஒரு நாள் வாட்டர் ஃபில்டர் சர்விஸ்மேனான அக்கா கணவர் ரமேஷ் திலக்கிற்கு உதவிசெய்ய உடன் செல்லும் மோகன் அங்கு அனுவை (மீதா ரகுநாத்) சந்திக்கிறார். காமெடியாகத் தொடங்கும் அந்தச் சந்திப்பு காதல், திருமணம் என மோகன் வாழ்க்கையில் அதுவரை இல்லாத மகிழ்ச்சியை கொண்டுவருகிறது.

Good Night Review
Good Night Review

குறட்டை பிரச்னை மீண்டும் என்ட்ரி கொடுத்து அனைத்தையும் புரட்டிபோட, மோகன் எப்படி அவை அனைத்திலிருந்தும் மீள்கிறார் என்பதை ஃபீல் குட் படமாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகர். அதில் பெருமளவில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

மோகனாக மணிகண்டன். குறட்டை பிரச்னை, அதைத் தீர்க்க முடியாத ஆற்றாமை, அதனால் அவர் சந்திக்கும் உளவியல் சிக்கல்கள் என மிகவும் சவாலான கதாபாத்திரம். அதன் நுண்ணுணர்வுகளைப் பார்வையாளர்களுக்குச் சிறப்பாகக் கடத்தியிருக்கிறார். தன் மாமாவான ரமேஷ் திலக்குடன் மாடியில் உட்கார்ந்து மது அருந்திக்கொண்டே புலம்பும் காட்சியில் ஒரு சிறப்பான நடிகராக மிளிர்கிறார். அனுவாக மீதா ரகுநாத். தன்னை துரதிர்ஷ்டசாலியாக எண்ணியபடியே, உள்ளுக்குள் பெரும் வலியைக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணாகத் தன் கதாபாத்திரத்திற்குத் தேவையான மெல்லிய நடிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கிறார்.

Good Night Review
Good Night Review

அக்காவாக ரேச்சல் ரெபேக்காவும், அக்கா கணவராக ரமேஷ் திலக்கும் நடித்திருக்கிறார்கள். துவண்டுபோகும் மணிகண்டனுக்குத் தோள்கொடுக்கும் முக்கிய கதாபாத்திரங்கள். மிகவும் யதார்த்தமான மாமன் - மச்சானாக ரமேஷ் திலக், மணிகண்டனின் கெமிஸ்ட்ரி அசத்தல். அதிலும் ரமேஷ் திலக் அடிக்கும் ஒன்லைனர்கள் காமெடி சரவெடி. இவர்கள் தவிர்த்து, அனுவின் ஹவுஸ் ஓனராக வரும் பாலாஜி சக்திவேல் ஜாலியான மனிதராக நம் பக்கத்துவீட்டு அங்கிளை நினைவூட்டிக் கலகலக்க வைக்கிறார்.

ஷான் ரோல்டன் இசை படத்திற்குப் பெரிய பலம். `நான் காலி' பாடல் திரையரங்குகளை விட்டு வெளியே வந்த பிறகும் முணுமுணுக்க வைக்கிறது. ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவும், பரத் விக்ரமனின் எடிட்டிங்கும் ஒரு ஃபீல் குட் படத்திற்கு என்ன வேண்டுமோ அதைக் கச்சிதமாகச் செய்திருக்கின்றன.

முதல் பாதியில் நல்ல ஃபீல் குட் படமாக நம்மைக் கவரும் படம் இரண்டாம் பாதியில் டிராமா கொஞ்சம் தூக்கலாகி நம் பொறுமையை ஆங்காங்கே சோதிக்கிறது. குறட்டைப் பிரச்னையை மையமாக வைத்துத் தொடங்கும் கதை, இரண்டாம் பாதியில் வழிமாறி எங்கெங்கோ சென்றுவிடுகிறது. ரேச்சல் ரெபேக்காவை மையமாக வைத்து வரும் கிளைக்கதை யூகிக்கக்கூடியதாக இருப்பதும் சறுக்கல். ஆனால், "குழந்தை இல்லைன்னா எனக்கு வேல்யூ இல்லையா?" என்று அவர் பேசும் வசனமும் அந்தக் காட்சியும் அப்ளாஸ் ரகம்.

Good Night Review
Good Night Review

இவற்றைத் தாண்டி, இரண்டாம் பாதியில் மணிகண்டன் - மீதா ரகுநாத் இடையிலான பிரச்னை, ஒரு சாதாரண புரிதல் சிக்கலாகவே மட்டுமே புலப்பட, அதற்காக மட்டுமே படத்தை நீளமாக இழுத்திருப்பது சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. வெளிநாட்டு வேலை, பிரிதலுக்கான ஏர்போர்ட் பயணம் என அதிலும் சில 'வழக்கமான' காட்சிகள் நெருடல்.

மெலோ டிராமாவாக இரண்டாம் பாதி கொஞ்சம் சோதித்தாலும், மொத்தத்தில் ஒரு சிறப்பான என்டர்டெயினராக ரசிக்கவே வைக்கிறது இந்த `குட் நைட்'.