தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி தனது 8 வயதிலேயே பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு பெரியவரான பிறகும் சில பாலிவுட் படங்களில் நடித்தவர், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அறிமுகமானார். தற்போதுவரை தென்னிந்திய மொழிப்படங்களில் அதிகமாக நடித்துள்ள ஹன்சிகா, இந்த ஆண்டு தொடக்கத்தில் தன் நண்பரான சோஹைல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து அவரின் கரியர், காதல், கல்யாணம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் 'லவ் ஷாதி டிராமா' என்ற டாக்குமென்ட்ரி சீரிஸில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். இதில் கடந்த வாரம் தனது திருமணம் குறித்துப் பேசினார்.

தனது தோழியின் காதலனைப் பறித்துக்கொண்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கமளித்தார். தற்போது வேறு ஒரு பிரச்னை குறித்துப் பேசியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்தவர் எப்படிக் குறுகிய கால இடைவெளியில் (2003 - 07 - 4 வருடங்கள்) இந்த அளவுக்கு வேகமாக வளர்ந்தார் என்ற கேள்வி அவர் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானபோதே எழுந்தது. ஹன்சிகா வேகமாக வளர அவரது தாயார் ஹார்மோன் ஊசி போட்டிருக்கலாம் என்று பல பத்திரிகைகள் செய்தி வாசித்தன. இந்த வதந்தி குறித்து தற்போது ஹன்சிகா தனது தாயாருடன் சேர்ந்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "பெரும்பாலான பிரபலமானவர்கள் கொடுக்கும் விலை இதுதான். எனக்கு 21 வயதாக இருந்த போது இதைப்பற்றி எழுதினார்கள். நான் எதைப் பற்றிச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் நான் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்போதே அச்செய்தியை நான் எதிர்த்துப் பேசியிருக்க வேண்டும். இப்போது அதைப் பற்றிப் பேச ஒன்றுமில்லை. நான் வளர ஊசி போட்டுக்கொண்டதாக எழுதினார்கள். நான் 8 வயதில் நடிகையானேன். நான் பெண்ணாக வேகமாக வளர எனது அம்மா எனக்கு ஹார்மோன் ஊசி போட்டதாக மக்கள் சொன்னார்கள்..." என்று ஹன்சிகா தெரிவிக்க,

உடனே அவருக்கு அருகிலிருந்த ஹன்சிகாவின் தாயார் இது குறித்துக் கூறுகையில், "இந்தச் செய்தி உண்மையென்றால் நான் டாடா மற்றும் பிர்லாவை விட பணக்காரியாக மாறியிருப்பேன். இந்தச் செய்தி உண்மையெனில் நீங்களும் வேகமாக வளர என்னிடம் வாருங்கள். இப்படி எழுதுபவர்களுக்கு பொது அறிவு என்ற ஒன்று இல்லையா என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். நாங்கள் பஞ்சாபிகள். எங்களின் மகள்கள் 12-16 வயதில் வேகமாக வளர்வார்கள்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிவரும் இந்த 'லவ் ஷாதி டிராமா' தொடர், வாரம் ஒரு எபிசோடு என்ற கணக்கில் வெளியாகிவருகிறது.