2020-21, 2022 ஆண்டுகளுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் மார்ச் 30-ம் தேதி கோலாகலமாக நடந்து முடிந்தது. சமீபத்தில் இந்த பிரமாண்ட விழா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது.
இந்த விழாவில் 2020-21 ஆண்டின் சிறந்த கதைக்கான விருது காண்போரை நெகிழச் செய்தது. 'க.பெ.ரணசிங்கம்' படத்திற்காக இந்த விருதை நடிகை ரோகிணியிடமிருந்து பெற்றுக்கொண்டார் இயக்குநர் விருமாண்டி.

"நான் நாடக நடிகனின் மகன். இந்த மேடைக்கு வர எங்க அப்பா 50 வருஷம், நான் 25 வருஷம் எனக் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் கஷ்டப்பட்டிருக்கிறோம். இப்போ இந்த விகடன் விருது வாங்குறதுல ரொம்ப பெருமையா இருக்கு. நான் சென்னைக்கு வரும்போது விகடன் புக் வாங்கவே காசு இருக்காது. அந்த நிலைமைல இங்க வந்து சினிமால விருது வாங்குற அளவுக்கு சாதிச்சிருக்கேன்" என்று பேசியவர் 'க.பெ.ரணசிங்கம்' படக்குழுவுக்கு நன்றி சொல்லி தன்னுடன் வந்த அவரது குடும்பத்தினரையும் மேடைக்கு அழைத்தார்.
மேடை ஏறிய விருமாண்டியின் தாய் நெகிழ்ச்சியில் நடிகை ரோகிணியைக் கட்டியணைத்தார். "விகடன் விருது விழாவை நான் டிவிலதான் பார்த்திருக்கேன். இப்போ அந்த மேடைல நிக்கறது ரொம்ப பெருமையா இருக்கு. என் மகன் ஜெயிச்சிட்டான்னு எங்க ஊருல இருக்குற எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லுவேன். என் வீட்டுக்காரர் நாடக நடிகர், என் மகன் சினிமாக்காரன், என் பேரப் பிள்ளைகளும் இப்போ சினிமால நடிக்குறாங்க. மூன்று தலைமுறையா நாங்க சினிமால இருக்கோம்" என்றவர் தனது மகனுக்குப் பெருமிதத்துடன் முத்தமிட்டார்.
இந்த உணர்ச்சிமிக்க தருணத்தை வீடியோ வடிவில், கீழ்க்காணும் லிங்கில் பார்க்கலாம்.