
ஏஞ்சலினா ஜோலி, ஸ்கார்லெட் ஜோஹான்சன், மீகன் ஃபாக்ஸ் என சீனியர்களால் நிரம்பியிருந்த ஹாலிவுட் உலகம் இப்போது இளம் ஹீரோயின்களால் பூத்துக்குலுங்க ஆரம்பித்திருக்கிறது.
வரும் காலத்தில் ஹாலிவுட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்போகும் லேடி சூப்பர் ஸ்டார்களில் சிலர் இங்கே!
நவோமி ஸ்காட்
அலாதின் படத்தில் அலறவிட்டவர். பிரிட்டன் பொண்ணு. ஆனால் அம்மா குஜராத்தி. 26 வயதான நவோமிக்கு ஹாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்துகொண்டிருக்கின்றன. பவர் ரேஞ்சர்ஸ் படத்தில் பிங்க் ரேஞ்சராகவும் நடித்தவர் இவரே. விரைவில் சார்லீஸ் ஏஞ்சல்ஸாக வலம் வரப்போகிறார் நவோமி. முழுக்க முழுக்க நவோமியின் ஆக்ஷன் அதிரடிகள் இதில் இருக்குமாம்!

ஜாஸி பீட்ஸ்
குறும்படங்களில் இருந்து ஹாலிவுட்டுக்கு வந்தவர். சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு ‘டெட்பூல்-2’ உலக அடையாளம் கொடுத்தது. டோமினோ என்கிற சூப்பர்ஹீரோயினாக அந்தப் படத்தில் கலக்கியிருப்பார் ஜாஸி. நக்கலும் நகைச்சுவையும் கலந்த இந்தக் காக்டெய்ல் கேரக்டருக்கு ரசிகர்கள் அதிகம். விரைவில் இவரின் ‘ஜோக்கர்’ வெளிவரவிருக்கிறது. இதுதவிர ‘லூஸி இன் தி ஸ்கை’, ‘மீட் மீ இன் எ ஹாப்பி ப்ளேஸ்’, ‘எக்ஸ்டிங்க்ட்’, ‘நயன் டேஸ்’ என அடுத்தடுத்து நான்கு படங்கள் ஜாஸி பீட்ஸின் கவர்ச்சியில் களைகட்ட இருக்கின்றன.

க்ளோ கிரேஸ் மோரெட்ஸ்
22 வயதேயாகும் க்ளோ கிரேஸ் மொராட்ஸுக்கு ஹாலிவுட்டில் ஏகப்பட்ட கிரேஸ். குழந்தை நட்சத்திரமாக ஹாலிவுட்டில் அறிமுகமானவருக்கு, கடந்த ஆண்டு வெளியான ‘தி மிஸ் எஜுகேஷன் ஆஃப் கேமரோன் போஸ்ட்’ படம்தான் பெரிய பிரேக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து நடித்த ‘சர்ப்ரைஸா’, ‘க்ரேட்டா’ போன்ற படங்களில் நடித்தவர் 2021 வரை கமிட்டட். ‘தி ஆடம்ஸ் ஃபேமிலி’, ‘ரெட் ஷூ அண்டு தி செவன் டுவார்ஃப்ஸ்’ என இந்த க்யூட்டியின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வரவிருக்கின்றன.
ஜெண்டாயா
சின்னத்திரை நடிகை ப்ளஸ் பின்னணிக் குரல் கலைஞராக இருந்தவர்தான் ஜெண்டாயா. மியூசிக்கல் அனிமேஷன் படங்களுக்குக் குரல் கொடுக்க ஆரம்பித்தவர் ‘ஸ்பைடர் மேன் - ஹோம்கம்மிங்’, ‘தி க்ரேட்டஸ்ட் ஷோமேன்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இந்த ஆண்டு வெளியான இரண்டாம் பாகமான ‘ஸ்பைடர் மேன் - ஃபார் ஃப்ரம் ஹோம்’மின் ஹீரோயின் ஜெண்டாயாதான். அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் வார்னர் பிரதர்ஸின் ‘ட்யூன்’னிலும் ஜெண்டாயா தரிசனம்தான். இதோடு ஸ்பைடர்மேன் சீரிஸின் அடுத்த மூன்று படங்களில் நடிக்கவும் ஜெண்டாயா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சோஃபி டர்னர்
சோஃபி டர்னரின் கரியரில் டர்னிங் பாயின்ட்டே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் நடந்தது. எக்ஸ்-மென் சீரிஸின் ‘டார்க் ஃபீனிக்ஸ்’ படத்தில் டார்க் ஃபீனிக்ஸ்காவும், ‘டைம் ஃப்ரீக்’ படத்தில் ஹீரோயினாகவும் நடித்ததன் மூலம் ஹாலிவுட்டின் முன்னணிக் கண்மணியாக நிலைத்துவிட்டார் சோஃபி. இந்த இரண்டு படங்களும் தந்த ஓப்பனிங் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சோஃபியின் கால்ஷீட் ஃபுல்!