'ஜெய் பீம்' படத்துக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஆஸ்கர் விருதுகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் 'ஜெய் பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் அவர்களின் பேட்டியும், படத்தில் சில காட்சிகளும் வெளியாகியிருக்கிறது. தமிழ்ப் படம் ஒன்று ஆஸ்கர் யூடியூப் தளத்தில் வெளியாவது இதுவே முதல்முறை என்பதால், 'ஜெய் பீம்' குறித்த பேச்சுகள் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.
ஒவ்வொரு நாடும் ஆஸ்கர் விருதுகளின் சிறந்த அயல்மொழி படத்துக்காகப் போட்டியிடும். அயல்மொழி படமாக இருந்தாலும், சில படங்களை ஆஸ்கர் குழு முக்கிய விருதுகளுக்குள் அனுமதித்து கௌரவப்படுத்தும். அந்தந்த நாட்டைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள், ஒரு படத்தைத் தேர்வு செய்து அந்த நாட்டின் பரிந்துரையாக ஆஸ்கருக்கு அனுப்பிவைப்பார்கள். அப்படிக் கடந்த ஆண்டு, இந்தியாவின் இறுதிப் பட்டியலுக்குள் 'ஜெய் பீம்' திரைப்படம் வரவில்லை. அப்போதே அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 'சர்தார் உதம்', 'சகுந்தலா தேவி', 'சுருளி', 'கூழாங்கல்' உள்ளிட்ட படங்களில் இருந்து தமிழகத்தின் 'கூழாங்கல்' திரைப்படத்தை ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பி வைத்தது இந்தியா. உலகெங்கும் இருந்து மொத்தமாக ஆஸ்கர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 92 படங்களில் இருந்து 15 படங்களை, முதல் தகுதி சுற்றுக்குத் தேர்வு செய்திருந்தது ஆஸ்கர் குழு. அதில், இந்தியாவின் 'கூழாங்கல்' திரைப்படம் இடம்பெறவில்லை.

அமெரிக்காவைக் கடந்து பிற மொழிகளில் எடுக்கப்படும் படங்களை நேரடியாகவும் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கலாம். ஆஸ்கரின் எல்லா பிரிவுகளிலும் அந்தப் படத்தை போட்டிக்கு அனுப்பலாம். அப்படி சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படத்தை ஆஸ்கர் குழுவுக்கு அனுப்பியிருக்கின்றனர். ஏற்கெனவே சூர்யாவின் 'சூரரைப் போற்று', பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' போன்ற படங்களும் இப்படி அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம். ஆனால், அந்தப் படங்களுக்கென தனி வீடியோ எல்லாம் ஆஸ்கர் தளத்தில் இடம்பெறாது. அப்படியிருக்கையில், 'ஜெய் பீம்' படம் ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியானது மிகப்பெரிய ஆச்சர்யம்தான். என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள 'ஜெய் பீம்' இயக்குநர் த.செ.ஞானவேலிடம் பேசினோம்.
"ஆஸ்கர் குழுவில் இருந்து எங்களை அழைத்து இப்படியானதொரு வீடியோவைக் கேட்டிருந்தார்கள். அதனால் ஒரு மாதம் முன்பு இந்த வீடியோவை அனுப்பி வைத்தோம். ஆனால், அவர்கள் வெளியிடுவார்களா இல்லையா என்பது தெரியாததால், அதுகுறித்து எதுவும் அப்போது பேச முடியவில்லை.
இந்தியா சார்பாக அனுப்பப்படும் படங்களுக்கான காலக்கெடுவுக்குள் எங்களால் படத்தை முடிக்க முடியவில்லை. இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்படும் படங்களுக்கு எப்போது அப்படங்கள் சென்சார் செய்யப்படுகின்றன என்பது மிகவும் அவசியம். எங்கள் படம் கிட்டத்தட்ட மூன்று மாத காலம் தள்ளித்தான் முடிக்க முடிந்தது. இதனாலேயே, 2021ம் ஆண்டின் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு எங்களால் 'ஜெய் பீம்' படத்தை அனுப்ப முடியவில்லை. கோவா திரைப்பட விழா, சென்னைத் திரைப்பட விழா என பல விழாக்களை நாங்கள் தவறவிட்டதும் இதனால்தான்.

இதுபோன்ற விழாக்களுக்குத் தொடர்ச்சியாக படங்களை அனுப்பக்கூடிய ஒரு தயாரிப்பு நிறுவனம் எங்களைத் தொடர்பு கொண்டு 'ஜெய் பீம்' ஏன் அனுப்பப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியது. 'ஜெய் பீம்' படத்தைப் பார்த்த அந்தத் தயாரிப்பு நிறுவனம், இந்தப் படம் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என வலியுறுத்தியது. 'ஜெய் பீம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி , இந்தப் படத்தை எப்படியும் ஆஸ்கரின் 'ஓப்பன் கேட்டகரிக்கு' அனுப்ப வேண்டும் என முடிவு செய்தது. அமேசான் நிறுவனமும், இந்தப் படத்தை இன்னும் பெரிய உயரங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என தீர்மானித்தனர். அதன் ஒரு பகுதியாகத்தான், படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிட்டனர்.
இப்படியாக ஆஸ்கருக்கென பிரத்யேகமான Festival cut வெர்சனை அனுப்பி வைத்துவிட்டோம். அதன்பின்னர் சில வாரங்கள் கழித்து ஆஸ்கர் குழுவில் இருந்து எங்களை அழைத்தனர். இந்தப் படம் குறித்து Director's note மற்றும் சில காட்சிகளையும் இணைத்து ஒரு வீடியோ வேண்டுமென கேட்டிருந்தனர். ஆஸ்கரிலிருந்து இப்படியெல்லாம் யாரும் இதற்கு முன்னர் கேட்டதில்லை என நினைக்கிறேன். இது இப்படியாக அவர்களின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகும் என்றெல்லாம் அவர்கள் அந்த உறுதியும் அளிக்கவில்லை. ஆனாலும் அனுப்பி வைத்தோம்.
இப்போது இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு படத்தினை இப்படியான உயரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தத் தயாரிப்புக் குழுவின் நோக்கம்தான் இதில் முக்கியமான ஒன்று. அவர்கள் இதை வெறுமனே ஒரு படமாகப் பார்க்காமல், இதன் அரசியல் உலகளாவிய ஒன்று என்பதை உணர்ந்திருந்தனர். அதனால், தற்போது மீண்டும் 'ஜெய் பீம்' மக்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது.

அயல்மொழி படங்களுக்கான இறுதிப் பட்டியலை ஆஸ்கர் குழு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. நாங்கள் ஓப்பன் கேட்டரிக்குத்தான் அனுப்பியிருக்கிறோம். அதனால், இறுதிப் பட்டியலில் இருக்கிறோமா இல்லையா என்பது அடுத்த மாதம்தான் தெரியும். எதுவாக இருந்தாலும், அதைப் பற்றி பெரிதாக யோசிக்க விரும்பவில்லை. அடுத்த படத்துக்கான வேலைகளில் தற்போது மூழ்கியிருக்கிறோம்" என்றார்.
ஆஸ்கரின் இறுதிப் பட்டியல் பிப்ரவரி எட்டாம் தேதி வெளியாகவிருக்கிறது. ஆச்சர்யங்களுக்காகக் காத்திருப்போம்!