
ஆயிரம் சொல்லுங்க... இந்த மனுஷன் மனசு யாருக்கும் வராது...!
தொடர்ந்து 'ஹிட்' படங்கள்!'வானத்தைப் போல' முடிந்து இப்போது 'வல்லரசு'! வெற்றிமழையில் தலைதுவட்டிக் கொள்ளக் கூட நேரமில்லாமல் நிற்கிறார். இன்னொரு பக்கம் ஒட்டுமொத்த நடிகர்களின் ஆதரவுடன் நடிகர் சங்கத் தலைவராகிறார். தவிர, அவரது ரசிகர் மன்றத்துக்கு தனிக்கொடி உருவாக்கியது ஒரு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இப்படி இன்டஸ்ட்ரிக்கு உள்ளே வெளியே இரண்டிலும் ஜொலிக்கிற ஒரே ஹீரோ விஜயகாந்த்! சென்னை வாகினி ஸ்டுடியோ... இருபத்தேழு கார்களையும் ஏழெட்டு ஸ்டண்ட் நடிகர்களையும் பார்த்ததுமே அது விஜயகாந்த் ஷூட்டிங் என்று கண்டுபிடித்துவிட முடிகிறது - 'சிம்மாசனம்' படம். "தினமும் நைட் ஷூட்டிங்... அதான்..." - இயல்பாகவே சிவந்த கண்கள் இன்னும் சிவப்பேறி இருக்கச் சிரிக்கிறார் விஜயகாந்த்.

திருநெல்வேலி பக்கமிருந்து வந்திருக்கிற ரசிகர்களுடன் கை குலுக்கிப் பேசி விட்டு, "வார நாள்ல ரசிகர்மன்ற வேலைகள்னு வரக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல. நான் மட்டும் என் வேலையைப் பார்க்கறப்போ, - நீங்க உங்க வேலையை விட்டுட்டு முனைால் வரலாமா? வர்றதா இருந்தா ஞாயிற்றுக்கிழமை மாதிரி லீவு நாள்லதான் வரணும். மத்த நேரம், உங்க வேலை. உங்க குடும்பம்தான் முக்கியம்.." என்று லேசாக அன்புடன் அதட்டல் போட்டுவிட்டு வந்து அமர்ந்தவர்களிடம் பேசினோம்.
"தமிழ், மொழிப்பற்று மாதிரி விஷயங்கள்ல உங்களுக்கு ஈடுபாடு வந்தது எப்படி?"
"பதினெட்டுப் படம் ஹீரோவா நடிச்சு முடிச்சுட்டுப் பார்த்தா, திடீர்னு படமே இல்லை. முரட்டுக்காளையில வில்லனா நடிக்க வர்றிங்களா?'னு கூப்பிட்டாங்க. அன்னிக்குச் சரினு நான் போயிருந்தா, இப்போ 'வல்லரசு' வரைக்கும் வந்திருக்க முடியாது. எதையும் விடக்கூடாது. கடைசிக் கட்டம் வரைக்கும் விரட்டனும்கிற பழக்கம் எனக்கு. நல்லா ஞாபகம் இருக்கு. முதல் பட வாய்ப்புக்காகப் போய் நின்னப்போ, "உன்னோட தமிழ் நல்லாயில்லே"னு என்னைத் திருப்பி அனுப்பிச்சாங்க. மதுரைக் காரனுங்களுக்கு நாக்கு புரளாது. வல்லினம், மெல்லினம் சரியா வராது. அந்த ஒரு சம்பவம்தான் என்னோட தமிழ்ப் பற்று வளரக் காரணமா இருந்தது. இன்னிக்குவரை எனக்கு வல்லினம், மெல்லினம் வரலை. ஆனா, மொத்தத் தமிழினமும் ஆதரவு தந்து தூக்கி நிறுத்தியது. அந்த நன்றி இன்னும் இங்கே இருக்கு.." தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டுகிறார்.
"பெப்சி படைப்பளிகள் பிரச்னை வந்தபோது படைப்பாளிகள் தரப்புல உங்களைத் தலைவராக்க பெரும் முயற்சி நடந்தது. அது நடந்திருந்தா இப்போ பாலசந்தர் இருக்கிற இடத்தில் நீங்க இருந்திருப்பிங்க. அப்ப வேணாம்னு விலகி ஓடிட்டிருந்த நீங்க, நடிகர் சங்கத் தலைவராக இப்ப சம்மதிச்சது எப்படி?"
"இல்லிங்க. பதவிங்கறது. பெரிய விஷயம். ஒரு விஷயம் நல்லபடியா முடியனும்னா அதுக்கு எத்தனை படி ஏறி இறங்கணும்னாலும் நான் தயார். அதுக்கு நான் வர்றேன். ஆனா, அதைப் பதவியில் இருந்தாத்தான் பண்ணமுடியும்னா வேணாம்னு சொன்னேன். நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை இது ரெண்டு வருஷமா பேசற விஷயம். நடிகர் சங்கத்துக்குப் போட்டியா, சினி ஆர்ட்டிஸ்ட் யூனியன்னு பிரிஞ்சு நடிகர்களே ரெண்டு தரப்பா மோதிக்கற நேரத்துலயே இதுக்குக் கேட்டாங்க எனக்கு எப்பவுமே கோஷ்டி பிடிக்காது. அதனால வேணாம்னு இருந்தேன். இப்போ எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வர்றப்போ என்னால மறுக்க முடியலை."
"சரத்குமார் அல்லது நெப்போலியன் தலைவராகப் போறாங்கனு ஒரு பேச்சு அடிபட்டது. இப்போ சரத்குமார்தான் முதல் ஆளா நின்னு உங்களுக்கு ஆதரவு திரட்டறார். இதுல தி.மு.க-வின் பின்னணியும் இருக்குனு சொல்றாங்க. இந்த அரசியல் விளையாட்டு உங்க தனித்தன்மையைப் பாதிக்காதா..?"
"இதுல அரசியலே கிடையாது சொல்லப்போனால் நான் தலைவராவதில் சந்தோஷப்பட்ட முதல் ஆள் ராதாரவிதான். 'ஹாட்ஸ் ஆஃப்'னு ஓடிவந்து கைகுடுத்தவர் அவர். ராதாரவியோட பதவிதான் போகப் போகுது. இத்தனைக்கும் அவர் இப்போ அ.தி.மு.க-வுல இருக்கார். இதுக்கு என்ன சொல்றீங்க? போட்டியே இல்லாம தேர்ந்தெடுக்கிறோம்னு நிறைய பேர் சொன்னபோதுகூட நான் மறுத்தேன். 'போட்டினு வந்துட்டா தேர்தல் இருக்கணும். எல்லாருக்கும் ஒரே விஷயம் பிடிக்கணும்னு எதிர்பார்க்கிறது தப்பு. எதிர்த்துப் போட்டியிட யாராவது வந்துட்டா, தேர்தல் நடத்தணும்னு சொன்னேன். அப்படி ஒண்ணு நடந்தா இது எனக்கு முதல் தேர்தல்!"

''பதவினு வந்துட்டா பல விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுக்கு நீங்க தயாரா?"
"எனக்கு நல்லாத் தெரியும். எல்லாருக்கும் செல்லப்பிள்ளையா இருக்கிறது சுலபம் , ஆனா , பொறுப்புக்கு வர்றப்போ எத்தனை கேள்விகள்.. விமரிசனங்கள்.. பேச்சுக்களைச் சந்திக்கணும்னு தெரியும். நாங்கதானே தலைவர் ஆக்கினோம்னுகூடச் சொல்வாங்க. எல்லாத்தையும் யோசிச்சுட்டுதான் நான் வர்றேன் எதிலேயும் இறங்கறதுக்கு முன்னால நான் நிறைய யோசிப்பேன். இறங்கிட்டா விறுவிறுனு போய்க்கிட்டே இருப்பேன்!"என்றவர், சிறிது இடைவெளிக்குப் பிறகு சொன்னார் - "ஜெயலலிதா ஆட்சியில இருக்கற நேரம். தேர்தல் வரப்போகுது. கலைஞருக்குக் கடற்கரையில பொன்விழா நடத்தணும்னு நாங்க இறங்கினப்போ, எத்தனை பேர் என்னென்ன பேசினாங்க... எவ்வளவு பயமுறுத்தினாங்க கவலையே படலை, அதை வெற்றிகரமா நடத்திக் காட்டினோம். ஆனா, அவர் ஜெயிச்சு முதல்வரானதும் நடந்த விழாவுக்கு அத்தனை பேரும் விழுந்தடிச்சு ஒடி வந்தாங்க. அதுல பாதி பேர் கடற்கரையில நடந்த விழாவுக்கு வரவே இல்லை. சரி. அது அவங்க பாதுகாப்பு பற்றின விஷயம்னு நான் விட்டுட்டேன். அதுக்கு மேல யோசிக்கலை.
இப்போ இந்த நடிகர் சங்கத் தலைவர் வாய்ப்பு வருதுன்னா அதுல நம்மால என்ன பண்ண முடியும்னு யோசிப்பேன். சங்கத்துக்கு நிறைய கடன்கள் இருக்கு. சில முக்கியமான விஷயங்கள் முடிக்கப்படாம கிடக்கு. ஒவ்வொண்ணா சரிபண்ணனும்." யூனிட் அழைப்புவிட, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று நம்மிடம் சொல்லிவிட்டு சண்டைக்காட்சிக்குத் தயாராகிறார். காரின் மீது தாவி ஏறி, எதிராளியின் தோளுக்கு மேல் காலை வீசி. அத்தனை உடம்பும் அபாரமாக ஒத்துழைக்க ஒரே டேக்கில் ஒகே ஆகிறது காட்சி!
"உங்க படங்கள்ல பொதுவா மக்களின் பிரதிநிதியா, ஒரு கோபக்கார இளைஞனாவே வர்றிங்களே. இது நீங்க திட்டமிட்டு பண்ணிக்கிட்ட ஃபார்முலாவா?"
"எனக்கு சிஸ்டம் சரியில்லைனு ஒட்டுமொத்தமா குற்றம்சாட்டுறது பிடிக்காது. இது நாம விரும்பித் தேர்ந்தெடுத்த சிஸ்டம். பொதுவா தப்பு சொல்றது ரொம்ப ஈஸி. அதை யார் வேணும்னாலும் சொல்லிட்டு கைதட்டல் வாங்கிட்டுப் போயிடலாம். என் படங்கள்ல பார்த்தீங்கன்னா ஒரு படத்துல நான் தப்பைத் தட்டிக் கேட்கிற ஆளா வருவேன். அடுத்த படத்துல அதே சிஸ்டத்துல ஒரு அதிகாரியா வந்து தவறுகளைச் சரி பண்ண போராடற ஆளா வருவேன். இந்த பாஸிட்டிவ் அப்ரோச்தான் எனக்குப் பிடிக்கும்.நான் ஒரு இலவச ஆஸ்பத்திரி நடத்தறேன். சொல்றதுக்கு சின்ன விஷயம். ஆனா, டாக்டர் நேரத்துக்கு வர்றாரா. சிகிச்சைகள் நல்லபடியா நடக்குதா. மாத்திரை மருந்துகள் தேவைக்கு கிடைக்குதா. இடம் சுத்தமா இருக்கா. தண்ணி வசதி சரியா இருக்கானு அதைப் பராமரிக்கிறதுக்கே எழுபத்தெட்டு கேள்விகள் வருது. ஒரு ஆஸ்பத்திரிக்கு இத்தனை கஷ்டம்னா அரசாங்கத்தோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க. வெளியே இருந்து வேடிக்கை பார்க்கறது சுலபம். உள்ளே இறங்கி வேலை பார்த்தாதான் அந்தச் சிரமம் புரியும்."

"பசியோட யார் வந்தாலும் உடனே ஒருவேளைச் சோறு கிடைக்கும்னு நம்பி வர்ற இடம் உங்க ஆபீஸ்தான். பசி, பட்டினினு கிடந்து வந்த ஆளு இதைப் பண்றார்னா சரி. நீங்க வசதியான வீட்ல வளர்ந்து வந்தவர். இந்தப் பழக்கம் எப்படி வந்தது?"
"அதுக்குக் காரணம் எங்க ரைஸ் மில். மதுரை மில்லுல நான் இருந்தப்போ வேலைக்காரங்களைக் கவனிப்பேன். ஒரு தூக்குச் சட்டியில சோறு இருக்கும். மதியம் பாதியைச் சாப்பிட்டுட்டு மறுபடியும் வேலைக்குப் போயிருவாங்க. மூணு, மூனரை மணிக்கு மிச்சம் மீதியைச் சாப்பிடுவாங்க. எனக்கு வர்ற சாப்பாடு பாத்திரங்களைக் கழுவறதுக்கு போட்டியே இருக்கும். காரணம், அதுல பாதி சாப்பாடு மிச்சம் இருக்கும்...சாப்பிட்டுக்கலாம்னு. உலகத்துல பெரிய கொடுமை - பசிக் கொடுமைதான். வயிறு காஞ்சு வந்து நிக்கறவனுக்கு என்ன சொன்னாலும் ஏறாது. தவிர, பெரியவங்க சொல்வாங்க... மனுஷனுக்கு எது குடுத்தாலும் எவ்ளோ குடுத்தாலும் பத்தாது. வேணும் வேணும்னுதான் கேட்பான். அவன் போதும்னு சொல்ற ஒரே விஷயம்... சோறு மட்டும்தான்னு சொல்வாங்க. அது என் மனசுல பதிஞ்ச விஷயம். என்னால கொடுக்க முடியுது... செய்யறேன். நான் சம்பாதிக்கிறது மக்கள் காசு. என் உழைப்புக்கு அதிகமாகவே ஊதியம் தர்றாங்க. அதுல ஒரு பகுதியைப் படிப்பு அது இதுனு அவங்க உதவிக்காக செலவழிக்கிறது என்னோட பொறுப்பு."
"மதுரை மில்லுல இருந்த விஜய் ராஜுக்கும் இப்ப இருக்கிற கேப்டன் விஜயகாந்துக்கும் என்ன வித்தியாசம்..?"
'எனக்குள்ள எந்த மாற்றமும் இல்லை. வாழ்க்கையில வசதி கூடியிருக்கு. அன்னிக்கு என்னோட யார் இருந்தாங்களோ, அவங்கதான் இன்னிக்கும் என்னோட இருக்காங்க. வேட்டி சட்டையோடதான் வெளியே அலைவேன். எனக்கு இன்னமும் இங்கிலீஷ் பேசத் தெரியாது . தெரியலையேன்னு துளி வருத்தமும் கிடையாது. வெற்றின்னா ஆடுறதும் தோல்வின்னா புலம்பறதும் கிடையாது. சந்தோஷமோ, வருத்தமோ கொஞ்ச நேரம் தான் கோடிக்கணக்குல சம்பாதிச்சும் பார்த்துட்டேன்... நஷ்டப்பட்டும் பார்த்துட்டேன்... 'எங்கேயும் நின்னுடாதே.. நடந்துட்டே இரு"ங்கிறதுதான் என்னோட தத்துவம். நான் ஒடிக்கிட்டே இருக்கேன்..."
"உங்க ரசிகர் மன்றத்துக்குத் தனிக்கொடி கட்டிட்டீங்க. திடீர் திடீர்னு சுற்றுப் பயணங்கள் போயிட்டு வராங்க... ஏதாவது திட்டம் இருக்கா..?" "ரசிகர்கள் ரொம்ப நாளா நமக்குனு ஒரு கொடி வேணும்னு கேட்டுட்டு இருந்தாங்க. அதனால டிஸைன் பண்ணினது. டூர் போறது எப்பவும் பண்ற விஷயம்தான். இந்த முறை அது பரபரப்பானதுக்கு ஒரே காரணம், இந்தக் கொடிதான். விழுப்புரம் பக்கம் ஒரு கல்யாணம்... போற வழியில 220 இடங்கள்ல கொடியேத்த வேண்டியிருக்கும்னு எதிர்பார்க்கவேயில்லை . வழியெல்லாம் பயங்கரக் கூட்டம். இறங்கி கொடியேத்திட்டு கார்ல ஏறுவதே பெரும்பாடாகிப் போச்சு. கல்யாணத்துக்கு வேற நேரமாகிட்டே இருந்தது . சில இடங்களைத் தவிர்த்துட்டுப் போயிட்டேன். உடனே விஜயகாந்த் அரசியலுக்கு ஆசைப்பட்டா மட்டும் போதுமா... இப்படி ஒரு நாளுக்கே அசந்துட்டா சரிவருமா..?'னு எழுத ஆரம்பிச்சுட்டாங்க. நான் எதுக்கும் அசந்துபோகற ஆள் இல்லை. என்ன. இது எனக்குப் புதுசு. அவ்வளவுதான். தவிர, எனக்குப் பெரிசா ஆசைகள் கிடையாதுங்க. எனக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்காங்க. என்மேல உயிரையே வெச்சிருக்காங்க. முடிஞ்சவரைக்கும் நம்மால முடிஞ்ச நற்பணிகள் செய்வோம்னு அவங்களை ஒரு ராணுவம் போல தயார்படுத்தி இருக்கேன். எந்த சக்தியும் அவங்களைத் திசைதிருப்பிவிட முடியாது. எனக்கும் என் ரசிகர்களுக்கும் நடுவே வேற யாரும் விளையாட முடியாது. மற்றபடி, திட்டம்னு எதுவும் இப்போதைக்கு இல்லை..."

"அரசியல் பற்றி உங்க ஐடியாதான் என்ன? பத்திரிகைகளில் அரசியல் பற்றிப் பேசும்போது வர்றதா இருந்தா நிச்சயம் வருவேன்"னு சொல்றீங்க. உங்களுக்கு அதுல குழப்பம் இருக்கா..?"
"என்னை யாருடனும் ஒப்பிடாதீங்க. வருவாரா மாட்டாரானு யாரையும் கிறுக்குப் பிடிக்கவிட நான் இடம் தரமாட்டேன். இப்போ சினிமாதான். ஒரு நடிகனா சாதிக்கறதுக்கே, எனக்கு ஆயிரத்தெட்டு கனவுகள் இருக்கு. இன்னும் நிறைய பண்ணனும்னு தோணுது. அரசியல் ஆசை எனக்குள்ள இருந்ததுனா தலைவர் கலைஞர் இருக்கார்... ஐயா மூப்பனார் இருக்கார்... அப்படி யாரோடயாவது சேர்ந்திருக்கலாமே... எனக்கு அப்படி திட்டம் எதுவும் கிடையாது. ஆனா, நான் ஒரு நடிகனாவேனுகூட யோசிச்சுப் பார்த்ததில்லை. இன்னிக்கு நடிகர் சங்கத் தலைவரா வர்ற அளவுக்கு கொண்டு வந்திருக்கு வாழ்க்கை.அதனாலதான் சொல்றேன். அரசியல்னு வர்றதா இருந்தா, நிச்சயம் வருவேன். அப்படி நான் அரசியலுக்கு வந்தால். சும்மா அறிக்கைகள் விடுறது, பேசறது எல்லாம் பிடிக்காது. இறங்கினா முதல்நாளே முழுவேகத்துல இறங்கணும். அப்படி இறங்கி நின்னு வேலை பார்க்க பிரியப்படுறவன் நான்..."
'"அதாவது, தேர்தல்ல வோட்டுப் போடறதைத் தவிர, வேற அரசியல் இப்போ கிடையாதுங்கறீங்க..?"
"அதது எப்பப்போ வருமோ, அப்போ பார்க்கலாம். இப்போ, எனக்கு அடுத்த ஷாட் ரெடி!" எழுந்து டவலால் முகத்தை ஒற்றிக்கொள்கிறார். அடுத்த காட்சியில் எதிரிகளைப் பந்தாடுவதற்கு ஒத்திகையை ஆரம்பிக்கிறார் விஜயகாந்த்!
- விகடன் டீம்