
இன்பாக்ஸ்
`மாயநதி’ மலையாளப் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தமிழில் தனுஷோடு ஜோடி சேர்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யாதான் ஹீரோயின் என அறிவித்திருக்கிறார்கள். படம் வெளிநாட்டு கேங்ஸ்டர் கதையாம். வெல்கம் ஐஸ்ஸ்ஸ்!

நானி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஜெர்ஸி.’ இந்தப்படத்தைத் தமிழில் எடுக்கும் முயற்சிகளில் இருக்கிறார் ராணா டகுபதி. 30 வயதில் கிரிக்கெட் கரியரில் வெற்றிக்காகப் போராடும் நாயகனின் கதைதான் ஜெர்ஸி. விஷ்ணு விஷால் நடிக்க வாய்ப்பிருக்கிறதாம். ஜீவா-2?!
சென்றவார இணைய வைரல் FACE APP-தான். நம் முகத்தை அப்லோடு பண்ணினால், அடுத்த சில விநாடிகளில் வயதான கெட்டப்புக்கு மாற்றிக்காட்டுகிற இந்தச் செயலியில் உலகப் பிரபலங்கள் எல்லாம் தங்கள் படங்களைப் போட்டுப் பகிர, நம் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்க, டைம்லைன்கள் எல்லாம் தாத்தா பாட்டிகள் மயம்தான். அமெரிக்காவோ `இது ஆபத்து, அப்பாவி மக்களின் தகவல்களை இந்தச் செயலியில் திருட வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை’ என எச்சரிக்கை கொடுக்க, இந்த அறிவிப்பு வருவதற்குள் அகில உலகமும் இந்தச் செயலியில் ஆட்டம் போட்டு முடித்துவிட்டார்கள். சோஸியல் வைரல்கள்!
டாம்குரூஸை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்தி அவர் திரைவாழ்க்கையையே மாற்றிய படம், 1986-ல் வெளியாகி மெகா ஹிட் அடித்த `டாப் கன்.’ 34 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது. மீண்டும் பழைய `மேவரிக் மிட்செல்’லாக வருகிறார் டாம்குரூஸ். சமீபத்தில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது. டிரெய்லரில் பழைய படத்தின் காட்சிகளை நினைவூட்டும் ஷாட்களும், இசையும் இடம்பெற 80ஸ் கிட்ஸெல்லாம் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். மறக்கமுடியாத மேவரிக்
அஸ்ஸாமையே புரட்டிப்போட்டிருக்கிறது மழை. கிட்டத்தட்ட 57 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பல லட்சம் மக்களைப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்தாலும் இன்னமும் மழை நின்றபாடில்லை. பல ஆயிரம் பேர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். இதுவரை 40க்கும் அதிகமானோர் இறந்துபோயிருப்பதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. காசிரங்கா தேசியப் பூங்காவும் வெள்ளத்தில் மிதக்க, அரியவகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் மூன்று வெள்ளத்திற்குப் பலியாகியுள்ளன. அஸ்ஸாம் அரசுக்கு உதவக்கோரி பலரும் கோரிக்கை வைத்துவருகிறார்கள். அஸ்ஸாமிற்கு ஆதரவுக்கரம் நீட்ட விரும்புவோர் இந்த இணைப்பில் உள்ள லிங்க் வழி நேரடியாக உதவலாம். https://cm.assam.gov.in/relieffund.php கைகொடுப்போம்!

விதிகளை மீறிச் செயல்பட்டதற்காக ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது ஐசிசி. சென்ற மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு சஸ்பெண்டு செய்து இடைக்கால கமிட்டியை நியமித்தது. இது ஐசிசி விதிகளுக்குப் புறம்பானது. அணி நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருப்பதை ஐசிசி ஏற்காது, அதுவே இந்தத் தடைக்குக் காரணம் என்று கூறியிருக்கிறது ஐசிசி. இந்தத் தடையால் மனமுடைந்துபோயிருக்கிறார்கள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள். ‘`இனி நாங்கள் என்ன செய்வது, எங்களுடைய கிரிக்கெட் கிட்டை எரித்துவிட்டு, வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமா... அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. எங்களுக்கு கிரிக்கெட் மட்டும்தான் தெரியும்’’ என்று அந்த அணியின் முன்னணி வீரரான சிக்கந்தர் ராசா ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மீண்டு வா ஜிம்பாப்வே!
மணிரத்னம் அடுத்து `வானம் கொட்டட்டும்’ என்கிற படத்தைத் தயாரிக்கிறார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவரும், ‘படைவீரன்’ படத்தை இயக்கியவருமான தனசேகரன் இயக்கும் இந்தப் படத்தில் விக்ரம்பிரபு நாயகனாகவும் மடோனா நாயகியாகவும் நடிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படத்தில் சரத்குமார் - ராதிகா இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம். நிச்சயம் நல்லா கொட்டும்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் ஷில்பா ஷெட்டி. பாலிவுட்டில் தயாராகவுள்ள ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தந்திருக்கிறார். `உட்தா பஞ்சாப்’, `சூர்மா’ படங்களில் நடித்த தில்ஜித் டோசன்ஜ் நடிக்கும் இந்தப்படத்தில் ஷில்பாவுக்கு எழுத்தாளர் வேடமாம்! மேக்கரீனா... மேக்கரீனா!