
`தடக்’ படம் மூலம் அறிமுகமான ஜான்வி கபூர், அடுத்து ‘கார்கில் கேர்ள்’ என்கிற படத்தில் நடிக்கிறார்.
கார்கில் போரில் போர் விமானம் ஓட்டித் தாக்குதல் நடத்திய குன்ஜன் சக்ஷேனாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இது. இந்தப் படத்துக்காகப் பத்துக் கிலோ எடைகுறைத்து ஸ்லிம் அன் ஃபிட்டாக மாறியிருக்கிறார் ஜான்வி. `நேர்கொண்ட பார்வை’க்குப் பிறகு போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் அடுத்த படத்தில் ஜான்வி நாயகியாக நடிக்கும் வாய்ப்பிருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். மயிலுக் குட்டி!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஆனால் இதற்கு ஈழத்தமிழர்களில் ஒரு பிரிவினரும் ஈழ ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ‘முரளிதரன் எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை’ என்பது அவர்கள் வாதம். பந்து வீசிட்டாங்க!
கடந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட 1.09 கோடி மரங்களை வெட்டித்தள்ளி யிருப்பதாக நாடாளு மன்றத்தில் நடந்த விவாதம் ஒன்றில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ கூறி யுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக இந்த மரங்கள் வெட்டப்பட்ட தாகவும், கடந்த ஓராண்டில்தான் அதிக மரங்களை வெட்ட வேண்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். காடு களை அழித்துவிட்டு, மோடி பியர் க்ரில்ஸுடன் ‘டிஸ்கவரி சேனலில்’ நிகழ்ச்சி நடத்துவது கேலிக்கூத்தானது என்று சிலர் விமர்சிக்கின்றனர். மாட்டைக் காப்பாத்து வாங்க. நாட்டை...?
சென்றவாரம் மீண்டும் ஒருமுறை அஜித்-விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோசமாக மோதிக்கொண்டனர். ஹேஷ்டேக்குகள் இட்டு, லட்சக்கணக்கில் ட்வீட்டுகள் போட்டு டிரெண்டாக்கிச் சண்டையிட்டனர். கிரிக்கெட் வீரர் அஸ்வின் இதனால் கோபம்கொண்டு தன் ட்விட்டர் பக்கத்தில் ‘நாட்டில் எத்தனை பிரச்னைகள் இருக்கின்றன, மழை இல்லை பஞ்சம் என மக்களெல்லாம் துன்பத்தில் இருக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது’ என்று கருத்து தெரிவித்திருந்தார். திருந்துங்கப்பா!

குவான்டின் டாரன்டினோவின் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ படம் சென்றவாரம் வெளியாகிப் பரவலான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. படத்தில் புரூஸ் லீயின் பாத்திரமும் வருகிறது என்பதால் ஆர்வத்தோடு படத்தைப் பார்த்த புரூஸ் லீயின் மகள் ஷானன் லீ கடுங்கோபத்தில் இருக்கிறார். ``படத்தில் புரூஸ் லீயையும் அவருடைய திரையுலக வாழ்வையும் கேலி செய்யும்படி காட்சிகள் இருந்ததால் என்னால் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கவே முடியவில்லை. வெள்ளையர்களின் ஹாலிவுட் அந்தக் காலத்தில் அப்பாவை எப்படி கேலியாக நினைத்ததோ அப்படித்தான் இப்போதும் நினைக்கிறது’’ என்று கோபமாகப் பேசியிருக்கிறார். டிஷ்யூம் டிஷ்யூம்!
ராமாயணம் இந்தியில் படமாகவிருக்கிறது. அமீர்கானின் `டங்கல்’ படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தில் ராமராக நடிக்க ஹ்ரிதிக் ரோஷனிடமும் சீதையாக நடிக்க தீபிகாவிடமும் பேசிவருகிறார்கள். படத்தின் பட்ஜெட் 500 கோடியாம். ஹே ராம்!
நெட்ஃப்ளிக்ஸில் சூப்பர் ஹிட் அடித்த ஆன்தாலஜி படம் `லஸ்ட் ஸ்டோரிஸ்.’ அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், கரண் ஜோகர், திபாகர் பானர்ஜி என பாலிவுட்டின் நான்கு முன்னணி இயக்குநர்கள், பாலியல் பிரச்னைகளைப் பேசும் நான்கு வித்தியாசக் குறுங்கதைகள் என எடுக்கப்பட்ட படம். இப்போதே, அதே இயக்குநர் அணியை வைத்து ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ என்கிற புதிய திரைப்பட வேலைகளில் இறங்கியிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். அதே இயக்குநர்கள். ஆனால் இந்தமுறை பேய்க்கதைகளாம். நாலுபேரு நாலுவிதமா எடுப்பாங்க!

தமிழ்ப்படங்களை இந்தியில் ரீமேக் செய்ய, பெரிய போட்டாபோட்டி உருவாகியுள்ளது. அக்ஷய் குமார் அடுத்து, விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான ‘கத்தி’ ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘மிஷன் மங்கள்யான்’ பட இயக்குநர் ஜகன் சக்தி இயக்குகிறார். ஏற்கெனவே ‘துப்பாக்கி’ படத்தின் ரீமேக்கிலும் `சிறுத்தை’ படத்தின் ரீமேக்கிலும்கூட அக்ஷய்குமார்தான் நடித்திருந்தார். ரீமேக் ராஜன்!
இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சஸியின் அடுத்த படம் ‘ஐரிஷ் மேன்.’ இந்தப் படத்தில் ராபர்ட் டீ நீரோ, அல்பசீனோ, ஜோ பெஸ்ஸி என ஹாலிவுட்டின் மூத்த ஸ்டார்களை எல்லாம் மொத்தமாக நடிக்கவைத்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாக, எல்லோருக்குமே அதிர்ச்சி... 70களைத் தாண்டிய நடிகர்கள் எல்லாம் 40களின் தோற்றத்தில் இருக்க... எப்படிங்க என வியக்க... படத்தில் ஆன்டி ஏஜிங் வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வயதான நடிகர்களை எல்லாம் இளமையாகக் காட்டி அசத்தியிருக்கிறார்கள். தமிழுக்கு நிறைய தேவைப்படும்!