
- கலைப்புலி எஸ்.தாணு
ரஜினி சார் ``அடுத்து நாமதான் படம் பண்றோம்’’ என்று உறுதிசெய்த அந்த நாளில்தான் நான் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராக முழுமையடைந்ததாக உணர்ந்தேன். அளவில்லா மகிழ்ச்சியுடன் போயஸ் கார்டனிலிருந்து காரில் ஏறினேன். கார் என் வீட்டை நோக்கிப் புறப்பட, என் மனம் அப்படியே ரிவர்ஸில் பயணித்தது.
1985-ல் ‘யார்’ பட 100வது நாள் விழாவில் ‘ஏழை நண்பன் - பணக்கார நண்பன்’ கதையைச் சொல்லி, ‘‘தாணுவுக்கு நிச்சயம் நான் ஒரு படம் பண்ணுவேன்’’ என்று ரஜினி சார் சொன்ன பிறகு, இடைப்பட்ட 30 ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை அசை போட்டேன். ‘யார்’ பட நூறாவது நாள் அன்று இரவே வீட்டுக்கு வரச் சொன்ன ரஜினி சாரிடம் இயக்குநர்கள் சக்தி - கண்ணன் இருவரையும் அழைத்துக்கொண்டு போனேன். ரஜினி சார் ‘`எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க’’ என அவர்கள் இருவரிடமும் சொன்னார். ஆனால், இயக்குநர்கள் இருவருக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அது தட்டிப்போனது. தொடர்ந்து ரஜினி சாரும் நானும் படம் பண்ண வேண்டும் எனப் பேசுவோம். ஆனால், சூழல் சரியாக அமையாது.
1991-ம் ஆண்டு ரஜினி சார் என்னை ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்தார். கார் பார்க்கிங் பகுதியில் சேர் போட்டு உட்கார்ந்திருந்தவர், ‘`தாணு, நாளைக்கு நான் ஒரு ஷூட்டிங்குக்காக பாம்பே போறேன். ஹாலிடே இன் ஹோட்டல்லதான் தங்குறேன். ஈவ்னிங்ல ஃப்ரீயாகிடுவேன். ஒருநாள் விட்டு அடுத்த நாள் நீங்க அங்க ஒரு கதையோடு வாங்க. கதை கேட்கறேன்… சேர்ந்து பண்ணலாம்’’ என்கிறார்.

இந்த விஷயத்தை என் நண்பரான கலைப்புலி சேகரனிடம் சொல்கிறேன். அப்போது அவர் சிரஞ்சீவிக்காக ஒரு கதையைத் தயார் செய்து வைத்திருந்தார். கமர்ஷியலான சூப்பர் கதை. ரஜினி சாருக்கு மிகவும் பொருத்தமானது என்பதால், ‘`சேகரனை அழைத்துக்கொண்டு வருகிறேன்’’ என ரஜினி சாருக்குத் தகவல் சொல்லிவிட்டேன். அடுத்த நாள் காலை ரஜினி சார் சொன்னதுபோலவே மும்பை ஹாலிடே இன் ஹோட்டலுக்குப் போய்விட்டேன். அங்கே ரஜினி சார் அவருடைய செலவில் என் பெயரில் ஒரு ரூம் போட்டு வைத்திருந்தார்.
ரஜினி சாருக்குக் கதை சொல்லப் போகிறோம் என்கிற உற்சாகத்தில், ஹோட்டல் அறைக்குள் மகிழ்ச்சியாக நானும் சேகரனும் கதை சொல்லிப் பார்க்கிறோம். மாலை ஷூட்டிங் முடிந்து ரஜினி சார் வந்தார். அவருடைய அறைக்கு வரச்சொல்லி உபசரித்துவிட்டு, கதை கேட்கத் தயாரானார். சேகரன் கதை சொல்ல ஆரம்பித்தார். ஆனால், ரஜினி சாருக்குச் சொல்லவேண்டிய கதையைச் சொல்லாமல் வேறு ஒரு கதையைச் சொல்கிறார். தன்னுடைய நுட்பமான சினிமா அறிவை வெளிக்காட்டவேண்டும், ரஜினி சார் தன்னுடைய திறமையை மெச்ச வேண்டும் என்பதற்காகக் கலைப்படம் போல, ஒரு வாய்பேச முடியாதவரின் கதையைச் சொல்கிறார். எனக்கு அதிர்ச்சி. ஆனால், ரஜினி சார் முன்னால் என்ன சொல்வது எனத் தெரியாமல் அப்படியே உட்கார்ந்திருக்கிறேன். இடைவேளை வரை கதை சொன்னதும், ‘`மீதிக்கதையை சென்னை வந்து கேட்டுக்கிறேன்’’ என்று சொன்ன ரஜினி சார், அவரோடு உட்கார்ந்து சாப்பிட வைத்து எங்களை அனுப்பினார்.
அடுத்த நாள் அவர் ரூமுக்கு என்னைக் கூப்பிட்டு, ‘`என்ன தாணு, இப்படி ஒரு கதையைச் சொல்றார். 5 ரீல் வரைக்கும் வாய்பேசமுடியாதவரா நான் நடிச்சா என் ரசிகர்கள் எப்படி ஒத்துப்பாங்க’’ என்றார். ‘`ஆமாம் சார்… ஆனா, அவர் உங்களுக்குச் சொல்றதா வெச்சிருந்த கதையே வேற. இந்தக் கதையை ஏன் சொன்னார்னு எனக்கே தெரியல’’ என்றேன். ‘`சரி, நாளைக்கு ஐதராபாத்ல இருந்து பருசூரி பிரதர்ஸ் வர்றாங்க. நாம வேற கதை கேட்டு முடிவு பண்ணலாம்’’ என்கிறார். அந்த நேரத்தில்தான் கே.பாலசந்தர் சாருக்கு ஒரு படம் பண்ண வேண்டிய சூழல் வர, குருவுக்கு முன்னுரிமை கொடுத்து ‘கவிதாலயா’வுக்கு ஒரு படம் பண்ணினார் ரஜினி சார். அதுதான் ‘அண்ணாமலை.’
அடுத்து ஆர்.வி.உதயகுமாரிடம் ‘எஜமான்’ படத்தின் கதையைக் கேட்டதும், ‘`இந்தக் கதையை ஏவிஎம், பஞ்சு அண்ணன், தாணு... மூணு பேர்ல யாருக்குப் பண்றீங்க’’ எனக் கேட்டிருக்கிறார். ஆர்.வி.உதயகுமார், ஏவிஎம் நிறுவனத்தின் பாரம்பரியத்தை மனதில் வைத்து, ‘அவர்களுக்குப் படம் பண்றேன்’ எனச் சொல்லியிருக்கிறார். இது ஆர்.வி.உதயகுமாரே பின்னர் என்னிடம் சொன்ன தகவல்.
1992 இறுதியில் ஒரு நாள் என்னை போயஸ் கார்டனுக்கு அழைக்கிறார் ரஜினி சார். அப்போது நடிகர்களின் சம்பளம் அதிகமாக இருக்கிறது, தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகிறார்கள் எனப் பிரச்னைகள் போய்க்கொண்டிருந்த நேரம். ‘`தாணு, அடுத்து நாம படம் பண்ணலாம். முதல்ல சம்பளம் வேண்டாம். பட்ஜெட்ல பண்ணலாம். படத்தை விற்கும்போதே தயாரிப்பாளருக்கு 70 லட்சம் ரூபாய் லாபம் வரும். என்எஸ்சி (வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு) ஏரியாவை நான் சம்பளமா எடுத்துக்கிறேன். படம் ரிலீஸாகி ரெண்டு வாரம் ஆன பிறகு அவுட்ரைட் பண்ணலாம். அதுல வர்ற ஓவர் ஃப்ளோவுல 40 சதவிகிதம் உங்களுக்கு, 40 சதவிகிதம் ராகவேந்திரா டிரஸ்ட்டுக்கு, 20 சதவிகிதம் டெக்னீஷியன்ஸுக்கு’’ என்கிறார். அவுட்ரைட் என்பது பட ரிலீஸுக்கு முன்பு விநியோகஸ்தர்களிடம் அட்வான்ஸ் மட்டும் வாங்கிவிட்டு, படம் ரிலீஸான பிறகு வரும் கலெக்ஷனைக் கொடுப்பது. ரிலீஸுக்கு முன்பே முழுமையாகப் படத்தை விற்கும் பழக்கம் அப்போதில்லை.
ஒரு சாக்லேட் வண்ண டைரியில் இந்தக் கணக்குகளையெல்லாம் ரஜினி சார் எழுதிவிட்டு என்னை அனுப்பி வைத்தார். இந்தச் சம்பவத்தை ஏன் சொல்கிறேன் என்றால், ரஜினி சாருக்கு நடிக்க மட்டுமல்ல, சினிமா வியாபாரம் பற்றியும் நுட்பமாகத் தெரியும். தன்னை வைத்துப் படம் எடுக்கும் தயாரிப்பாளர், அதை வாங்கும் விநியோகஸ்தர்கள், வெளியிடும் தியேட்டர்காரர்கள் என யாரும் நஷ்டம் அடையக் கூடாது என நினைப்பவர். அதனால், ஒரு படம் தொடங்கும்போது எல்லா விஷயங்களையும் மனதில் வைத்துதான் முடிவெடுப்பார்.
ரஜினி சாரிடம் பேசிவிட்டு கண்ணாடி அறைக்குள் இருந்து வெளியே வருகிறேன். ராஜம் பாலசந்தரும், புஷ்பா கந்தசாமியும் உள்ளே நுழைகிறார்கள். ‘ரஜினி சாரோடு படம் பண்ணப்போகிறேன்’ என்கிற இந்த மகிழ்ச்சியான செய்தியை என் சகோதரருக்குச் சொல்லவேண்டும் என அன்று மாலை அவர் வீட்டுக்குப் போகிறேன். அப்போது லேண்ட் லைனுக்கு ரஜினி சார் வீட்டிலிருந்து போன் வருகிறது. என் வீட்டுக்கு அழைத்து அங்கே நான் இல்லையென்றதும் இந்த நம்பரை வாங்கியிருக்கிறார்கள். ‘`தாணு… டைரக்டர் சாருக்கு உடனடியா ஒரு படம் பண்ண வேண்டியிருக்கு. நாளைக்கு நான் சுவிட்சர்லாந்து போறேன். என்ன விஷயம்கிறதை அப்புறம் நேர்ல சொல்றேன்’’ என்கிறார் ரஜினி சார். அந்தப் படம்தான் ‘முத்து.’
1994-95… நான் தி.மு.க-விலிருந்து பிரிந்து வைகோவோடு ம.தி.மு.க-வில் இருந்த நேரம். ரஜினி சார் தாணுவுக்கு கால்ஷீட் கொடுக்கப்போகிறார் என்கிற தகவல் இண்டஸ்ட்ரி முழுக்கப் பரவியது. இந்தச் சூழலில்தான் மயிலாப்பூர் இடைத்தேர்தல் வர, ம.தி.மு.க-வின் முதல் வேட்பாளராக என்னை நிற்கச் சொல்கிறார் வைகோ. அப்போது ரஜினி சாரைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னதும், அவர் என்னை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். அந்த நேரம்தான் அவர் சத்யா மூவீஸுக்கு ‘பாட்ஷா’ படம் பண்ணினார்.
இதன்பிறகு நானும் வெவ்வேறு படங்களில் கமிட் ஆகிவிட்டேன். ரஜினி சாரும் பிஸியாகிவிட்டார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து ரஜினி சாரோடு ஒரு படம் பண்ணும் சூழல் அமைகிறது.
இயக்குநர் சுந்தர்.சி வந்து கதை சொன்னார். 5 நிமிடங்கள்தான் சொல்லியிருப்பார். ‘`என்ன சார்… அதுக்குள்ள முடிச்சிட்டீங்க’’ என்றேன். ‘`இல்ல சார்… இதான் கதை. படம் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது மத்ததெல்லாம் சொல்லிடுறேன்’’ என்றார். ‘`இல்ல சார்… ரஜினி சார் படம் பண்றோம். முழுக் கதையும் கேட்டாத்தான் முடிவெடுக்க முடியும்’’ என்றேன். ரஜினி சாரைச் சந்தித்து இந்த விஷயத்தைச் சொன்னேன்.

‘`சார், இமயமலையில் நீங்க உட்கார்ந்து தவம் பண்ணிட்டிருக்கிற மாதிரி கதை ஆரம்பிக்குது. 5 நிமிஷம்தான் கதை சொல்றார். இது என்னவோ எனக்கு சரியா தெரியல சார்’’ என்கிறேன். ‘`அப்படியா, அப்ப லாரன்ஸ் மாஸ்டரோட சேர்ந்து படம் பண்றீங்களா. ஆனா, அவங்க ஃபர்ஸ்ட் காப்பி கேட்குறாங்க. உங்களுக்கு ஓகேவா?’’ என்கிறார். ‘`சார்… நான் உங்களை வெச்சு பிரமாண்டமா படம் பண்ணணும்னு நினைக்கிறேன். ஃபர்ஸ்ட் காப்பின்றது பட்ஜெட் ஆகிடும் சார்’’ என்கிறேன்.
‘`நீங்க ‘த்ரிஷ்யம்’ பார்த்தீங்களா? அதைத் தமிழ்ல பண்ணலாமா... தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியோட சேர்ந்து பண்றீங்களா’’ என்கிறார். ‘`சார்… இந்தப்படம் தெலுங்குல வெங்கடேஷை வெச்சு இப்ப ஆரம்பிக்கிறாங்க. அதனால உங்க படத்துக்குத் தெலுங்குல இருந்து வர்ற வியாபாரம் 40 கோடி போயிடும். அப்புறம் எனக்கு பார்ட்னர்ஷிப்பே வேணாம் சார். தனியா ஒரு படம் கொடுங்க’’ என்கிறேன். ‘`சரி தாணு… வேற கதை கேட்போம்’’ என அனுப்பிவைத்தார்.
சில நாள்களுக்குப் பிறகு என்னை மீண்டும் அழைத்தார். ‘`தாணு… என் மகள் செளந்தர்யா சொல்லி ‘மெட்ராஸ்’ படம் எடுத்த டைரக்டர் இரஞ்சித்தை மீட் பண்ணினேன். அவர் ஒரு லைன் சொன்னார். ரொம்ப நல்லாருந்தது. முழுசா ரெடி பண்ணிட்டு வரேன்னு சொல்லியிருக்கார். அது வொர்க் அவுட் ஆகும்னு நினைக்கிறேன். அவர் முழுக்கதையோட வந்ததும் நாம உட்கார்ந்து கதை கேட்டுடுவோம்’’ என்கிறார்.
இயக்குநர் பா.இரஞ்சித் ‘கபாலி’ படத்தின் முழு ஸ்கிரிப்டோடு வந்து கதை சொல்ல ஆரம்பிக்கிறார். வழக்கமாக இயக்குநர்கள் கதை சொல்வதுபோல் இல்லாமல், ஸ்கிரிப்ட் பேப்பரைப் பக்கம் பக்கமாகப் படித்துக் கொண்டே போகிறார் இரஞ்சித். ஓப்பனிங் காட்சி முதல் க்ளைமாக்ஸ் வரை அவர் சொல்லி முடித்தார்.
ரஜினி சார் சொன்னது என்ன, நான் இயக்குநர் இரஞ்சித்திடம் சொன்னதென்ன, ரஜினியின் நண்பராக படம் முழுக்க நடித்திருக்க வேண்டிய பிரகாஷ் ராஜ் நடிக்காமல்போனது ஏன், விஜய்யுடன் ‘தெறி’ ஷூட்டிங் அனுபவம்… அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்!
வெளியிடுவோம்