சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

கள்ளச் சிரிப்பழகி!

வித்யா பாலன்
பிரீமியம் ஸ்டோரி
News
வித்யா பாலன்

பாலிவுட்டில் கால் பதிக்க, கால் கடுக்கக் காத்துக்கொண்டிருந்த வித்யாவுக்கு முதல் அழைப்பு தன் சொந்த தேசமான மலையாளத்தில் இருந்து வந்தது.

“என் படத் தேர்வுகள் இருவழிப் பாதை. படைப்பாளிகள் சில கதைகளை எனக்காக எழுதிக்கொண்டு வருகிறார்கள். நான் அந்தக் கதைகளால் உந்தப்படுகிறேன். இருவரும் அச்சாலையில் சந்தித்துக்கொள்கிறோம். நான் அத்தகைய கதாபாத்திரங்களைத் தேடி அலைகிறேனா என்றால், அதற்கான பதில் எனக்குத் தெரியவில்லை. அதற்கான விடை தெரியாமல் இருப்பதுதான் எனக்கும் நல்லது.”

தன் சமீபத்திய படமான ‘ஷேர்னி’க்கான பேட்டியொன்றில் வித்யா பாலன் இப்படிச் சொன்னார். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்திய சினிமாக்களுக்கான ஆணிவேர் வித்யாதான். ஆனால், அது அவருக்கு எளிதாக அமைந்து விடவில்லை. மிடில் கிளாஸ் தென்னிந்தியக் குடும்பத்திலிருந்து வந்த வித்யாவுக்கு, நடிகையாகிவிட வேண்டும் என்பதுதான் கனவு. சைஸ் ஜீரோ உடல் அமைப்புகளும், ஐட்டம் டான்ஸ் நம்பர்களும் கொட்டிக்கிடந்த பாலிவுட்டுக்குள் வித்யாவால் அவ்வளவு எளிதாக நுழைய முடியாதுதான். ‘படித்து முடி, பார்க்கலாம்’ என்கிறது குடும்பம். சமூகவியலில் எம்.ஏ முடித்துவிட்டு மீண்டும் கனவுகளைத் துரத்த ஆரம்பிக்கிறார். ‘Arth’ படத்தில் ஷபானா ஆஸ்மி பேசிய வசனங்களைக் கண்ணாடி முன் நின்று, ஒப்பித்துப் பார்ப்பதுதான் வித்யாவின் அப்போதைய ஒரே நடிப்பு பயிற்சி. காட்சியில் அழ வேண்டும் என்பதற்காக, அழுகையை வரவழைத்துக் கொண்டு நடித்துப் பழகுவாராம். “கிளிசரின் பற்றியெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது” என, பின்னர் சொல்லிச் சிரித்தார் வித்யா.

வித்யா பாலன்
வித்யா பாலன்

பாலிவுட்டில் கால் பதிக்க, கால் கடுக்கக் காத்துக்கொண்டிருந்த வித்யாவுக்கு முதல் அழைப்பு தன் சொந்த தேசமான மலையாளத்தில் இருந்து வந்தது. அதுவும் லாலேட்டனுக்கு ஜோடி. ஆனால், படக்குழுவுடன் மோகன்லாலுக்குப் பிரச்னை வர, படம் பாதியில் நின்றுவிட்டது. Complete Actor எனப் பெயர்பெற்ற மோகன்லாலின் படம் எப்படி நின்றுபோகும், பழி வித்யாவின் மேல் விழுகிறது. நான்கு நாள்கள் மட்டுமே நடைபெற்ற மற்றொரு மலையாளப் படத்திலிருந்தும் மாற்றப்படுகிறார் வித்யா. மோகன்லால் படத்தின் நடிகை என்கிற அடைமொழியோடு 12 படங்களில் தேர்வாகியிருந்த வித்யாவை, அந்த 12 படங்களும் நிராகரித்தன. சில தயாரிப்பு நிறுவனங்கள் காரணம் தெரிவித்தன என்றால், பலவற்றைச் செய்தித்தாள் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியதிருந்தது. தொடர்ந்து, தமிழ்ப்படம் ஒன்றிலும் மாற்றப்படுகிறார். மற்றுமொரு தமிழ்ப்படத்தில் தேர்வாகி, கடைசித் தருணத்தில்தான் அது அடல்ட் காமெடி படம் எனத் தெரிகிறது. இந்த முறை வித்யா பாலனே விலகிக்கொள்கிறார். பிரதீப் சர்க்காரின் இசை வீடியோவில் நடிக்க, அதுவும் வெவ்வேறு பிரச்னைகளால் வெளியாகவில்லை.

மூன்றாண்டுகள் வித்யாவின் பிலிமோகிராபி என்பது இவ்வாறாக மட்டுமே இருந்தது. கனவுகள் இனி நிறைவேறாது எனத் தெரியும் அந்த நொடி, அந்த இரவு, ஆயிரம் பாம்புகளின் விஷம் ஒரே சமயத்தில் உடலுக்குள் ஏறுவதைப் போன்றது. மும்பை முழுக்க வாய்ப்புக்கு அலைந்து திரிந்தவருக்கு முதல் வாய்ப்பை வங்கமொழி வழங்குகிறது. ஆம், வாழ்க்கை அதன் அடுத்த நொடிக்குள் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம். லீனா கங்கோபத்யாவின் ஜன்மதின் கதையை வைத்து உருவான ‘பாலோ தீக்கோ’ படம் ஒருவழியாக வெளியானது. படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் வித்யாதான். மூன்று தேசிய விருதுகள் வென்ற படத்தில் வித்யாவுக்குக் கிடைத்தது பாராட்டுகள் மட்டும்தான்.

பாலிவுட்டுக்கான நுழைவுச் சீட்டை மறுபடியும் கொண்டு வந்தது இன்னொரு பெங்காலி நாவல்தான். அது, பிரதீப் சர்க்காரின் ‘பரினீதா’ படம். பிரபலமான முகத்தைப் போடலாமே என்கிறார் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா. ஆறுமாதகாலப் போராட்டம், எழுபதுக்கும் மேற்பட்ட ஆடிஷன்களுக்குப் பின்னர் வித்யாவைத் தேர்வு செய்கிறார்கள். சைஃப் அலி கான், சஞ்சய் தத் என இரு ஜோடி. 26 வயதில் முதல் படம். பாலிவுட் நாயகிகளின் கரியர் உச்சம் பெறும் தருணத்தில்தான் வித்யாவுக்கு முதல் வாய்ப்பே வருகிறது. முதல் படமே அவருக்கு அறிமுக நடிகைக்கான பிலிம்பேரைப் பெற்றுத் தருகிறது. படத்தின் எல்லா விமர்சனங்களிலும் வித்யாவின் பெயர் தவறாமல் இடம்பிடித்தது. ‘பியூ போலே’ பாடலை இப்போது நினைத்தாலும், வித்யாவின் கள்ளச் சிரிப்புகளும், கண் அசைவுகளும் நிழலாடும்.

கள்ளச் சிரிப்பழகி!

அதே தயாரிப்பு நிறுவனம், அதே சஞ்சய் தத். தற்போது ‘லகே ரஹோ முன்னா பாய்’ படத்தின் நாயகி. ஆர்ஜேவாக வந்தார் வித்யா. பெரிய வேடமில்லை. சஞ்சய் தத்தைப் பார்க்கும் இடங்களில் கண்கள் விரியச் சிரிக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்துக்கும் ஆர்ஜேக்களை நேரில் சந்தித்து அவர்களின் அனுபவங்களைப் பெற்று நடித்தார். கடந்த வாரம் வெளியான ‘ஷேர்னி’யின் போது, வித்யா நாற்பது வயதைக் கடந்துவிட்டார். ஆனால், ‘ஷேர்னி’க்கும் பெண் வனவிலங்கு அதிகாரிகள் பலரைச் சந்தித்திருக்கிறார். ஒரு விஷயத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டால், அதன் எல்லைவரை சென்று பார்த்துவிடுவதுதான் வித்யா ஸ்பெஷல். மணிரத்னத்தின் ‘குரு’வில் சின்னதொரு கதாபாத்திரம். தண்டுவட மரபு நோயால் பாதிக்கப்பட்ட பெண் என்பதைத் தாண்டி அதில் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. ஆனால், அவரின் இறுதிக்காட்சி மென்சோக மனநிலையை நமக்குள் உண்டாக்கிவிடும். அக்‌ஷய் குமாருடன் நடித்த ‘ஹே பேபி’யில் கிளாமர் மோடு என்றால் ‘கிஸ்மத் கனெக்‌ஷன்’னில் அவரின் ஆடைத் தேர்வுகள் சர்ச்சையாகின. ‘இதெல்லாம் உங்களுக்கு செட்டாகல வித்யா’ என்றது பாலிவுட்.

அடுத்து ‘மணிச்சித்திர தாழ்’ ரீமேக் ‘பூல் புலையா.’ மீண்டும் அக்‌ஷய் குமார் ஜோடி. ஷோபனா, தமிழில் ஜோதிகா செய்த கதாபாத்திரம் வித்யாவுக்கு வந்தது. ஸ்ப்லிட் பர்சனாலிட்டி கதாபாத்திரம் என்பதால், யாரோடும் பேசாமல் மூன்று நாள்கள் தனிமையில் இருந்து செட்டிலேயே மயங்கி விழுந்ததெல்லாம் தனிக்கதை. ‘பா’ படத்தில் அமிதாப்புக்கு அம்மா. 30 வயதான வித்யாவுக்கு, அறுபது வயதான அமிதாப் மகன். ஆணாதிக்கச் சமூகத்தை விளாசுவது, Progeria பாதிக்கப்பட்ட சிறுவயது அமிதாப்பைக் கவனித்துக்கொள்வதென, வித்யா இந்த முறை எடுத்தது அடுத்தகட்டப் பாய்ச்சல். கதாபாத்திரத் தேர்வு குறித்து வித்யா அதிகம் யோசிப்பார். ஆனால் எதிலும் பின்வாங்கியதில்லை. அடுத்த படமான ‘இஷ்கியா’வோ, அறுபது வயதான நஸ்ரூதீன் ஷாவையும், அர்ஷாத் வர்ஸியையும் காமப் பார்வையால் இழுத்து, காரியம் சாதித்துக்கொள்ளும் கதாபாத்திரம். வித்தியாசமான கதை என்றால் வித்யா என்றது பாலிவுட். பா, இஷ்கியா எனத் தொடர்ந்து பிலிம்பேர்கள் வித்யா வசம்தான்.

கிளாமருக்கு செட்டாகாதவர் வித்யா என்பதை முற்றிலுமாய் மாற்றிய ஆண்டு 2011. இரு நாயகிகளைக் கொண்ட ‘No One killed Jessica’ பெயர் வாங்கினாலும், யாரும் எதிர்பார்க்காத நிலையில் வெளியானது ஆயிரம்வாலா சரவெடியான ‘தி டர்ட்டி பிக்சர்.’ வித்யாவால் செய்ய முடியாது என எகத்தாளமிட்ட பாலிவுட், வித்யாவா இது என வாய் பிளந்தது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு என்கிற படத்தில் சர்ச்சைகள் இருந்தாலும், எவர் கண்களிலிருந்தும் அகல மறுத்தார் வித்யா. சூர்யகாந்தாக நஸ்ருதீன் ஷாவும், சில்க்காக வித்யாவும் பாலிவுட்டின் கமெர்ஷியல் ஃபார்முலாவைத் தூளாக்கினர். வெகுளித்தனம், குறும்புத்தனம், மென்சோகம் என எல்லாமும் கலந்து கெத்துக் காட்டினார் வித்யா. இந்த முறை பிலிம்பேர்களோடு, தேசிய விருதும் ஒட்டிக்கொண்டது.

கள்ளச் சிரிப்பழகி!

அவர் நடிக்கும் படங்கள் பெண்களை முன்னிலைப்படுத்தும் படங்கள் என்று சொல்வதைவிட, வித்யா பாலன் பாணி திரைப்படங்கள் என்று சொல்வதே நியாயமாக இருக்கும். கொல்கத்தா வீதிகளில் வயிற்றைத் தள்ளிக்கொண்டு நிறைமாத கர்ப்பிணியாக நடித்த ‘கஹானி’ அதில் முக்கியமானது. லகே ரஹோவில் வெறும் ஆர்ஜே என்றால், ‘தும்ஹாரி சூலு’வில் கள்ளச் சிரிப்புடன் இரவு நேரத் தனிமை சூழ் மனிதர்களுடன் உரையாடும் வாய்ப்பு. ‘காற்றின் மொழி’ ஜோதிகாவின் வெர்ஷன் பார்த்தவர்களும், தவறாமல் வித்யா சொல்லும் ‘ஹலோ’ வைப் பார்க்க வேண்டும். குரலிலேயே அத்தனை கிறக்கங்களையும் ஏற்படுத்திவிடுவார். ‘நேர்கொண்ட பார்வை’, ‘NTR’ எல்லாம் தன்னைத் தவறவிட்ட தென்னிந்தியாவில் மீண்டும் கால்பதிக்க நினைத்து சூடு போட்டுக்கொண்ட சம்பவங்கள்தான். அப்படியும் ‘NTR’ல் பிரமாதப்படுத்தியிருப்பார்.

இதோ ‘ஷேர்னி’யில் வன அதிகாரி. மொத்தமாய் ஃபிட்டாய் மாறி, மத்தியப்பிரதேசக் காடுகளுக்குள் அலைந்துகொண்டிருக்கிறார். ‘நீங்க எல்லாம் அவ்ளோதான்’ என அவர் பார்க்கும் பார்வை மற்றுமொரு சம்மட்டியடி. வித்யாவின் படங்களுக்கு நாயகர்கள் தேவையில்லை. ஏனெனில் வித்யா பாலன், ‘ஒன் வுமன் ஷோ.’