
‘தாமரை’ சின்னத்தை எங்களூரில் நான்தான் முதன் முதலாக வரைந்தேன். - பொன்வண்ணன்
“பணத்துக்காகச் செய்யும் வேலைகளை நம் திருப்திக்காக மட்டும் செய்யமுடியாது. ஆத்ம திருப்திக்காக நாம் செய்யும் வேலைகளைப் பணத்துடன் தொடர்பு படுத்திக்கொள்ளக் கூடாது. எனக்குள் இருக்கும் கலை என் உழைப்பின் களைப்பைப் போக்கும். அது நம்மை மீறி மக்களுக்காக மாறும்போது வேறு வடிவம் பெறுகிறது. இயல்பில் நமக்கு இருக்கும் திறமையை நாம் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.”
ஓவியரின் நிதானத்தோடு பேசுகிறார் நடிகர் பொன்வண்ணன். நடிகர், இயக்குநர் எனத் தனது திரைத்துறைப் பங்களிப்பின் வழியே மக்களுக்கு அறிமுகமானவர், ஊரடங்கு காலத்தில் சமூகவலைதளத்தில் தன் ஓவியங்கள் மூலம் கவனம்பெறுகிறார். அவ்வப்போது வெளிப்படையாக அரசியல் கருத்துகளையும் முன்வைக்கும் பொன்வண்ணனுடன் உரையாடியதிலிருந்து...

“ஓவியம்மீதான ஆர்வம் எப்போது ஏற்பட்டது?”
“6-ஆம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர் என்னை வரையச் சொன்னார். அப்போது ஒரு காளைமாடு வரைந்தேன். அதற்கு நிறைய பாராட்டு கிடைத்தது. ஓவியம் பற்றி நான் சிந்திக்கையில் என் மனதில் தோன்றும் சித்திரம் அதுதான். அதன்பிறகு முத்து காமிக்ஸ், இரும்புக்கை மாயாவி போன்றவற்றைப் படிக்கையில் ஓவியங்களின் வழியேயான அந்தக் கதை சொல்லல் ஈர்த்தது. கெய்ரோவில் ஜானி போன்ற கதைகளில் ஐரோப்பிய மனிதர்களை வரைந்திருப்பார்கள். அதன்பிறகு ஜெயராஜின் ஓவியங்கள் எனக்குள் பெரிய தாக்கத்தை உண்டாக்கின. கோபுலு, ராமு போன்றவர்கள், நம் மனிதர்களின் சாயலில் இருந்த அவர்களின் ஓவியங்கள் எனக்கு மற்றொரு புரிதலைக் கொடுத்தன. ஊரில் வெள்ளைச் சுவர்களில் கரியைக்கொண்டு வரைந்துகொண்டிருந்தேன். கள்ளிச் செடிகளில் முள் கொண்டு வரைந்திருக்கிறேன். கிராமத்து அரசியல் விளம்பரங்களில், உதயசூரியன், இரட்டை இலை எனச் சின்னங்கள் வரைந்திருக்கிறேன். ‘தாமரை’ சின்னத்தை எங்களூரில் நான்தான் முதன் முதலாக வரைந்தேன்.

``ஓவியத்தின் மீதான ஆர்வமிருந்த நீங்கள் சினிமாவுக்குள் எப்படி வந்தீர்கள்?’’
“ஓவிய ஆசிரியராக வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. சிறுவயதில் விகடன் படித்த தாக்கத்தில் ‘விகடகவி’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியிருக்கிறேன். ஓவிய ஆசிரியருக்கான தேர்வுகள் எழுதி, ஆசிரியர் பயிற்சிக்கும் தேர்வானேன். சூளைமேட்டிலிருந்த ‘Artland’ பேனர் கம்பெனியில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்தேன். பொருளாதார ரீதியாக இது கைகொடுக்காது என்பதை உணர்ந்தபின், ஆசிரியர் பணி கிடைக்கும்வரை சினிமாவில் பணிபுரியலாம் என உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். பின் இயக்குநராக, நடிகராக எனத் திரைத்துறை அனுபவம் தொடர்கிறது.”

``ஓவியங்களோடு சேர்ந்து ஓவியங்கள் சார்ந்த வரலாற்றையும் தொடர்ச்சியாக எழுதி வருகிறீர்களே?’’
“ஈரோடு மாவட்டம் மொடாக்குறிச்சிதான் என் சொந்த ஊர். எந்த வாசிப்புப் பின்புலமும் இல்லாத விவசாயக் குடும்பம். என் ஓவியம்மீதான ஆர்வம் வந்தபோதே வாசிப்பின் மீதான ஆர்வமும் வரத் தொடங்கியது. நூலகத்தில் நிறைய நேரம் செலவிட்டு வாசித்திருக்கிறேன். மர்மக் கதைகள் வாசிப்பதில் ஆர்வம் இருத்தது. மின்சார வசதியற்ற எங்கள் ஊரில் விளக்குக் கம்ப வெளிச்சத்தில் பயணிக்கும்போது அந்த மர்மம் சார்ந்தே சிந்தித்துக்கொண்டிருப்பேன். பிறகு சாண்டில்யன் கதைகள் படித்தபோது வரலாற்றைத் தெரிந்துகொண்டேன். நீலகண்ட சாஸ்திரிகளின் வரலாற்று நூல்களைப் படித்தேன். தொடர்ச்சியாக மனிதனின் தோற்றம், வரலாறு குறித்து நிறைய வாசித்தேன். ஓவியத்தைப் பிரதானமாகக் கொண்டு மனித வரலாற்றைத் தொகுத்து எழுதிக் கொண்டிருக்கிறேன். மனிதன் தோன்றிய தினம் தொடங்கி ஆயிரம் ஆயிரம் வருடங்களாகத் தொகுத்து உலக வரலாற்றை எழுதிவருகிறேன். மூன்று வருடங்களாக அதற்காகப் படித்தும் எழு தியும் வருகிறேன். எகிப்தில் பிரமிடுகளில் அந்தக் கலாசாரத்தில் வாழ்ந்த எளிய மக்கள் குறித்த ஓவியங்களும் இருக்கும். இதுபோன்ற பல வரலாறுகளை ஓவியத்தின் வழியாக சுவாரஸ்யமாகச் சொல்லும் நூலாக அது இருக்கும்.’’

“ஓவியத்தின் வழியே சமகால அரசியலைப் பதிவு செய்து வருகிறீர்கள். அந்த அரசியல் பார்வை எப்போது தொடங்கியது?’’
“அரசமைப்பு, போர் போன்றவை எளிய மக்களை எப்படி பாதிக்கின்றன என்ற பார்வையை நான் படித்த கம்யூனிச புத்தகங்கள் கொடுத்தன. கையெழுத்துப் பத்திரிகை நடத்தியபோதே உள்ளூர் அரசியலை விமர்சித்து ஓவியங்கள் வரைவேன். நமக்கென வாழ்க்கை அனுபவத்தில், வாசிப்பில் ஒரு அரசியல் பார்வை இருக்குமல்லவா, அதைத்தான் என் ஓவியத்தில் நான் பிரதிபலிக்கிறேன். இவ்வளவு வளர்ச்சியடைந்த நாட்டில் கைக் குழந்தைகளைச் சுமந்து கொண்டு நடந்தே சொந்த ஊர்களுக்குச் செல்லும் மனிதர்களைப் பார்க்கையில் மனம் சமநிலை இழக்கிறது. வழியில் குடிநீர் கூடக் கிடைக்குமா அவர்களுக்கு என்பது தெரியாது. என்னிடம் உள்ள கருவியின் வழியே என் கருத்தை நாகரிகமாக, பொறுப்பு ணர்வுடன் பதிவுசெய்ய விரும்புகிறேன்.”

“கொரோனா காலகட்டத்தில் நம் சமூகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“மனிதர்கள் என்கிற அடையாளம் தவிர்த்து சாதி, மதம், நிறம், என வேறு வேறு அடையாளங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். நமது சமூக வளர்ச்சி என்பது இந்தக் காரணங்களால் பின்னோக்கி இருக்கிறது. இங்கு அரசியலும் அப்படிதான் இருக்கிறது. இன்று கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசின் உதவிகள் போதுமானதாக இல்லை. நண்பர்கள், சுற்றியிருப்பவர்களின் உதவியும் நிறைவானதல்ல. சாதியை, கடவுளை, மதத்தை, கட்சிகளைக் காப்பாற்றப் போராடியவர்கள் யாரையும் அவை எதுவும் காக்கவில்லை. சுயமுன்னேற்றத்துக்கு அறிவு வளர்ச்சி ஒன்றே வழிகோலும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டிய காலமிது. கொரோனாவுக்குப் பிறகு மாற்றம் வருகிறதா என்பதைப் பார்ப்போம்.’’

“லாக்டெளன் காலகட்டம் உங்களுக்கு எப்படி இருந்தது?”
“எனக்கு இந்த லாக்டெளன் புதிதானதல்ல. ‘லாக்டெளன்’ என்ற வார்த்தைதான் புதிது. மற்றபடி, நான் ஷூட்டிங் இல்லாதபோது 20 நாள்கள் வரைகூட வீட்டிலேயே என் நூலகத்தில் ஓவியம், வாசிப்பு எனச் செலவழித்திருக்கிறேன். தற்போதும் அப்படித்தான். ஆனால், இந்த நாள்களில் என் மனைவிக்குச் சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற வீட்டு வேலைகளில் உதவி செய்துகொண்டிருக்கிறேன். 30 வருடங்களுக்குமுன் என் அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் இதுபோல உதவியிருக்கிறேன். இப்போது என் மனைவிக்கு அதைச் செய்து கொண்டிருக்கிறேன்.”