சினிமா
Published:Updated:

“அஞ்சலியுடன் காதலும் கிடையாது; கல்யாணமும் கிடையாது!”

ஜெய்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெய்

“நீங்கள், பிரேம்ஜி... ரெண்டு பேரும் எப்போது கல்யாணச் சாப்பாடு போடுவீர்கள்?”

தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கே வருவதில்லை, அஞ்சலியுடன் காதல் எனத் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் ஜெய்யுடன் ஒரு மனம் திறந்த உரையாடல்...

“ ‘பகவதி’ டு ‘கேப்மாரி’ 17 வருட சினிமாப் பயணம் எப்படி?”

“உண்மையைச் சொல்லணும்னா, பதினேழு வருஷம் எப்படிப் போச்சுன்னே தெரியலை. என்னுடைய சினிமா கரியர்ல ஏ.வெங்கடேஷ், சுந்தர்.சி தவிர சீனியர் டைரக்டர்கள் படங்கள்ல நான் அதிகம் நடிச்சதில்லை. பெரும்பாலும் புதுமுக இயக்குநர் படங்கள்லதான் நடிச்சிருக்கேன். ரொம்பநாள் கழிச்சு, சீனியர் இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகர் சார் படத்தில் நடிச்சிருக்கேன். ‘கேப்மாரி’தான் தான் இயக்கும் கடைசிப் படம்னு அவர் சொல்லியிருக்கார். அவர் தன் முடிவை மாத்திக்கணும். இன்னும் நிறைய படங்கள் பண்ணணும்னு ஆசைப் படறேன்.”

“ ‘சுப்ரமணியபுரம்’ ஹிட். இருந்தும் ஷோலோ ஹீரோவாக உங்களால் ஜெயிக்க முடியவில்லையே? உங்களுக்குப் பின்னால் வந்த சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி எல்லாம் முன்னணி நடிகர்களாகி விட்டனரே?”

“நீங்கள் சொல்வது உண்மைதான் ‘சுப்ரமணிய புரம்’ படத்துக்குப் பிறகு மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டான ‘கோவா’ படத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

jai, anjali
jai, anjali

ஏனென்றால் எனக்கு ‘சென்னை 600028’ படத்தில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்ல நடிக்க வெச்சவர் வெங்கட்பிரபு. சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி ரெண்டு பேருக்கும் அமைந்த கதை, கிடைத்த டீம் எல்லாம் அவங்களை வேற லெவலுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துடுச்சு. அதுக்காக எனக்குக் கிடைச்ச டீம் சரியில்லைன்னு நினைச் சுடாதீங்க. எனக்கு என்னமோ டைம் சரியில் லைன்னு நினைக்கிறேன். எல்லாப் படங்களையுமே நல்லா ஓடும்னு நம்பித்தான் நடிக்கிறேன். ஏதோ ஒரு இடத்துல தப்பு நடத்துட்டா அது மொத்தமாக அந்தப் படத்தையே பாதிக்குது. இனிமே அப்படி நடக்காமப் பார்த்துக்கணும்!”

“நீங்கள், பிரேம்ஜி... ரெண்டு பேரும் எப்போது கல்யாணச் சாப்பாடு போடுவீர்கள்?”

“எங்களுக்கெல்லாம் முன்னோடியாக அண்ணன் சிம்புன்னு ஒருத்தர் இருக்காரே, அவரை மறந்துட்டீங்களா? இப்போ பிரேம்ஜிக்கு 45 வயதாகிறது. காலண்டரில் இருக்குற மகாலட்சுமி மாதிரியே பொண்ணு வேணும்னு வருஷக்கணக்கா தேடிக்கிட்டேயிருக்கார். சரி, அவரை விடுங்க. என் கதைக்கு வர்றேன். எப்போ பல ஹிட் படங்கள் கொடுத்து, தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய ஹீரோவா மாறுறேனோ, அப்போதான் எனக்குக் கல்யாணம்!”

“அப்போ அஞ்சலியுடன் காதல், கல்யாணம்...?”

“எனக்கே தெரியாம என்னைப்பத்தி என்னென்னமோ பேசுறாங்க. கல்யாணம்கிறது நல்ல விஷயம்தானே! அஞ்சலியைக் கல்யாணம் பண்ணிட்டா அதை ஏன் மறைக்கணும்? அஞ்சலியுடன் எனக்குக் காதலும் கிடையாது; கல்யாணமும் கிடையாது!”

“உங்களுக்கும், சிம்புவுக்குமான நட்பு எப்படி?”

“விஜய் சாருடன் ‘பகவதி’ நடிச்சு முடிச்ச பிறகு அந்தப் பட டைரக்டர் வெங்கடேஷ் சார் ‘தம்’ படத்துக்காக தேவா அப்பாவைப் பார்க்க வந்தார். அப்போ சிம்புவும் கூட வந்தார்.

 “அஞ்சலியுடன் காதலும் கிடையாது; கல்யாணமும் கிடையாது!”

என்னைப் பார்த்தவுடனே சிம்புவுக்குப் பிடிச்சுப்போச்சு. என் போன் நம்பரை வாங்கிக்கிட்டுப் போனவர், மறுநாளே ‘சினிமாவுக்குப் போலாமா’ன்னு கூப்பிட்டார். அவரோட புண்ணியத்துலதான் முதன்முதலா சத்யம் தியேட்டரையே நான் பார்த்தேன். சினிமாவைப் பத்தி நிறைய பேசினார். ஆங்கிலப் படங்கள் நிறைய பார்க்கச் சொன்னார் அப்போதிருந்தே பயங்கர ஃபிரெண்ட்ஸ் ஆகிட்டோம்.”

“ ‘தயாரிப்பாளர்களை டார்ச்சர் செய்யும் நடிகர் ஜெய்’ என்று ‘பலூன்’ தயாரிப்பாளர் நந்தகுமார் குமுறியிருக்கிறாரே?”

“என்னைப்பத்தி யாராவது நல்ல விஷயம் சொன்னா, அதைப்பத்தி நான் பதில் சொல்வேன். ஆனால் அவர் என்னைப்பத்தித் தப்பாப் பேசியிருக்கார். என்கிட்ட பிரச்னை இருக்குன்னா, அதை என்கிட்டேதானே முதல்ல சொல்லணும்; மீடியாகிட்டே சொன்னால் என்ன அர்த்தம்? எனக்குத் தேவையான விஷயங்களுக்கே பதில் சொல்ல நேரமில்லை. இந்தமாதிரி தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை.”

 “அஞ்சலியுடன் காதலும் கிடையாது; கல்யாணமும் கிடையாது!”

“நீங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகச் செய்திகள் வெளியானதே?”

“உண்மைதான். ஏழாண்டுகளாக நான் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிறேன். எனக்கு இஸ்லாம்மீது இனம்புரியாத நம்பிக்கை ஏற்பட்டுச்சு. ‘சாமியே கும்பிடாத பிள்ளை, ஏதோ ஒரு சாமியையாவது கும்பிடறானே’ன்னு வீட்டில சந்தோஷப் பட்டாங்க. மதம் மாறினாலும் இன்னும் பேர் மாத்தலை. அஜீஸ் ஜெய்னு பேரை மாத்திக்கலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்!”

“நீங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன்களில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது ஏன்?”

“முதலில் ஒரு விஷயம். சினிமா விழாக்களில் கலந்துகிட்டு மேடைகளில் பேசுறது ஒரு கலை. அது எனக்குத் தெரியாது, வராது. எனக்கு முன்னாடி உள்ள சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் பலபேர் ‘நாம நடிச்ச படத்தைப்பத்தி நாமே பேசக்கூடாது; மத்தவங்கதான் பேசணும்’னு சொல்லிருக்காங்க. அதைத்தான் நான் ஃபாலோ பண்ணணும்னு நினைக்கிறேன். படத்தோட புரமோஷனுக்கு டிரெய்லர் இருக்கு, போஸ்டர் இருக்கு. இது போதாதா? ‘நான் இந்தப் படத்துல நல்லா நடிச்சிருக்கேன்’னு சுயதம்பட்டம் அடிக்கறது பிடிக்காது. நல்லா இருக்குன்னு நான் பப்ளிசிட்டி பண்ணிட்டு அப்புறமா படம் நல்லாயில்லைன்னா மக்கள் என்னைத் தப்பா நினைக்க மாட்டாங்களா?”