சினிமா
Published:Updated:

“பிரிந்தபிறகும் பிரியத்துடன் இருங்கள்!”

Amala Paul
பிரீமியம் ஸ்டோரி
News
Amala Paul

“சண்டைக் காட்சிகளுக்காகத் தனியா பயிற்சி எடுத்திருக்கீங்களாமே?”

“ரெண்டு நாளில் நடக்குற கதைதான் இந்தப் படம். காட்டுக்குள்ளே மாட்டிக்குற ஒரு பெண் என்ன பண்ணப்போறா அப்படிங்குற விறுவிறுப்பு படம் முழுக்க வரும். கதையா கேட்டப்போ ரொம்பச் சுலபமா தெரிஞ்சது. ஆனா படமாக்குறப்போ நிறைய சவால்கள் எங்களுக்காகக் காத்துட்டிருந்தது’’ என்கிறார் அமலா பால். ‘அதோ அந்தப் பறவைபோல’ படத்துக்காகக் காடு, மலை சுற்றி வந்திருந்தவரிடம் படம் குறித்துப் பேசினேன்.

அமலா பால்
அமலா பால்

“நான் கேரளப் பொண்ணு. காடு, மலை, அருவி இதெல்லாம் எனக்குப் புதுசில்லை. இந்தப் படத்தோட கதை காட்டைச் சுத்தி டிராவல் ஆகுற மாதிரியிருந்தது. அதனாலேயே படத்துக்கு ஓகே சொல்லிட்டேன். ஹாலிவுட்ல அட்வெஞ்சர் படங்கள் நிறைய வரும். நம்மூர்ல ரொம்ப அபூர்வமா எப்போவாதுதான் இந்த மாதிரியான படங்களை எதிர்பார்க்க முடியும். ‘அதோ அந்தப் பறவை போல’ கதை அட்வெஞ்சர் த்ரில்லர் ஜானர். டைரக்டர் வினோத்தும், ரைட்டர் அருணும் கதை சொன்ன விதமே சுவாரசியமா இருந்தது.

ஆந்திராவுல இருக்குற தலக்கோணத்தில ஷூட்டிங் நடந்தது. 41 நாள் முழுக்க அங்கேதான் இருந்தோம். ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் புதுவிதமான அனுபவமா இருந்தது. சகதி, சேத்துல உருண்டு புரண்டிருக்கேன். அறுபது அடி மரத்துல ஏறி இறங்கியிருக்கேன். இத ஒரே ஷாட்ல பண்ணினேன். படத்தோட யூனிட்டுதான் கொஞ்சம் பயந்தாங்க. ரொம்ப கவனமா என்னைப் பார்த்துக் கணும்னு நினைச்சிட்டிருந்தாங்க. ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்குப் போறப்போ என் உயரத்துக்குப் பாதி வரைக்கும் தண்ணியிருக்கும், அதைக் கடந்துதான் போனோம். ரொம்ப சாதாரணமா இதெல்லாம் பண்ணிட்டேன்’’ என்று உற்சாகமாகப் பேசிக்கொண்டே போகிறார்.

“சண்டைக் காட்சிகளுக்காகத் தனியா பயிற்சி எடுத்திருக்கீங்களாமே?”

“ஆமா, Krav Maga பயிற்சி எடுத்துக்கிட்டேன். Israeli security forces-ல இதைப் பயன்படுத்துவாங்க. படத்தோட டைரக்டர் வினோத் கதை சொல்றப்போ ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இருக்கும்னு சொன்னார். ‘அதெல்லாம் பிரச்னை இல்லை. லைட்டா ஒரு உதை விடுறது தானேன்னு’ ஈஸியா சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் Krav Maga வீடியோ போட்டுக் காட்டினாங்க. இஸ்ரேல் பொண்ணுங்க எப்படி ஃபைட் பண்ணியிருக்காங்கன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் உதற ஆரம்பிச்சிருச்சு.

அமலா பால்
அமலா பால்

ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே மூணு மாசம் எனக்குப் பயிற்சி கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க. சண்டைக் காட்சிகளெல்லாம் முன்னாடியே ரிகர்சல் பண்ணிப் பார்த்தோம். தமிழ்நாடு Krav Maga அசோசியேஷன் தலைவர் ஸ்ரீராம் மாஸ்டர் வந்தார். பெரிய போலீஸ் ஆபீஸருக்கு பயிற்சி கொடுக்குற ஸ்ரீராம் மாஸ்டர் எனக்குப் பயிற்சி கொடுக்க முன்வந்தார்.”

“தொடர்ந்து த்ரில்லர் ஜானர் படங்களில் நடிக்க காரணம் என்ன?”

“ ‘ஆடை’ த்ரில்லர் ஜானர்னு நினைக்குறாங்க. ஆனா ஒரு பொண்ணோட உளவியலில் ஏற்படும் மாற்றம்தான் அந்தப் படத்தின் அடிப்படை. ‘அதோ அந்தப் பறவைபோல’ பொறுத்தவரைக்கும் இந்த கேரக்டருடைய பலம், தைரியம், சாகசம் இதெல்லாம் பிடிச்சிருந்தது. என்னைத் தேடி நிறைய த்ரில்லர் ஜானர் படங்கள் வருது. சில படங்களைத் தவிர்க்கவும் செய்றேன்.”

“விவாகரத்துக்குப் பிறகுதான் அமலாபால் நிறைய துணிச்சலான படங்கள் நடிக்கிறாரே?”

“அப்படிச் சொல்ல முடியாது. விவாகரத்துல இருந்து நிறைய விஷயங்களும் கத்துக்க முடிஞ்சது. குழந்தைகள் இருக்குறவங்க தயவுசெஞ்சு விவாகரத்து பண்ணாதீங் கன்னுதான் சொல்லுவேன். ஒருவேளை சேர்ந்து வாழ முடியலைன்னாலும் பிரியும்போது பரஸ்பர சம்மதத்துடன், புரிதலுடன், அதே மரியாதை, அன்புடன் பிரிய முடிவெடுங்க. திருமண வாழ்க்கையில் நிறைய காதலுடன் வாழ்ந்திருப்பாங்க. பிரியும்போது நேரெதிரா எதிரியா மாறணும்னு அவசியமில்லை. பிரிவுக்குப் பிறகும் நட்பும் மரியாதையும் தொடரலாம்; தொடரணும்!”

“ ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ ரீமேக்ல உங்களுக்கு எந்த மாதிரியான ரோல்?”

“எந்த மாதிரியான ரோல்னு இப்போதைக்குச் சொல்ல முடியாது. இந்தியில இருந்த கதையை அப்படியே தெலுங்குல ரீமேக் பண்ணலை. ரெண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கு. அடல்ட் கன்டென்ட்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.”

“நடிகை அமலாபால், தயாரிப்பாளர் அமலாபால் ஆகப்போறாங்களாமே?”

“ஆமாம். சீக்கிரம் ‘தயாரிப்பாளர் அமலா பால்’னு டைட்டில் கார்டுல பார்க் கணும்னு ஆசையா இருக்கு. படத்தோட பேர் ‘கடாவர்.’ ரோமானியப் பெயர். நானும் நடிச்சிருக்கேன். என்னைத் தவிர அதுல்யா ரவி, முனீஸ்காந்தும் இருக்காங்க. த்ரில்லர் ஜானர். போஸ் மார்ட்டம் பற்றிய கதை. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் போயிட்டிருக்கு” என்று சிரிக்கிறார் ‘தயாரிப்பாளர் அமலாபால்.’