சினிமா
Published:Updated:

“சசிகுமாரிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன்!”

சந்தியா
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தியா

- `காதல்’ சந்தியா

`காதல்’ சந்தியா. பள்ளி படிக்கும்போது நடிக்க வந்தவர், தற்போது அவர் குழந்தையைப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். சினிமாவில் நடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. கணவர் வெங்கட்டும் மகள் ஷேமாவுமான உலகத்தில் மகிழ்ச்சியாக இருந்தவரிடம் பேசினேன்...

``ரேவதி எப்படி சந்தியா ஆனாங்க?”

“சசிகுமாரிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன்!”

“ `காதல்’ ஷூட்டிங் சமயம் ஒருநாள் என்கிட்ட ‘ரேவதி’ன்னு ஒரு பெரிய நடிகை இங்கே இருக்கிறதனால உங்க பெயரை மாத்தணும்’னு சொல்லி, ‘சந்தியா’ன்னு வெச்சுக்கலாம்னார் பாலாஜி சக்திவேல் சார். நானும் ஓகே சொல்லிட்டேன். படம் வெளியான பிறகு, ஷங்கர் சார் வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போ ஷங்கர் சாருடைய மனைவி என்கிட்ட, ‘இது எனக்கு ரொம்பப் பிடிச்ச பெயர். எனக்கொரு பெண் குழந்தை இருந்திருந்தால் நான் சந்தியான்னு பெயர் வெச்சிருப்பேன். நாங்க தயாரிக்கிற முதல் படத்துல அறிமுகமாகுற ஹீரோயின் அப்படிங்கிறதனால இந்தப் பெயரை உங்களுக்கு வெச்சுட்டோம்’னு சொன்னாங்க. அப்போதான் எனக்குப் பெயர் வெச்சது ஷங்கர் சாருடைய மனைவின்னு தெரிய வந்தது!”

``தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு நான்கு மொழிகளிலும் உங்களுக்கான அறிமுகம் சூப்பரா இருந்திருக்கு. ஆனால், சினிமாவில் உங்களுக்குப் பெரிய கரியர் அமையலையே!’’

“தமிழில் ‘காதல்’, தெலுங்கில் பவன் கல்யாண் சார்கூட ‘அன்னாவரம்’, மலையாளத்தில் ஜெயராம் சார்கூட ‘அலைஸ் இன் வொண்டர்லேண்ட்’, கன்னடத்தில் சிவராஜ்குமார் சார்கூட ‘நந்தா’ன்னு எல்லா மொழிகளிலும் என் அறிமுகப் படங்கள் நல்ல ஹிட். என்ன... சினிமாவில் வழிகாட்ட சினிமா நல்லாத் தெரிஞ்சவங்க யாராவது இருந்திருக்கலாம். என் அப்பா அம்மாவுக்கு சினிமா தெரியாது. எனக்குத் தெரிஞ்சவங்க சொன்னதை வெச்சு சினிமாவில் நடிச்சேன். ‘தங்கச்சி கேரக்டர், ஃபிரெண்ட் கேரக்டர் பண்ணிட்டாங்க’, ‘ஏன் இந்தப் பொண்ணு இந்தப் படம் பண்ணுச்சு?’ன்னெல்லாம் அப்புறம் பேசினாங்க. 16 வயசில் சினிமாவுக்குள்ள வந்தேன். இந்த இண்டஸ்ட்ரி புரியறதுக்குள்ள என் கரியர் கீழே போயிடுச்சு. அப்புறம் என்ன பண்ணினாலும் சில விஷயங்கள் வொர்க் அவுட் ஆகலை. இனிமே அதைப் பத்தி யோசிச்சி என்ன ஆகப்போகுது! ஆனா, ஒரு படத்துல நடிக்க வாய்ப்பு வந்தும் மிஸ் பண்ணிட்டேன்னு இப்பவும் வருத்தப்படுறேன். `சுப்ரமணியபுரம்’ படத்துல சுவாதி நடிச்ச கேரக்டர்ல நடிக்கக் கேட்டு, சசி சார் கதையெல்லாம் சொன்னார். `அடுத்தடுத்து புது டீம் கூட வொர்க் பண்ண வேண்டாம்’னு நினைச்சு அந்தப் படத்துக்கு நோ சொல்லிட்டேன். சசி சாருக்கு என் மேல கோபம், வருத்தம் இருந்திருக்கும். இந்தப் பேட்டி மூலமா அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். நான் உங்களைக் காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னிச்சுடுங்க சசி சார். உங்களுடைய வெற்றிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!”

“சசிகுமாரிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன்!”

``ஆணவக்கொலைகள் அதிகரிச் சுட்டுதான் இருக்கு. ‘காதல்’ படம் அதுபற்றி தான். அதுபற்றிய செய்திகளைப் பார்க்கும்போது என்ன தோணும்?’’

“வெளியுலகம் தெரியாத தனால நடக்கக்கூடிய விஷயம் அது. ‘காதல்’ படத்துல நிறைய பெண்கள் என்னை அடிக்கிற சீன்ல நிஜமாவே என்னை அடிச்சாங்க. நடிக்கும் போதே அவ்ளோ கஷ்டமா இருந்தது. அப்போ உண்மையான வாழ்க்கையில அந்தக் கொடூரத்தை யோசிச்சுப் பார்க்கவே முடியலை. இந்த மாதிரியான செய்திகளைப் பார்க்கும்போது அதிலிருந்து மீண்டு வர ரெண்டு நாளாகும்!”

``சீரியலில் நடிச்சுட்டீங்க... சினிமா வாய்ப்பு வருதா?!’’

“பொண்ணு வளர்ந்துட்டா. நாலு வயசு ஆகப்போகுது. இப்போ நடிக்கிறதுல பிரச்னையில்லை. நான் கல்யாணமாகி ஃபாரின்ல செட்டிலாகிட்டேன்னு நினைச்சிட்டிருந்திருக்காங்க. ஆனா, நான் இங்கதான் இருக்கேன். நல்ல கேரக்டர் நடிக்க நான் ரெடி. அது சினிமா, சீரியல், வெப் சீரிஸ்னு எதுவாக இருந்தாலும் சரி!”