பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“தமிழ் சினிமா மாறிடுச்சு!”

 பிரியாமணி
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியாமணி

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘நாரப்பா’, ‘மைதான்’ இரண்டுமே இந்திய சினிமாவின் முக்கியமான படங்களாக இருக்கும்.

தமிழ்த் திரையுலகில் முத்தழகாக முத்திரை பதித்த பிரியாமணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் பிஸி! தெலுங்கில் `அசுரன்’ ரீமேக்கான `நாரப்பா’, இந்தியில் `மைதான்’ என இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்திருப்பவர், தமிழில் `தலைவி’ படத்தில் நடிக்கவிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூன்று மொழிகளிலும் கம்பேக். எப்படி உணர்கிறீர்கள்?

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘நாரப்பா’, ‘மைதான்’ இரண்டுமே இந்திய சினிமாவின் முக்கியமான படங்களாக இருக்கும். அந்த அளவுக்கு வலுவான களங்கள் கொண்ட கதைகள் இரண்டும்.

 பிரியாமணி
பிரியாமணி

என் நடிப்புத்திறன்மேல நம்பிக்கை வெச்சு, இம்மாதிரியான முக்கியமான படங்கள்ல என்னை கமிட் பண்ணின இயக்குநர்களுக்குத்தான் பெரிய நன்றி சொல்லணும்.”

தமிழில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?

“கதைகள் தொடர்ந்து வந்துட்டுதான் இருந்தது. ஆனால், எனக்கான கதாபாத்திரம் அமையலை. என்னுடைய நடிப்புக்கு தேசியவிருது வாங்கித் தந்த தமிழ் சினிமாவில் இவ்வளவு நாள் படங்கள் நடிக்காம இருந்தது எனக்கும் வருத்தம்தான். அதற்கெல்லாம் சேர்த்து இப்போ நல்ல புராஜெக்ட்ஸ் மூலமா கூடிய விரைவில் ரசிகர்களைச் சந்திக்கப்போறேன்.”

`அசுரன்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறீர்கள். கனமான கதாபாத்திரம் உங்களுடையது. எப்படித் தயாராகிறீர்கள்?

“தமிழ்ல ‘அசுரன்’ படம் பார்த்தேன். எல்லோருமே அவ்வளவு சிறப்பா நடிச்சிருந்தாங்க. குறிப்பாக, தனுஷும் மஞ்சு வாரியரும். தமிழ்ல ‘அசுரன்’ சாதிய பிரச்னைகள், பஞ்சமி நிலப்பிரச்னைகளைச் சுத்தி இருக்கும். ஒரு படத்தை வேறொரு மொழிக்கு ரீமேக் பண்ணும்போது அந்த மொழி, வாழ்வியல், பண்பாடு, பிரச்னைகளுக்கு ஏற்ற மாதிரி படத்தின் மையக்கரு சிதையாமல் சில மாற்றங்கள் பண்ணுவாங்க.

 பிரியாமணி
பிரியாமணி

அதுமாதிரி ‘அசுரன்’ தெலுங்கில் ‘நாரப்பா’வா மாறும்போது கண்டிப்பா சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மஞ்சுவாரியர் பண்ணின பச்சையம்மாள் கேரக்டர்லதான் நடிக்கிறேன். தன் பிள்ளைகளுக்காக எதையும் செய்யக்கூடிய தைரியமான பச்சையம்மா, பர்சனலாவும் எனக்கு நெருக்கமான கதாபாத்திரம். நிச்சயம் அந்தக் கேரக்டர்க்கு என்னுடைய பெஸ்ட்டைக் கொடுப்பேன்.”

`மைதான்’ பயோப்பிக் குறித்து?

“இந்திய ஃபுட்பால் டீமின் பயிற்சியாளராக இருந்த சையது அப்துல் ரஹீமின் பயோபிக்தான் ‘மைதான்’. அஜய் தேவ்கன் சார், அப்துல் ரஹீமா நடிக்கிறார். நான் அவரின் மனைவியா நடிக்கறேன். படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சார், ‘மைதான்’ படத்தில் நடிக்க என்னை அப்ரோச் பண்ணினார். இயக்குநர் அமித், படத்தின் கதையையும், என் கேரக்டர் பத்தியும் சொன்னார். கேட்டதுமே எனக்குப் பிடிச்சிருந்தது. உடனே, நடிக்க சம்மதம் சொல்லிட்டேன்.”

 பிரியாமணி
பிரியாமணி

இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழ் சினிமா எந்தெந்த விஷயங்களில், எந்தெந்த விதத்தில் மாறியிருப்பதாக நினைக்கிறீர்கள்?

“அஞ்சு பாட்டு, ரெண்டு சண்டைன்னு தமிழ் சினிமா தன்னுடைய வழக்கமான கமர்ஷியல் பாதையிலிருந்து விலகி பல க்ளீஷேக்களை உடைச்சிருக்கு. நிறைய வித்தியாசமான கதைகள், திரைக்கதையில் புதுமைன்னு பல விதங்களிலும் முன்னேறியிருக்கு.”

`ஃபேமிலி மேன்’ பிரியாமணியைத் தெரியும். ஒரு ஃபேமிலி வுமனாக பிரியாமணி எப்படி?

“ `ஃபேமிலி மேன்’ பிரியாமணிக்கும் நிஜ பிரியாமணிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. அந்த வெப் சீரிஸ்ல குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுற குடும்பத்தலைவியா காட்டியிருப்பாங்க. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்லதான் நான் அதிகநேரம் இருப்பேன். என் குடும்பத்துடன் செலவிடக்கூடிய நேரம்ங்கிறது கம்மிதான்.”

‘தலைவி’... (கேள்வியை முடிப்பதற்கு முன்பே)

“இப்போ `தலைவி’ பத்தி நான் எதுவும் சொல்ல முடியாது. ‘தலைவி’யில் நான் இருக்கேனா, இல்லையான்னு சீக்கிரமே படக்குழுகிட்ட இருந்து அறிவிப்பு வரும்.”