
`த்ரிஷ்யம் 2’ இயக்குநர் ஜீத்து ஜோசப்
சமீபத்தில் ஓடிடி-யில் வெளியாகி விஸ்வரூப வெற்றியைக் குவித்த ‘த்ரிஷ்யம் -2’ மலையாள திரைப்படத்தை, தெலுங்கில் ஒருங்கிணைப்பு செய்யும் வேலைகளில் இருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப். ‘இந்த முறை பெண் ரசிகர்களிடமிருந்து நிறைய வாழ்த்துகள். ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது’ என்கிறார்.
மலையாள ‘த்ரிஷ்யம்’ தமிழில் ‘பாபநாசம்’ ஆனது. இப்போது ‘த்ரிஷ்யம் 2... சீக்வல்னா இப்படி இருக் கணும்’ என்று பாராட்டப்படுகிறது. என்றாலும், உங்கள் படத்தில் நீங்கள் உணரும் ஸ்லிப் ஏதாவது...
பொதுவாகப் படப்பிடிப்பு முடிந்த பிறகு, ‘இதை இப்படி செய்திருக்கலாமோ’ என எல்லா இயக்குநர்களுக்கும் தோன்றும். ‘த்ரிஷ்யம் 2’-ல் எனக்கும் தோன்றியிருக்கிறது. என்றாலும், க்ளைமாக்ஸில் இருக்கும் நேர்த்தி, படம் குறித்த நிறைவையே எனக்குக் கொடுக்கிறது.
மோகன்லால், கமல் என்ற இரண்டு நடிப்பு ராட்சதர்களின் பெர்ஃபாமன்ஸ் பற்றி...
இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களை, நான் உருவாக்கிய கேரக்டரில், மலையாளம், தமிழ் என நடிக்க வைத்தது என் பெரும் பாக்கியம். ‘ஜார்ஜ் குட்டி’யாக மோகன்லாலும், ‘சுயம்புலிங்க’மாக கமலும் தங்களின் தனித்தன்மையான நடிப்பில் அசத்தியிருந்தார்கள். ‘சுயம்புலிங்க’த்தை எமோஷனலாக வெளிப்படுத்தினார் கமல் சார். ‘ஜார்ஜ் குட்டி’யை உணர்ச்சிகளை மனதுக்குள் அடக்கிக்கொள்ள வைத்தார் மோகன்லால் சார். மொத்தத்தில், ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாக அமைந்தது.
மீனாவை ‘த்ரிஷ்யம்’ காஸ்டிங்கில் கொண்டு வந்தது எப்படி?
‘ராணி’ கேரக்டரில் ஓர் இல்லத்தரசியாக, மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் மீனா. அம்மாவின் தவிப்புடனும் இருக்க வேண்டும், மோகன்லாலுடன் ரொமான்டிக் ஜோடி யாகவும் வசீகரிக்க வேண்டும் என, இந்த டூ இன் ஒன் பொறுப்புக்கு யோசித்தபோது, மீனாதான் பெஸ்ட் எனப்பட்டது. அதை நிரூபித்துவிட்டார்.
ஓடிடி ரிலீஸ் ப்ளஸ், மைன்ஸ்...
தியேட்டர் ஃபீல் ஓடிடி-யில் கிடைக்காதுதான். என்றாலும், கொரோனா காலகட்டத்தில் ஓடிடி வாய்ப்பால் ‘த்ரிஷ்யம் 2’ ஒரே நாளில் 250 நாடுகளில் ரீலீஸ் ஆகியிருக்கிறது என்பதும் குட் நியூஸ்தானே... மேலும், ஓடிடி ரிலீஸால் அதிகளவில் பெண்கள் படம் பார்க்க முடிவது தெரிகிறது.
‘த்ரிஷ்யம் 3’..?’
‘த்ரிஷ்யம் 2’க்கு ஃப்ரேம் வொர்க் செய்ய ஐந்து ஆண்டுகள் ஆயின. ஆனால், ஒன்றரை மாதத்தில் அதை பேப்பரில் எழுதி முடித்து விட்டேன். ஒருவேளை ‘த்ரிஷ்யம் 3’ எடுத்தால் இப்படியெல்லாம் அதன் க்ளைமாக்ஸ் இருக்க வேண்டும் என என் மனதில் தோன்றியிருப்பது உண்மைதான். க்ளியரான ரூட் கிடைத்தால், ‘த்ரிஷ்யம் 3’ உருவாகும்.
‘த்ரிஷ்யம் 1’-ல், தனக்குத் தெரியாமல் தான் நியூடு ஃபிலிம் செய்யப்பட்டதில் அந்தப் பெண்ணின் தவறு எதுவும் இல்லை. அதற்காக அவளோ, அவள் குடும்பமோ வெட்கப்படத் தேவையில்லை என்பது, கடைசிவரை சொல்லப் படாமல் போனது ஏன்?
அது ஆர்த்தொடாக்ஸ் சிந்தனை கொண்ட ஒரு கிராமத்துக் குடும்பம். அவர்கள் அப்படித்தான் நடந்துகொள்வார்கள். என்றாலும் ‘த்ரிஷ்யம் 2’-வில், அந்தக் குடும்பம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேற்படிப்பு, வேலை, சுயசார்பு என்று ஊக்கம் கொடுத்து முழு சப்போர்ட்டிவ்வாக இருக்கும். மாற்றங்கள் அழகானது.
க்ரிமினல் மைண்டு என்று மோகன்லால் உங்களை கிண்டலடித்தாராமே...
படத்தில் நான் சேர்த்திருந்த டீட்டெய்லிங்கைப் பார்த்து விட்டு படப்பிடிப்பின்போது தமாஷாகச் சொன்னார். இந்தப் படத்துக்காக போலீஸ், தடயவியல் நிபுணர்கள், வழக்கறிஞர்கள் என இவர் களுடன் எல்லாம் டிஸ்கஸ் செய்தது செம அனுபவம்.

ஜீத்து ஜோசப் ஒரு விவசாயியா?
எர்ணாகுளம் மாவட்டத் தில் முத்தோல்புரம் கிராமத் தில் பிறந்தேன். அப்பா வி.வி.ஜோசப் மூவாற்றுபுழா தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்தார். மூன்று சகோதரர்கள் எனக்கு. அடிப்படையில் நான் ரப்பர் தோட்ட விவசாயி. விவசாயம் செய்துகொண்டிருந்தவன், ஆர்வத்தால் ஜெயராஜ் என்பவர் மூலம் சினிமாவுக்கு வந்தேன்.
உங்கள் உலகில் உங்களுக்கு பக்க பலமாக இருக்கும் பெண்கள்..?
அம்மா, மனைவி, என் இரண்டு மகள்கள் என நான் பெண்களால் ஆசீர்வதிக்கப்பட்டவன். பெண்களின் உலகத்தில் வாழ்வது ஒரு கிரியேட்டருக்கு நுண்ணுணர்வுகளை கற்றுக் கொள்ளும் பெரும் வாய்ப்பு.