கட்டுரைகள்
Published:Updated:

“விஜய்க்கு பதில் பிரசாந்த்!”

இயக்குநர் சுசி கணேசன்
பிரீமியம் ஸ்டோரி
News
இயக்குநர் சுசி கணேசன்

இயக்குநர் சுசி கணேசன் தன் முதல் பட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் வீட்டில் இருந்தபடியே க்வாரன்டீன் நாள்களைச் செலவழித்துவரும் செலிபிரிட்டிகளிடம், அவர்களின் நாஸ்டால்ஜியைத் தூண்டிவிடும் வகையில், `உங்களின் முதல் பட அனுபவத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்டோம். அதில் இயக்குநர் சுசி கணேசன் தன் முதல் பட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.
சுசி கணேசன்
சுசி கணேசன்

``முதல் படத்தைவிட அந்த முதல் படம் எடுத்துறதுக்காக நான் அலைந்தது முதல்ல ஞாபகம் வருது. என்னோட முதல் படமா `ஃபைவ் ஸ்டார்’ ரிலீஸாகியிருந்தாலும், நான் `ஆக்‌ஷன், கட்’ சொன்ன முதல் படம் `விரும்புகிறேன்.’ ஆனால் அந்தப் படத்தோட ரிலீஸ் தள்ளிப்போனதால், நான் என்னோட இரண்டாவது படத்தை இயக்கப் போயிட்டேன். அது முதல் படமா ரிலீஸாகிடுச்சு. நான் மணிரத்னம் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டு, தனியா ஒரு படம் பண்ணலாம்னு `ஜெய்ஹிந்த்’ படத்தோட தயாரிப்பாளர் செயின்ராஜ் ஜெயின்கிட்ட கதை சொன்னேன். செயின்ராஜ் சார் எப்போதுமே கதை கேட்கும்போது, அவரோடு சில நண்பர்களையும் சேர்த்துப்பார். அப்படி நான் கதை சொல்லும்போது `கரகாட்டக்காரன்’ படத்தோட தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமியும் இயக்குநர் டி.பி..கஜேந்திரனும் இருந்தாங்க. கதை சொல்லி முடிச்சதும், ‘சப்ஜெக்ட் ரொம்பப் புதுசா இருக்கு. நீங்க சொன்ன விஷூவல்ஸும் சூப்பரா இருக்கு. ஒரு பிரச்னையை மையமா வச்ச காதல் கதையா இருக்கு’ன்னு ரொம்பவே பாராட்டுனாங்க. அப்புறம், ‘படத்துல யார் நடிச்சா நல்லா இருக்கும்’னு பேசி, `விஜய் நடிச்சா நல்லா இருக்கும்’னு விஜய் அப்பாகிட்ட கதை சொல்லச் சொன்னாங்க. நான் அவர்கிட்ட போய் கதை சொன்னதும், ‘இன்னும் கொஞ்சம் ஆக்‌ஷன் வேணும்’னு சொன்னார். அதுக்கான வேலைகள் ஒரு பக்கம் போயிட்டிருந்தப்போ, டி.பி.கஜேந்திரன் சாரும் சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள்கிட்ட இந்தக் கதையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அப்படி இந்த விஷயம் நடிகர் முரளியோட காதுக்குப் போக, அவர் என்னைக் கூப்பிட்டுக் கதை கேட்டார். அவருக்கும் கதை பிடிச்சிருந்ததனால, `நானே ஒரு தயாரிப்பாளர் சொல்றேன்’னு சத்யஜோதி தியாகராஜன்கிட்ட என்னை அனுப்பி வெச்சார். தியாகராஜன் சாரும் கதையைக் கேட்டுட்டு, ‘கதை ரொம்ப நல்லா இருக்கு. உங்களுக்கு வேற ஹீரோவை வெச்சுப் பண்றதுக்கு ஓகேவா’ன்னு கேட்டார். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. செயின்ராஜ் ஜெயின் சாருக்குக் கதை சொல்லியிருக்கோம். அவர் விஜய் அப்பாகிட்ட கதைசொல்ல வெச்சிருக்கார். முரளி கதை கேட்டுட்டு ஒரு தயாரிப்பாளர்கிட்ட அனுப்பினார். அந்தத் தயாரிப்பாளர் என்னடான்னா எந்த ஹீரோ என்னை அனுப்பினாரோ அவரை விட்டுட்டு வேற ஹீரோவை வெச்சுப் பண்ணலாம்னு சொல்றார். நம்மளோட முதல் படம் எங்கோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்து நிக்கிதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன். திடீர்னு ஒரு நாள் தியாகராஜன் சார் என்னை அழைச்சிட்டுப் போய், பிரசாந்த்கிட்ட கதை சொல்லச் சொன்னார். பிரசாந்துக்கும் கதை பிடிச்சிருந்தது. உடனே ஸ்டார்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டாங்க. ஆனால், என்ன நடந்ததுன்னு தெரியலை; திடீர்னு சத்யஜோதி தியாகராஜன் சார் இந்தப் படத்துல இருந்து விலகிட்டார். அதுக்கப்புறம் பிரசாந்த் சொன்ன தயாரிப்பாளரை வெச்சு `விரும்புகிறேன்’ படத்தை உடனே ஸ்டார்ட் பண்ணினோம்.’’

‘`முதல் நாள் எடுத்த காட்சி ஞாபகத்தில் இருக்கா?’’

‘`நான் ஆனந்தவிகடனில் பத்திரிகையாளரா வேலை பார்த்துட்டு, அதுக்கப்புறம் சினிமாத்துறைக்குள் வந்தவன். அதனால், சென்டிமென்ட்டா முதல் சீனே, ஹீரோ பத்திரிகையாளர்களைச் சந்திக்கிற மாதிரிதான் எடுத்தேன். படத்துல ஹீரோ தீயணைப்புத்துறையில் வேலை பார்க்கிறவரா இருப்பார். ஒரு இடத்தில் எரியுற தீயை அணைச்சிட்டுத் திரும்ப வரும்போது ஹீரோகிட்ட பத்திரிகையாளர்கள், ‘ஏன் இந்த ஊர்ல அடிக்கடி தீவிபத்து நடக்குது; என்ன காரணம்’னு கேள்வி கேட்பாங்க. இதைத்தான் முதல் காட்சியா நான் ஷூட் பண்ணினேன்.’’

‘`முதல் படத்தோட ஷூட்டிங்கில் நடந்த மறக்கமுடியாத ஒரு விஷயம்...?’’

‘` ‘விரும்புகிறேன்’ படத்துல இளவட்டக் கல்லை ஹீரோ தூக்குற சீன் ஒண்ணு இருக்கும். அந்த சீன் எடுத்தப்போ, ஒரிஜினல் இளவட்டக் கல்லும் இருந்துச்சு. அதே மாதிரி தெர்மாகோல்ல தோட்டாதரணி சார் செஞ்சுகொடுத்த டம்மி கல்லும் இருந்துச்சு. ஏன்னா, க்ளோஸப் ஷாட்டுக்காகத் திரும்ப திரும்ப ஒரிஜினல் கல்லைத் தூக்க முடியாதுன்னு ரெடி பண்ணி வெச்சிருந்தோம். இந்த சீன் எடுக்கும் போது, ஷூட்டிங் பார்க்கிறதுக்காக ஊர் மக்கள் எல்லாரும் வந்திருந்தாங்க. அவங்க எல்லாரும் அந்த டம்மி கல்லைப் பார்த்துட்டுக் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. `சினிமானாலே இப்படித்தான்டா; எல்லாமே டம்மிதான்’னு பேச ஆரம்பிச்சிட்டாங்க.

 “விஜய்க்கு பதில் பிரசாந்த்!”
ஆனால், பிரசாந்த் வந்து ஒரிஜினல் கல்லை ஒரே டேக்ல தூக்கிப் போட்டதும், ஊரே கைதட்டுச்சு. அது மறக்கமுடியாத அனுபவம். அதுமட்டுமன்றி, இந்த சீனில் பிரசாந்த் கல்லைத் தூக்கிப்போட்டதும், ’கல்லைத் தூக்குனவன் நம்ம சாதிக்காரனா இருப்பானோ’ன்னு அவனோட சாதியைத் தெரிஞ்சுக்க, நாசர் சார் பிரசாந்த் கிட்ட, ‘நீங்க எந்த ஊர் தம்பி; குலதெய்வம் எது’ன்னு கேட்பார்.

அதுக்கு பிரசாந்த், ‘எதுக்குக் குலதெய்வத்தைக் கேட்கிறீங்க. அத வெச்சு நான் என்ன சாதின்னு கண்டுபிடிக்கப் போறீங்களா’ன்னு கேட்பார். அதைப் பார்த்துட்டு அந்த ஊர் மக்களில் ஒருத்தர் என்கிட்ட வந்து, ‘இந்த ஒரு சீனுக்கே அவார்டு சார்’னு சொல்லிட்டுப் போனார். அதே மாதிரி, இந்தப் படத்துக்குத் தமிழ்நாடு அரசு நான்கு விருதுகளைக் கொடுத்துச்சு. இருந்தாலும், எனக்கிருக்கிற வருத்தம் என்னன்னா, இந்தப் படம் நாங்க ப்ளான் பண்ணின தேதியில் வெளியாகியிருந்தால், மிகப்பெரிய வெற்றி கிடைச்சிருக்கும். ஆனால், நாங்க ப்ளான் பண்ணின தேதியில இருந்து ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் இந்தப் படம் ரிலீஸாச்சு.’’

பிரசாந்த்
பிரசாந்த்

‘`நீங்க இயக்கிய முதல் படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே எப்படி இரண்டாவது பட வாய்ப்பு கிடைச்சது?’’

``என்னுடைய முதல் படத்தோட கதையை மணிரத்னம்கிட்ட சொல்லப்போனேன். அவர் ‘நான் படமா பார்த்துக்கிறேன்’னு சொல்லிட்டார். அதேமாதிரி, படத்தை முடிச்சதுக்கு அப்புறம் அவர்கிட்ட போட்டுக் காட்டினேன். பார்த்துட்டு ரொம்பவே பாராட்டினார். ‘உன்னோட அடுத்த படத்தை நம்ம கம்பெனிக்கே பண்ணு’ன்னு சொன்னார். அப்படி கமிட்டான படம்தான் ஃபைவ் ஸ்டார்.’’