Published:Updated:

சத்தியமா நம்புங்க, சீரியஸ் ரோல் பண்றேன்!

இயக்குநர் வெங்கட் பிரபு
பிரீமியம் ஸ்டோரி
News
இயக்குநர் வெங்கட் பிரபு

‘மாநாடு’ படத்தைப் பொறுத்தவரைக்கும் எல்லா ஃப்ரேம்லயும் சுத்தி கூட்டம் இருக்கும்.

‘`இந்த லாக்டெளனால நடந்த ஒரே நல்ல விஷயம் நான் வாக்கிங் போக ஆரம்பிச்சதுதான். தினமும் 10-12 கி.மீட்டர் நடக்குறேன். ‘லைஃப்’னு ஒரு வாட்ஸப் குரூப் எங்க பாய்ஸுக்காகவே ஆரம்பிச்சிருக்கோம். தினமும் நாங்க ஒவ்வொருத்தரும் பண்ணுற ஃபிட்னஸ் விஷயங்களை அதுல ஷேர் பண்ணுவோம். பிரேம்ஜியே இப்ப நடக்க ஆரம்பிச்சிட்டான்னா பார்த்துக்கோங்க!’’ - பார்ட்டி பாய்ஸின் தலைவரான இயக்குநர் வெங்கட் பிரபு இப்போது ஃபிட்னஸ் பாய்ஸின் தலைவராகியிருக்கிறார். ‘லாக்கப்’ ஓ.டி.டி ரிலீஸ், சிம்புவுடன் ‘மாநாடு’, வெப்சீரிஸ் முயற்சிகள் என வெங்கட் பிரபுவிடம் பல விஷயங்கள் பேசினேன்!

வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு

‘`மீண்டும் நடிகராக வெங்கட் பிரபு... ‘லாக்கப்’ கதையில் அப்படி என்ன ஸ்பெஷல்?’’

‘`அடுத்து என்ன நடக்கப்போகுதோன்ற பரபரப்புலயே பார்க்குறவங்களை வெச்சிருக்கிற க்ரைம் த்ரில்லர் படம்தான் ‘லாக்கப்.’ டைரக்டர் சார்லஸ் எங்க ஏரியா பையன். என்கிட்ட உதவி இயக்குநரா சேரணும்னு முயற்சி பண்ணினார். ஏற்கெனவே நிறைய பேர் இருந்ததனால என்கிட்ட அவரால அப்போ சேர முடியல. அதனால என்னைவிட நல்ல டைரக்டரான மோகன் ராஜா சார்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா வேலைக்குச் சேர்ந்துட்டார். ஒருநாள் சார்லஸ் ‘லாக்கப்’ கதையை என்கிட்ட சொன்னார். படத்தைத் தயாரிக்கிறதுக் காக என்கிட்ட கதை சொல்றார்னு நினைச்சிக் கிட்டே கேட்டேன். திரைக்கதையோட பேட்டர்ன் ரொம்ப நல்லாருந்தது. சொல்லி முடிச்சிட்டு ‘இதுல வர்ற எஸ்.ஐ. மூர்த்தி கேரக்டரை நீங்க பண்ணணும்னு’ சொன்னார். ‘என்னப்பா காமெடி பண்ணுற... ரொம்ப சீரியஸான ரோல். பயங்கர மூர்க்கமான கேரக்டரா இருக்கு. இந்தக் கேரக்டரை நான் பண்ணினா மக்கள் ஏத்துப் பாங்களா’ன்னு கேட்டேன். ‘அப்பாவியா இருந்துட்டு, இப்படி யொரு கேரக்டர் பண்ணுனா நல்லாருக்கும்’னு கன்வின்ஸ் பண்ணினார். படத்தோட தயாரிப்பாளரா நண்பன் நிதின் சத்யா. ஈஸ்வரிராவ், பூர்ணா, வாணிபோஜன் இருக்காங்க. ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆகுது.”

‘‘ ‘மாநாடு’ ஷூட்டிங் தள்ளிப்போயிட்டே இருக்கே?’’

‘`வருத்தமாத்தான் இருக்கு. கொரோனா இல்லைன்னா படத்தோட ஷூட்டிங் முடிச்சிட்டு இப்போ போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் இருந்திருப்போம். ‘மாநாடு’ படத்தைப் பொறுத்தவரைக்கும் எல்லா ஃப்ரேம்லயும் சுத்தி கூட்டம் இருக்கும். ஏன்னா, படம் ஒரு மாநாட்டைச் சுத்தி நடக்குற கதை. இப்போ இருக்குற சூழல்ல பெரிய கூட்டத்துல படத்தை எடுக்க முடியுமான்னு தெரியல.’’

‘` ‘மாநாடு’ படத்துல சிம்புவுடன் வேலை பார்க்குற அனுபவம் எப்படியிருக்கு?’’

‘`சின்ன வயசுல இருந்தே சிம்பு நல்ல பழக்கம். அப்போ என்கிட்ட எப்படிப் பழகுனாரோ அதே மாதிரிதான் இன்னும் பழகிட்டு இருக்கார். குழந்தைல இருந்தே நடிச்சிட்டு இருக்காருன்றதால பெரிய அனுபவம் இருக்கு. நான் எதிர்பார்த்ததை விடவும் 200 சதவிகிதம் உழைப்பைக் கொடுத்து நடிச்சார்.’’

‘`சிம்புவை வெச்சு ‘பில்லா 3’ நீங்க டைரக்‌ஷன் பண்ணப்போறதா ஒரு பேச்சிருந்ததே?’’

‘`ட்விட்டர்ல சிம்பு இருந்தப்போ ‘பில்லா 3 பண்ண எனக்கு விருப்பம்’னு சொன்னார். அப்போ, ‘எனக்கு டைரக்‌ஷன் பண்ண விருப்பம், நடிக்கிறீங்களா?’ன்னு கேட்டேன். ‘ஐ எம் ஆல்வேஸ் ரெடி சார்’னு ரிப்ளை பண்ணியிருந்தார். இதைப்பற்றிப் பேசுனப்போ கொஞ்சம் பரபரப்பாப் போச்சு, அவ்வளவுதான்.’’

சத்தியமா நம்புங்க, சீரியஸ் ரோல் பண்றேன்!

‘`நடிகர், இயக்குநர் ஓகே... திடீர்னு எப்படி தயாரிப்பாளரா மாறுனீங்க?’’

‘`புரொடக்‌ஷன் கம்பெனி நான் ஆரம்பிச்சதுக்கு முக்கிய காரணமே சுந்தர்.சி சார்தான். ஒரு முறை பேசிட்டிருக்கும்போது ‘உனக்குன்னு ஒரு பிராண்ட் க்ரியேட் பண்ணு வெங்கட்’னு அவர்தான் சொன்னார். அப்புறம்தான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சேன்.’’

‘`உங்களுடைய உதவி இயக்குநர் பா.இரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினியை வெச்சு இரண்டு படங்கள் இயக்கியிருக்கிறார். இதை நீங்க எப்படிப் பார்க்குறீங்க?’’

“பொறாமையா இருக்கு. ஆனா சந்தோஷமான பொறாமை. சிங்கப்பூர் ஷோக்காக ஸ்டோரி போர்டு ஆர்ட்டிஸ்ட் ஒருத்தர் தேவைப்பட்டார். அப்போ வந்தவர்தான் ரஞ்சித். ‘சென்னை 28’ படம் ஆரம்பிச்சப்போ நான்தான் அவர்கிட்ட ‘என்னோட அசிஸ்டென்ட் டைரக்டரா வரமுடியுமா’ன்னு கேட்டேன்.”

‘`கெளதம், ஏ.எல்.விஜய், ராஜேஷ், பா.இரஞ்சித்னு இவங்க இயக்கத்துல, நீங்க ஒரு வெப்சீரிஸ் தயாரிக்கப்போறதா பேச்சிருக்கே?’’

‘`ஒரு ஐடியாவா பேசிட்டிருந்தோம். இந்தச் சமயத்துல பெரிய படம் பண்ணுறது கஷ்டம். அதனால, கூட்டத்தைத் தவிர்த்து ஒரு இடத்துல இருந்தே எப்படி ஷூட்டிங் நடத்தலாம்னு யோசிக்குறோம். இந்த புராஜெக்ட் பற்றி இப்ப பேச இவ்ளோதான் விஷயங்கள் இருக்கு.’’