
நட்புக்கு எப்போவும் பெருசா மரியாதை கொடுப்பார் யுவன்.
தமிழ் சினிமாவின் ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’ என பல ட்ரெண்ட் செட்டர்களுக்கு சொந்தக்காரர், தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குநர்களில் ஒருவர் விஷ்ணுவர்தன். இப்போது விஷ்ணு பாலிவுட்டில் பிஸி. அவரிடம் பேசினேன்.
‘’இந்தியில சந்தோஷ் சிவன் சார் இயக்குன நிறையப் படங்கள்ல நான் உதவி இயக்குநர். அவர்தான் என்னோட குரு. அப்பவே மும்பை நம்ம ஏரியாதான். ’யட்சன்’ படத்துக்குப் பிறகு வித்தியாசமா ஏதாவது பண்ணனும்னு ஒரு வருஷத்துக்கு வேற எதுவும் பண்ணாம கதை எழுதிக்கிட்டே இருந்தேன். அப்போதான் இந்திப் படத்துக்கான வாய்ப்பு வந்தது. கார்கில் போர் வீரரான கேப்டன் விக்ரம் பத்ராவோட பயோபிக் எடுக்கணும்னு சொன்னாங்க. கரண்ஜோகர் மற்றும் ஷபீர் பாக்ஸ்வாலா ரெண்டு பேரும்தான் இந்தப் படத்தோட தயாரிப்பாளர்கள். விக்ரம் பத்ரா 24 வயசுலயே வீரமரணம் அடைஞ்சவர். இந்தியாவின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருதுபெற்றவர். அதனால கொஞ்சம் பொறுமையாவே திரைக்கதை எழுதி இப்ப படத்தோட ஷூட்டிங்கையும் முடிச்சிட்டேன். படத்தோட டைட்டில் ஷேர்ஷா. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடிச்சிருக்காங்க. ஜூலை 3 ரிலீஸ் பிளான் பண்ணியிருக்காங்க. பார்ப்போம்.’’
‘‘இந்திப்படம் எடுக்க ஏன் இவ்ளோ நாள் தாமதம்?’’
‘’மும்பைல இருந்தப்போவே எனக்கு டைரக்ஷன் வாய்ப்பு கிடைச்சது. ஆனா, என்னோட முதல் படம் தமிழ்ல இருக்கணும்னு சென்னைக்கு வந்துட்டேன். முதல் படமா ‘அறிந்தும் அறியாமலும்’ கதையைத்தான் எழுதி வெச்சிருந்தேன். ஆனா, அப்போ ஜெமினி கலர் லேப் கம்பெனியைச் சேர்ந்த ஶ்ரீராமுலு “ ‘அல்லரி’னு ஒரு தெலுங்குப் படத்தத் தமிழ்ல ரீமேக் பண்ண முடியுமானு சொல்லுங்க’னு கேட்டார். ரீமேக் பண்ணவே வேண்டாம்னு முடிவு பண்ணியிருந்தேன். ஆனா, ‘வாய்ப்பு தேடி வருது... ஏன் விடணும்’னு ஒரு மனசு சொல்லுச்சு. தவிர, ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தோட கதையை யார்கிட்ட சொல்லப் போனாலும், ‘இதுக்கு முன்னாடி ஏதாவது படம் பண்ணியிருக்கீங்களா..?’னுதான் கேட்டாங்க. அப்போலாம் குறும்படங்கள் கிடையாது. ஒரு படம் எடுத்துக்காட்டினாதான் இந்தக் கதையை படமா எடுக்க வாய்ப்பு கிடைக்கும்னு புரிஞ்சது.ரொம்ப குறுகிய காலத்துல சின்ன பட்ஜெட் படமா ‘குறும்பு’ படத்தை எடுத்துக் கொடுத்தேன். 35 நாள்தான் ஷூட்டிங். இந்தப் படத்தை இயக்கினப்போ என்னோட பலம், பலவீனம் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அடுத்துதான் ‘அறிந்தும் அறியாமலும்.’ இந்தப் படத்தோட கதை சொல்லப் போறப்பவும் நிறைய தடைகள் வந்தன. ‘லவ் ஸ்டோரி, ஆக்ஷன் ஃபைட் கொண்டு வாங்க. ஹீரோவுக்கான படமா இருக்கட்டும். இந்த கதை மூணு ஆம்பள பசங்க கதையா இருக்கு. அப்பா, பையன் பத்தின கதையையெல்லாம் யாரும் பார்க்க வரமாட்டாங்க’னு நிறைய கமென்ட்ஸ் வந்தது. இதெல்லாம் மீறித்தான் இந்தப் படத்தை எடுத்து முடிச்சேன். இந்தப் படம் பண்ணும்போது ஆர்யாவோட ‘உள்ளம் கேட்குமே’ ரிலீஸ் ஆகல. அதனால இந்தப் பட ஹிட்டுக்குப்பிறகுதான் ஆர்யாவுக்கும் நல்ல பேர் கிடைச்சது.

யுவனோட எப்படி உங்க கெமிஸ்ட்ரி?
“ஸ்கூல்ல என்னோட ஜூனியர் யுவன். சின்ன வயசுல இருந்தே நல்லாத் தெரியும். நான் உதவி இயக்குநரா இருந்தப்போ யுவன், பெரிய ஐகானா உருவாகிட்டு இருந்தார். ஸ்கூல டைம்ல ‘மச்சான் நான் பண்ற முதல் படத்துக்கு நீதான் மியூசிக் பண்ணிக் கொடுக்கணும்’னு ஜாலியா பேசிட்டு இருந்திருக்கோம். அதனால, முதல் படக்கதையை எடுத்துக்கிட்டு யுவன்கிட்ட போனேன். கதை, பட்ஜெட் பற்றியெல்லாம் ஒரு கேள்வி கேட்கல. உடனே, ‘ஓகே டா பண்ணிருவோம்’னு கமிட் ஆனார். நட்புக்கு எப்போவும் பெருசா மரியாதை கொடுப்பார் யுவன்.’’
‘’ரீ-மேக் கலாசாரத்தை உருவாக்கிய ட்ரெண்ட் செட்டர் படம் ‘பில்லா’. அந்தப் பட அனுபவம் சொல்லுங்க?’’
‘’சந்தோஷ் சிவன் சார் இந்தில ஷாருக்கான் வெச்சி எடுத்திருந்த ‘அசோகா’ படத்துல அஜித் சார், ஷாருக்கானோட தம்பியா நெகட்டிவ் ரோல் பண்ணியிருப்பார். இந்தப் படத்துல, இணை இயக்குநரா வேலை பார்த்தப்போதான் அஜித் சார் பழக்கம். அவருக்கு ஒரு தமிழ் பையனை இந்தி ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்தது ஆச்சரியம். ஷூட்டிங் நடக்கும்போது நல்ல நட்பு இருந்தது. ஆனா, படம் முடிஞ்சபிறகு எந்தத் தொடர்பும் இல்லை,
மும்பைல இருந்து நான் சென்னைக்கு வந்தது, டைரக்டர் ஆனதெல்லாம் தெரியாது. சில வருடங்களுக்கு பிறகு ஒரு விழாவில பார்த்தோம். அப்ப அவர் பெரிய ஸ்டார். ஆனா என்னை ஞாபகம் வெச்சு ‘எப்படியிருக்கீங்க?’ன்னு கேட்டார். எனக்கு செம சந்தோஷம். ‘we should do something’னு சொன்னார்.
அப்புறம் திடீர்னு ஒருநாள் போன் பண்ணி ‘என்னோட கால்ஷீட் இருக்கு. படம் பண்ணலாமா’னு கேட்டார். ‘சார், என்கிட்ட இப்போ எந்த கதையும் இல்லையே’னு சொன்னேன். ‘பில்லா பண்ணலாமா’னு கேட்டார். ‘என்னடா இது... அமிதாப்,ஷாருக், ரஜினி சார் எல்லாரும் பண்ணியிருக்குற படம். இப்போ, அஜித் சார் பண்ணலாமானு கேட்கறாரே’னு ஆச்சர்யப்பட்டேன். அஜித் சார் என் மேல வெச்சிருந்த நம்பிக்கை ரொம்பப் பெரிய விஷயம். அதனால அவரோட நம்பிக்கையைக் காப்பாத்தணும்னு எனக்கு எக்ஸ்ட்ரா ப்ரஷர். அவரும் ஷூட்டிங்ல ‘ இங்க என்ன நடக்குது... ஏன் இதெல்லாம்’னு ஒரு கேள்வியும் கேட்க மாட்டார். ஆனா, பலரும் ‘ஏன் இந்தப் படத்தை எடுக்குறீங்க? அமிதாப், ஷாரூக், ரஜினி எல்லாரும் பண்ணிட்டாங்க. நீ புதுசா என்ன பண்ணப் போற’னு நெகட்டிவா பேசுவாங்க. ரெண்டு மாசம் மலேசியாவுக்கு ஷூட்டிங் போயிட்டோம். அப்போதான் எந்தப் பேச்சும் காதுக்கு வராம முழு கவனமும் செலுத்தி படத்தை ஷூட் பண்ணி முடிச்சேன். படத்தோட முதல் ட்ரெய்லர் வந்ததும் நெகட்டிவ் பேச்செல்லாம் பாசிட்டிவா மாறிடுச்சு. படமும் நல்ல ஹிட்.

அதுக்கு அப்புறம் ‘ஆரம்பம்’ சார் கூட சேர்ந்து பண்ணேன். இப்போ நான் இந்தியில டைரக்ஷன் பண்ணிட்டு இருக்குற படம் பற்றி சார் கேள்விப்பட்டு போன் பண்ணிப் பேசினார். ‘ரொம்ப சந்தோஷம்.கொஞ்சம் லேட்டா இந்திக்குப் போயிருக்க. நல்லது நடக்கும்’னு சொன்னார். ரொம்ப ஆரோக்கியமான உறவு எங்களோடது. ரொம்ப மரியாதைக்குரியவர் அஜித் சார்’’.