
சினிமா
இயக்குநர் விசு. தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். `அரட்டை அரங்கம்’, `மக்கள் அரங்கம்’ ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் தமிழகம் முழுக்கப் பயணித்தவர். சமூக மாற்றங்களைத் துல்லியமாக அறிந்து, அதை வெளிப்படுத்தியவர். அவரிடம் பேசினோம்.
``கூட்டுக்குடும்பத்தைக் கட்டிக் காத்தவர்களில் நீங்கள் சிறந்த ரோல் மாடல். உங்களுக்கு எப்படி அது சாத்தியப்பட்டது?’’
``கூட்டுக்குடும்பத்தை ஒருத்தர் கட்டிக் காக்கிறார்னா, அவர் சுதந்திரமா முடிவெடுக்கிறவரா, தன் நலனைவிட அந்தக் குடும்பத்தோட நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவரா, பொருளீட்டுபவரா இருப்பார். நாங்க அண்ணன்தம்பிகள் நாலு பேர். நான் இரண்டாவது ஆள். தெய்வாதீனமா எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சுது. அதை என் சக்திக்கு முடிஞ்ச அளவு, மனசாட்சியோட செஞ்சேன். எங்க குடும்பத்துல 15 கல்யாணம் பண்ணியிருக்கேன். முடிஞ்ச அளவு உதவி பண்ணினேன். கூட்டுக் குடும்பம் ஒற்றுமையா இருக்கணும்னா நம்பிக்கை இருக்கணும். ‘அப்பா சொன்னா சரியா இருக்கும்’னு கீழ்ப்படியற குணம் இருக்கணும்.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். எங்க நாடக நிர்வாகம், என் சினிமா கால்ஷீட் விஷயம் எல்லாத்தையும் என் தம்பி கிஷ்முதான் கவனிச்சுக்குவான். அக்கவுன்ட்ஸ், கேஷ் ஹேண்டிலிங் எல்லாமே தங்கை வீட்டுக்காரர்தான் பார்த்துக்குவார்; நயா பைசா சுத்தமா கணக்குக் கொடுத்துடுவார். அதனாலதான் என்னால சிறப்பா வழிநடத்த முடிஞ்சது.
அவுட்டிங் போனா என் ஃபேமிலிக்கு ஒரு ரூம் போடுவேன். மத்தவங்களுக்கு ரெண்டு ரூம் போடுவேன். எல்லாரும் அவங்களோட சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி, லீவுல வந்து இருந்துட்டுப் போவாங்க. எல்லாரும் கிளம்பிப் போன பிறகு நானும் என் மனைவியும் ஒரு நாள் ரிலாக்ஸா பேசிட்டு, இருந்துட்டு வருவோம்.’’

``உங்க பசங்கல்லாம் எங்கே இருக்காங்க, என்ன பண்றாங்க?’’
``எனக்கு மூணு பொண்ணுங்க. மூணு பேரும் அமெரிக்காவுல செட்டிலாயிட்டாங்க. வருஷத்துக்கு ஒரு தடவை வந்துட்டுப்போவாங்க. `இங்கேயே வந்துடுங்க’ன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்க.’’
``மனித மதிப்பீடுகள் இப்போ எப்படி இருக்கு?’’
``என் பொண்ணைப் பார்க்க அமெரிக்கா போயிருந்தேன். அந்த நேரத்துல சிவாஜி இறந்து போயிட்டார். எனக்கு துக்கம் தாங்க முடியலை. வாய்விட்டு அழ ஆரம்பிச்சிட்டேன். குழந்தைங்க, `என்னப்பா இதையெல்லாம் நம்ப முடியலையே’ன்னு கேட்டாங்க. சிவாஜி நடிச்ச ஒரு படத்தைக் காட்டி `உங்க பெரியப்பா இப்படித்தான் இருப்பார்’னு குழந்தைங்ககிட்ட சொன்னேன். இன்னொரு படத்தைக் காட்டி. `உங்க மாமா இப்படித்தான் இருப்பார்’னு சொன்னேன். இப்போ பெரும்பாலும் ஒரு குழந்தையோடதான் இருக்காங்க. உறவுகளுக்குப் பெயர்போன நம்ம தமிழ்ச் சமூகத்துல சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை உறவுகளெல்லாம் இனி குறைஞ்சுபோயிடும். ஆனா இந்த நிலைமை நிச்சயம் மாறும்.’’
`` ‘சம்சாரம் அது மின்சாரம்’ இரண்டாம் பாகம் கதை ரெடி பண்ணிவெச்சிருக்கிறதா சொல்லியிருக்கீங்க. கதை என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?’’
``அந்தப் பட க்ளைமாக்ஸ் சீன்ல `மனமாச்சார்யங்களோட சேர்ந்திருக்கிறதைவிட ஒரே டிரெயின்ல தனித்தனி கம்பார்ட்மென்ட்ல பயணிப்போம், தனிக்குடித்தனம் போறது நல்லது’ன்னு சொன்னேன். ஆனா, இன்னிக்கு ஒரு வீட்டுக்குள்ளயே தனித்தனி ஆளாகிட்டோம். `இது நல்லதில்லை’ன்னு சொல்லியிருக்கேன். என்ன ஒண்ணு... என் குருநாதர் கே.பி சார் இப்போ இல்லை. கே.ஆர்.ஜியும் இல்லை. ஜோதிகா ஆபீஸ்ல கொடுத்திருக்கேன். நல்ல பதில் வரும்னு நினைக்கிறேன். இறைவனோட அருள் இருந்தா நிச்சயம் அந்த வாய்ப்பு விரைவில் கைகூடும்.