பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“எனக்கு அஞ்சு பரிமாணங்கள்!”

Manju Warrier
பிரீமியம் ஸ்டோரி
News
Manju Warrier

``ரசிகர்களின் கூச்சல், இருட்டு, கூட்டம்...

தெல்லாம் பார்த்தாலே பயம். அதனாலேயே சின்ன வயசுல தியேட்டருக்குப் போக வேண்டாம்னு அழுது அடம்பிடிப்பேன். ஃப்ளாஷ் வெளிச்சத்துக்கு பயந்து போட்டோ எடுத்துக்கவும் தயங்குவேன். ஆனால், வாரா வாரம் குடும்பத்துடன் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போகப்போக, பயமும் படிப்படியாய் விலகிப்போச்சு. பிறகு, சினிமாவே என் அடையாளமாகவும் வாழ்க்கையாகவும் ஆனதெல்லாம் எனக்கே ஆச்சர்யமான சந்தோஷம்தான்” - அழகுத் தமிழில் பேசும் மஞ்சு வாரியாரின் முகத்தில் இடைவிடாத புன்னகை, கூடுதல் சிறப்பு. மலையாள முன்னணி நடிகையான மஞ்சு வாரியர், `அசுரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

``நாகர்கோவிலில் வளர்ந்த உங்க இளமைக்காலம் பற்றி...”

``என் பூர்வீகம் கேரளா என்றாலும், நான் பிறந்து வளர்ந்தது நாகர்கோவிலில்தான். அந்தக் காலகட்டங்கள் பசுமையானது. தமிழில்தான் முதலில் எழுதப் படிக்கக் கத்துக்கிட்டேன். ஐந்தாம் வகுப்பு படிக்கிறப்போ, கேரளாவில் குடியேறிட்டோம். ஆனால், இப்போதுவரை வீட்டில் தமிழிலும் பேசுவோம். வருஷத்தில் குறைந்தபட்சம் ஓரிரு முறையாவது நாகர்கோவிலில் நாங்க வாழ்ந்த ஊருக்கும், வசிச்ச வாடகை வீட்டுக்கும் போவோம். தமிழ்ப் பெண் என்கிற பெருமை எனக்கு உண்டு!”

“எனக்கு அஞ்சு பரிமாணங்கள்!”

``மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான காலகட்டத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...”

``சின்ன வயசுல இருந்து என் வாழ்க்கையில எந்த இலக்கும் நான் வெச்சுக்கிட்டதில்லை. திட்டமிட்டு எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நடக்கிற விஷயங்கள் எனக்குப் பிடிச்சிருந்தா, அதை ஏத்துக்குவேன். அப்படித்தான் ப்ளஸ் ஒன் படிக்கும்போது ஹீரோயினா அறிமுகமானேன். எங்க குடும்பத்தில் திரைத்துறைக்கு வந்த முதல் ஆள் நான்தான். முன்னணி நடிகையாகணும்னு நான் நினைக்கவேயில்லை. ஆனா, நல்ல படங்கள்ல நடிச்சது என் அதிர்ஷ்டம். ஓய்வில்லாமல் நிறைய படங்கள்ல நடிச்சேன். அந்த மூன்றரை வருஷத்துல, வெற்றிகளும், ரசிகர்களின் அன்பும் அதிகம் கிடைச்சுது. பிறகு குடும்ப வாழ்க்கை காரணமா, நீண்ட காலமா நடிக்காம இருந்தேன்.”

``இத்தனை வருஷமா தமிழில் நடிக்காதது ஏன்... இப்போது `அசுரன்’ படத்துல நடிக்க ஒப்புக்கொள்ளக் காரணம் என்ன?”

``நான் நடிக்க ஆரம்பிச்ச காலத்திலிருந்து இப்போதுவரை எனக்கு நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்ததுண்டு. கதை கேட்பேன். ஆனா, கடைசி நேரத்துல ஏதாவதொரு காரணத்தால் என்னால் நடிக்க முடியாமல் போயிடும். ஆனாலும், தமிழ்ப் படங்களைப் பார்த்து ரசிப்பேன். தனுஷ் என் நீண்டகால நண்பர். அவருடனும் சில படங்களில் என்னால நடிக்க முடியாமப்போச்சு. `அசுரன்’ படத்தின் கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. இம்முறை எல்லா அம்சங்களும் கூடிவந்ததால், இந்தப் படத்துல நடிக்க ஒப்புக்கிட்டேன். இத்தனை வருஷமா தமிழில் நடிக்காமப் போனதுக்கு நியாயம் சேர்க்கிற மாதிரி, `அசுரன்’ படத்தில் பவர்ஃபுல்லான ரோலில் நடிச்சிருக்கேன்.”

``உங்க கேரக்டரில் என்ன ஸ்பெஷல்?”

``இளமைக் காலத்துல இருந்து நடுத்தர வயது வரை அஞ்சு விதமான பரிமாணங்கள்ல தனுஷும் நானும் நடிச்சிருக்கோம். அவருடைய மனைவி பச்சையம்மா ரோல்ல நடிச்சிருக்கேன். குடும்ப உறவுகளுக்குள் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையப்படுத்தித்தான் படத்தின் கதை நகரும். அதில், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பக்கபலமா இருக்கிற காட்சிகள் நிச்சயம் மக்களைக் கவரும்.

“எனக்கு அஞ்சு பரிமாணங்கள்!”

குறிப்பா, வெற்றி மாறன், தனுஷ் இருவரின் திறமையை நேரில் பார்த்து வியந்தேன். அவங்ககிட்ட நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். தனுஷுடனான நட்பு இப்போ இன்னும் பலமாகியிருக்கு. படத்தில் நடிக்க ஆரம்பிச்ச முதல் ஒருவாரம் சின்ன தடுமாற்றம் இருந்துச்சு. பிறகு, வேற்றுமொழிப் படத்துல நடிக்கிற உணர்வே எனக்கு ஏற்படலை. மலையாள சினிமாவில் குடும்பக் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதேபோல குடும்ப உறுப்பினர்கள்போல நிறைய கலைஞர்கள் ஒண்ணா இணைஞ்சு நடிச்சது மறக்க முடியாத அனுபவம். ஷூட்டிங் முடியிற தருணம், பிரியப்போற உணர்வில் எல்லோருக்கும் வருத்தம் இருந்துச்சு. எந்தச் சிரமமும் இல்லாம, என்னை அன்போடு கவனிச்சுக்கிட்ட மொத்தப் படக்குழுவுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் ஆர்வம் இருக்கு.”

``தயாரிப்பாளர் தாணு, உங்களுக்கான மீதமுள்ள சம்பளப் பணத்தைக் கொடுக்க முன்வந்தும் நீங்க வாங்க மறுத்தது ஏன்?”

(சிரிக்கிறார்) ``நம்பிக்கையான தயாரிப்பு நிறுவனம் என்பதால், நிச்சயம் சம்பளம் கிடைச்சுடும்னு நம்பினேன். இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அதனால, என் சம்பளப்பணத்தைப் பத்திப் பெருசா கவலைப்படலை. பொறுமையா வாங்கிக்கலாம்னு தள்ளிப்போட்டுக்கிட்டே இருந்தேன். செக் கொடுத்தாலும் அது வங்கியில போடாமல் போக வாய்ப்பிருக்கலாம்னு நினைச்ச தாணு சார், டி.டி-ஆக எனக்கான மீதச் சம்பளப் பணத்தை `அசுரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கையால் கொடுக்கச் செய்தார். சினிமாத் துறை ஆரோக்கியமா போறதுக்கு, இந்த மாதிரியான தயாரிப்பாளர்கள் இருக்கிறதும் முக்கிய காரணம்.”

``15 வருட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்தப்போ உங்க மனநிலை எப்படி இருந்துச்சு? `ஹவ் ஓல்ட் ஆர் யூ’ முதல் `அசுரன்’ வரை இரண்டாவது இன்னிங்ஸில் கதை நாயகிக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்களில்தான் அதிகம் நடிக்கிறீங்க. இந்த நேர்த்தியான கதைத் தேர்வு திட்டமிட்டு நடப்பதா அல்லது இயல்பாக அமைவதா?”

``என் முடிவுப்படிதான் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தேன்; மீண்டும் நடிக்க வந்தேன். இடைவெளிவிட்டு நடிக்க வந்தப்போ, எனக்கு எந்த வித்தியாச உணர்வும் ஏற்படலை. சொல்லப்போனா, சினிமாதான் எனக்கு நம்பிக்கையுடன் கைகொடுத்துச்சு. இப்போதும் என்னை நம்பி இயக்குநர்கள் பலரும் நல்ல படைப்புகளை உருவாக்குறாங்க. அவங்க எதிர்பார்ப்புப்படி நடிக்கிறேன். முதல் இன்னிங்ஸைவிட, இப்போதான் கதைத்தேர்வு மற்றும் நடிப்பில் அதிக கவனம் செலுத்தறேன். இதுக்கு, அனுபவம் கூடியிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.”