
சினிமா
டி20, ஒருநாள் போட்டி... எதுவாகவுமிருக்கட்டும்... `க்ரூஷியல் டைம்ல கில்லி மாதிரி ஆடுவேன்’ என்று தனியாக நின்று கலக்குபவர் எம்.எஸ்.தோனி. இனிஷியலின் ஒற்றுமையோ என்னவோ, சினிமாவின் எம்.எஸ்.தோனியென்றால், அது எம்.எஸ்.பாஸ்கர்தான். படத்தின் ஏதோவொரு காட்சியில் கொஞ்ச நேரமே வந்தாலும் தனித்துத் தெரியக்கூடியவர். அவர் மகன் ஆதித்யா பாஸ்கர் `96’ பட வெற்றியால் நம்பிக்கை நாயகனாகிவிட்டார். மகள் ஐஷ்வர்யாவோ டப்பிங்கில் கில்லி. மனைவி ஷீலாவோ எந்தவிதப் பரபரப்புமின்றி அனைவருக்கும் முன் தயாராகி உட்கார்ந்திருக்கிறார். கலகலப்போடு வரவேற்றது எம்.எஸ்.பாஸ்கர் குடும்பம்!
``முதலில் எங்கள் குடும்பத்தின் சார்பாக அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். ஆண்டவன் அருளாலும், ஆனந்த விகடன் ஆதரவாலும் இந்த வருடம் ரொம்பவே இனிமையா போயிட்டிருக்கு. ஆனந்த விகடன் பேட்டியில வந்த குடும்பப் போட்டோவைப் பார்த்துதான் தம்பிக்கு இந்தப் பட வாய்ப்பு வந்தது. அதுக்காக ஆனந்த விகடன் குழுமத்துக்கும், ‘96’ படக்குழுவினருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இப்போ இன்னொரு நல்ல விஷயம், பொண்ணுக்குத் திருமணம் நிச்சயம் ஆகியிருக்கு. என்னைத்தான் எப்போதுமே கேள்வி கேட்குறீங்க. இந்த முறை ஷீலா, தம்பி, பாப்பாகிட்ட கேள்விகள் கேளுங்க’’ எனச் சிரித்தபடி பேட்டிக்குப் பிள்ளையார் சுழி போட்டுவைத்தார் எம்.எஸ்.பாஸ்கர்.
``முதல் படத்துக்கே இவ்வளவு பெரிய ஆதரவு கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒருவேளை அந்த முதல் வாய்ப்பு வேற மாதிரி போயிருந்தா கதை கேட்ட எல்லாப் படங்களிலும் நடிச்சிட்டிருந்திருப்பேன். அதுல நடிச்சதுக்கப்புறம், இன்னைக்கு வரைக்கும் 40 கதைகள் கேட்டிருப்பேன். ஆனா, ஒரு படத்துலகூட `நடிக்கிறேன்’னு கையெழுத்து போடலை. ஆத்மார்த்தமான ஒரு கதைக்காக வெயிட் பண்றேன். ரொம்ப கவனமாத்தான் தேர்ந்தெடுத்து நடிப்பேன்’’ என்கிறார் ஆதித்யா பாஸ்கர்.
``செல்வா சார்னு சொன்னதும், முதல்ல ஸ்ட்ரிக்ட்டா இருப்பார்னு பயந்தேன். ஆனா, சந்திச்சதுக்கு அப்புறம்தான் அவர் ரொம்பவே ஸ்வீட்னு தெரிஞ்சுகிட்டேன். திருப்தியா இல்லைன்னு ரீ-டேக் கேட்டா, `எனக்கு இந்த டேக் ஓகேதான். உங்களுக்கு ஓகே இல்லைன்னா ஒன்ஸ்மோர் போகலாம்’னு சொல்வார். எதையும் ரொம்ப அழகா சொல்லிக் கொடுப்பார். `என்.ஜி.கே’ படத்துல ரகுல் ப்ரீத்சிங்குக்கு டப்பிங் பேசினது ரொம்பவே மறக்க முடியாத அனுபவம்” என்கிறார் ஐஷ்வர்யா.
‘`நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சாமே... காதல் கல்யாணமா?’’ எனக் கேட்டேன். ``அவரை எனக்கு எட்டு வருஷமா தெரியும். ரொம்பப் பழக்கமான ஒருத்தரைக் கல்யாணம் பண்ணப்போறோம்னு நினைக்கிறப்போ சந்தோஷமாத்தான் இருக்கு’’ என ஐஷ்வர்யா சொல்லிக்கொண்டிருக்கும்போதே எம்.எஸ்.பாஸ்கர், ``முக்கியமா நான் ஒரு விஷயம் சொல்லணும். சிவாஜி சாரை, நான் `அப்பா’ன்னுதான் கூப்பிடுவேன். பிரபுவை `அண்ணா’ன்னு கூப்பிடுவேன். இதுக்காகவே முதல் வாழ்த்து அப்பா வீட்டிலிருந்து பிரபு அண்ணாதான் சொன்னார். அதுக்காக ஒரு அன்பளிப்பும் வந்தது’’ என்று நெகிழ்ந்தார்.

அமைதியாகவே இருந்த ஷீலாவிடம் அவர் காலத்து தீபாவளி பற்றிக் கேட்டோம். ``பட்டாசு வெடிச்சு, வீட்டிலேயேதான் ஸ்வீட் செஞ்சு சாப்பிடுவோம். காலம் மாறி இப்போ எல்லாமே வெளியில வாங்கிச் சாப்பிட்டு தீபாவளி கொண்டாட ஆரம்பிச்சிட்டோம்’’ என ஷீலா சொல்ல, ‘`நீங்க என்ன ஸ்வீட் சூப்பரா பண்ணுவீங்க?’’ எனக் கேட்டோம். பதிலை எம்.எஸ்.பாஸ்கர் சொன்னார். ``நான்தான் இந்த வீட்டுல சாப்பாட்டுப் பிரியன். என் மனைவி கேசரி ரொம்ப அருமையாப் பண்ணுவாங்க. அப்புறம் தேங்கா திருகி, வெல்லமெல்லாம் போட்டு கொழுக்கட்டை ரொம்ப ஸ்பெஷலா பண்ணுவாங்க. விசேஷத்துக்கு முதல் நாளே செஞ்சுவெச்சதை நைசா நடு ராத்திரியில போய்ச் சாப்பிடுவேன்னா பார்த்துக்கங்க’’ என்று தன் மனைவிக்கு `சிறந்த செஃப் விருது’ கொடுத்தார்.
அக்காவின் சமையல் பற்றிப் பேச ஆரம்பித்தார் ஆதித்யா. ``ஒருநாள் கொழுக்கட்டை பண்றேன்னு ஏதோ ஒண்ணை சட்டியில போட்டு எடுத்து, `இதுக்குப் பேருதான் கொழுக்கட்டை’ன்னு சொன்னாங்க. அதுல எது கொழுக்கட்டைன்னு கண்டே பிடிக்க முடியலைன்னா பார்த்துக்கங்க. `சூப்பரா என்ன சமைப்பாங்க?’ன்னு கேட்டீங்கன்னா டூ மினிட்ஸ் நூடுல்ஸ் பண்ணுவாங்க. அதையும் `பிரியாணி மாதிரி பண்ணுவேன்’னு சொல்லச் சொல்லி கொஞ்ச நேரம் முன்னாடிதான் மிரட்டி என்னைக் கூட்டிட்டு வந்தாங்க. சரி, ஜோக்ஸ் அப்பார்ட். இதையெல்லாம் தவிர்த்து சுடு தண்ணி ரொம்பப் பிரமாதமா வைப்பாங்க’’ என அக்காவைக் கலாய்த்தார் ஆதி.
``ஒரு நிமிஷம் இருங்க. என்னை நீங்க சமைப்பீங்களான்னு கேட்கவே இல்லையே’’ என எம்.எஸ்.பாஸ்கர் சொல்ல, ``ஆமாம்ல...’’ என்றார் ஷீலா. ``அவரை கிச்சன்ல விட்டாப்போதும், மொத்தமா சமைச்சு முடிச்சிடுவார். க்ளீன் பண்றது மட்டும்தான் நம்ம வேலையா இருக்கும். உருளைக்கிழங்கு ஃப்ரை, பொங்கல், வத்தக்குழம்பு, புளிக்குழம்புன்னு நிறைய டிஷ் சூப்பரா பண்ணுவார்’’ என லிஸ்ட் போட்டார்.

அடுத்ததாக 90ஸ் கிட்ஸின் தீபாவளி பற்றிப் பேச ஆரம்பித்தோம். முதலில் பேசிய ஐஷ்வர்யா, ``சின்ன வயசுல அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்து பத்தாயிரம் வாலா வெடி வெச்சதுக்கப்புறம்தான் தீபாவளி ஆரம்பிக்கும். அப்புறம் தம்பி, சொந்தக் காரங்கன்னு சேர்ந்து குட்டிக்குட்டி வெடியெல்லாம் வெடிப்போம். முக்கியமா பாம்பு மாத்திரையைத்தான் மறக்கவே முடியாது. என்ன, விடியற்காலை நாலு மணிக்கு எழுப்பி தலையில எண்ணெய் தடவி, உட்கார விட்ருவாங்க. அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அப்புறம் ஒரு தீபாவளியப்போ அப்பா விட்ட ராக்கெட் பக்கத்து வீட்டுக் கொட்டகையில விழுந்து லைட்டா தீப் பிடிச்சிடுச்சு’’ எனச் சொல்ல, ``பக்கத்துல வாட்டர் டேங்க் இருந்தது. அப்போவே தண்ணி ஊத்தி அணைச்சிட்டோம்ல...’’ என மகளிடம் சிரித்தபடி சமாளித்தார் பாஸ்கர்.
‘`அப்போல்லாம் யார் வீட்டுல முதல்ல வெடிச் சத்தம் வருதோ, அவன்தான் மாஸ். இப்போ வர்ற தீபாவளியெல்லாம் அப்படியே தலைகீழா மாறிடுச்சு. போன தீபாவளிக்கு காலையில 10 மணிக்குத்தான் எழுந்தேன். இன்னும் நிறைய பேர் பழைய மாதிரி தீபாவளி கொண்டாடிட்டு இருந்தாலும், எனக்கு ரொம்ப சாதாரண நாளா தீபாவளி மாறிடுச்சு.
``சினிமாவைத் தவிர உங்களுடைய உலகம் வேறென்ன?’’ என்று ஆதித்யாவிடம் கேட்க, ``சினிமாதான் எங்களுக்குச் சோறு போடுது. அது வேலை. இதைத் தவிர, அப்பா கவிதை ரொம்ப நல்லா எழுதுவார். சும்மா இருக்கும்போது அவர்கிட்ட கவிதைகள் எழுதிக் காட்டுவேன். இதைத் தவிர எனக்கு கார் ரேஸிங் ரொம்பப் பிடிக்கும். இதை வீட்லயும் ஒரு நாள் சொன்னேன். பக்கத்துல இருக்கிற தொடப்பக்கட்டையைப் பார்த்தாங்க. `ஓகே... டாடா’ன்னு சொல்லி வேற வேலையைப் பார்க்கக் கிளம்பிட்டேன். சும்மா இருக்கும்போது பாட்டுப் பாடுவேன். கிடாரை வாசிக்கிறேன்ங்கிற பேர்ல என்னமோ பண்ணுவேன், அவ்வளவுதான்’’’ என்றவரை லாக் செய்து குட்டியாக ஒரு கவிதை சொல்லச் சொன்னோம். ``நீங்க அக்காகிட்ட இருந்து ஆரம்பிங்களேன்’’ எனச் சொல்லி அக்காவைக் கோத்துவிட்டார். அவரும் இதுதான் சாக்கு எனத் தன் வருங்காலக் கணவருக்கு எழுதிய கவிதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ``அவருக்குக் கண்ணுக்குள்ள ஒரு மச்சம் இருக்கும். அதை வெச்சு எழுதினதுதான் இந்தக் கவிதை. `கடவுளுக்கும் அவன் கண்கள்மீது காதல்; திருஷ்டிப் பொட்டாக மச்சம்... ஆச்சர்யக்குறி’’ என்ற ஐஷ்வர்யாவை `அடடே...’ என்றபடி மொத்தப் பேரும் பார்த்ததில் வெட்கப்பட்டார்.
``அக்காகிட்டயும், அப்பாகிட்டயும் நீங்க கத்துக்கிட்ட விஷயம்...’’ என்று ஆதியிடம் கேட்டோம். ``திறமைங்கிறது அப்படியே வர்றது இல்லை. வெளியிலிருந்து பார்க்கும்போது, `எம்.எஸ்.பாஸ்கரோட பொண்ணு, அதனால டப்பிங் சூப்பரா பேசுறாங்க’ன்னு சொல்வாங்க. ஆனா, அவங்களுக்குத்தான் அவங்களோட உழைப்பு தெரியும். அதே மாதிரி, `இவன் எம்.எஸ்.பாஸ்கர் பையன், அதனால நல்லா பண்றான்’னு என்னைப் பார்த்துச் சொன்னா, `96’ படத்துல நான் பண்ணுனது கம்மிதான். `வேலையில ஒழுக்கமா இருந்தா, நீ பட்ட கஷ்டத்துக்கு அது பலன் தரும்’ங்கிறதுதான் நான் அப்பாகிட்ட இருந்து கத்துக்கிட்டது’’ என்றார் ஆதி.
கடைசியாக, ``புகுந்த வீட்டுக்குப் போகப்போற அக்கா ஐஷ்வர்யாவுக்கு என்னென்ன அறிவுரைகள் சொல்வீங்க?’’ என ஆதித்யாவிடம் கேட்க, ``எண்ணிக்கோங்க’’ என்றபடி விரல்விட்டுக் கணக்கெடுக்கச் சொன்னார் ஆதி. ``ஒண்ணு, அட்லீஸ்ட் சமையல் புத்தகமாவது வாங்கி சமைக்கக் கத்துக்கணும். ரெண்டு, அவரைக் கட்டிக்கப்போறவர், அதாவது என்னோட மாமா, பூமி மாதிரி. எதுக்கும் கோபப்பட மாட்டார். இவங்க கண்ணு செவக்கக் கோபமாப் பேசினாலும், ரெண்டு பேருக்கும் சண்டையே வராது. அப்போ மாமா எவ்வளவு பொறுமைசாலின்னு பார்த்துக்கோங்க. ஸோ, கோபப்படாம இருக்கணும். அவ்வளவுதான்” என சென்டிமென்டாகப் பேசி முடித்திருந்தாலும் அந்தக் கவிதை மேட்டரை ஞாபகத்தில்வைத்து ஆதியைக் கவிதை சொல்லச் சொன்னோம். வலது பக்கம் உட்கார்ந்திருந்த அம்மாவைப் பார்த்த ஆதி, ``பின்னணியில் வி.ஐ.பி சாங் போட்டுக்கங்க’’ என்றார். ``அன்பெனும் அரிசியைப் பாசத்தால் உணவாக்கி ஊட்டிவிடும் அன்னையே... உன்னுடன் ஈரென்பதாண்டு வாழ ஆசை!’’ எனச் சொல்லி அம்மாவிடம் முத்தத்தைப் பரிசாகப் பெற்றார்.
இந்த மொத்தக் குடும்பத்திலும் அதிகமாக ஈர்த்தவர் குடும்பத் தலைவி, ஷீலாம்மா. கேமரா இருந்ததாலோ என்னவோ அதற்குப் பழகியதுபோல் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தாலும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி, பெருமிதத்தோடும், வெள்ளந்தித் தனத்தோடும் தன் குடும்பத்தைப் பார்த்து மனம்விட்டுச் சிரித்த சிரிப்பொலி மட்டுமே இறுதிவரை கேட்டது. மொத்தக் குடும்பமும் சேர்ந்து சொன்னது... ``ஹேப்பி தீபாவளி!’’