
சினிமா
அமலா பால்தான் `ஆடை’ படத்தின் கதாநாயகி என்றாலும், படம் பார்த்தவர்களின் மனதில் `நங்கேலி’யாக நங்கூரமிட்டவர் அனன்யா. தியேட்டர் ஆர்டிஸ்ட்டான இவர், `ஆடை’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
“நல்ல கதைக்காக வெயிட் பண்றேன்!” - அனன்யா
``என்னோட தியேட்டர் ப்ளேயைப் பார்த்த ‘ஆடை’ படத்தின் உதவி இயக்குநர்கள், என்னை ஆடிஷனுக்கு வரச் சொன்னாங்க. முதலில் என்னை வி.ஜே.ரம்யா நடித்த ரோலுக்காகத்தான் ஆடிஷன் பண்ணினாங்க. பிறகு ஒருநாள் திரும்ப வரச்சொல்லி, `வேற ஒரு முக்கியமான கேரக்டர் படத்துல இருக்கு; அந்தக் கேரக்டருக்காக ஆடிஷன் கொடுக்குறீங்களா?’ன்னு கேட்டாங்க. நானும் ஓகே சொல்லி, நடிச்சிட்டு வந்தேன். மறுபடியும் போன் பண்ணி, ‘அடுத்த லெவல் ஆடிஷன் இருக்கு’ன்னு கூப்பிட்டாங்க. இப்படி மூன்றுகட்ட ஆடிஷனுக்குப் பிறகுதான் `ஆடை’ படத்தின் நங்கேலி கேரக்டருக்கு கமிட்டானேன்.

நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்ததனால, மக்கள் முன்னாடி எப்படி நடிப்பேனோ அதே மாதிரிதான் கேமரா முன்னாடியும் நடிச்சேன். மேடையில் நடிக்கும்போது, அந்த மேடை முழுக்க நமக்கானதா இருக்கும்; அதைக் கவர் பண்ணி நடிக்கணும். ஆனா, சினிமாவில் சின்ன ஃப்ரேமுக்குள்ள மட்டும்தான் இருக்கணும்கிறதனால, சில ரீ-டேக்ஸ் போச்சு. இருந்தாலும் இயக்குநர் ரத்னகுமார் என்னை நல்லா வேலை வாங்கி நடிக்கவெச்சார்.
`ஆடை’ படத்தில் கிராமத்திலிருந்து சிட்டிக்கு வர்ற கேரக்டர்ல நடிச்சிருந்தேன். அதனால, கிராமத்து ஸ்லாங் வரணும்னு பக்காவா பயிற்சி கொடுத்தாங்க. என்னோட போர்ஷனுக்கான ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே மொத்த டயலாக் பேப்பரையும் கொடுத்துட்டாங்க. அதுமட்டுமில்லாம, படத்துக்கு டப்பிங் பண்ணாம லைவ் ரெக்கார்டிங்லதான் ஷூட் பண்ணினாங்க. அதனால, டயலாக் மனப்பாடமா இருந்தால்தான் ஷூட்டுக்கே போக முடியும். `எதுவா இருந்தாலும் டப்பிங்ல பார்த்துக்கலாம்’னு சொல்ல முடியாது. இது எல்லாமே நான் அதுவரைக்கும் தியேட்டர் ப்ளேல பண்ணினதுதான். அதுனால, ரொம்ப ஈஸியா இருந்துச்சு. முக்கியமா, தியேட்டர் ப்ளேல ஒரு முறை சொதப்பிட்டா, அவ்வளவுதான். ஆனால், இங்க ரீடேக் போகலாம். இது ரொம்ப வசதியா இருந்துச்சு. படத்தோட ரிலீஸுக்கு அப்புறம் ஒரு நல்ல கதைக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அது கிடைக்கிறவரைக்கும் தியேட்டர் ப்ளே பண்ணிட்டிருக்கேன்’’ என்றவரிடம், ``தீபாவளி என்றதும் ஞாபகத்துக்கு வருவது என்ன?’’ எனக் கேட்டேன்.

‘`ஒவ்வொரு தீபாவளிக்கும் நான் பல்ப் வாங்கிடுவேன். ரோட்டுல போகும்போது, ஏரியா பசங்க வெடிவெச்சுட்டு வீட்டுக்குள்ள போயிடுவாங்க. அது தெரியாம நடந்துபோய் பயப்படுறது என் வாழ்க்கையில வழக்கமா நடக்குற ஒண்ணு. நாலு, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும், நானும் பட்டாசு வெடிச்சிட்டிருந்தேன். அதுக்கப்புறம் ஒரு நாய் வளர்க்க ஆரம்பிச்சேன். அது பட்டாசு வெடிச்சா ரொம்ப பயப்படுது. அதைப் பார்த்ததுல இருந்து நான் பட்டாசு வெடிக்கிறதை நிறுத்திட்டேன். மத்தவங்க பட்டாசு வெடிக்கும்போதும், ரூமுக்குள்ள போய் கதவை லாக் பண்ணிப்பேன். பட்டாசுக்கு மட்டும்தான் இப்படி; பலகாரத்தில் குறையே வைக்கிறதில்லை’’ என க்யூட்டாகச் சிரிக்கிறார் அனன்யா.

`டிக்டாக்’குக்கு முன்னோடியான `டப்ஸ்மாஷி’ல் கொடிகட்டிப் பறந்தவர், மிருணாளினி. இவருடைய டப்ஸ்மாஷ் பயங்கர ஃபேமஸாக, பல பட வாய்ப்புகள் இவரின் ஸ்மார்ட்போனைத் தேடி வந்தன. ஆனால், இவர் தேர்ந்தெடுத்ததோ ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை. ``ஏன் சூப்பர் டீலக்ஸ்?’’ என்ற கேள்விக்கான பதிலோடு பேச ஆரம்பித்தார் மிருணாளினி.
“எனக்கு பெரிய டாஸ்க் காத்துகிட்டு இருந்தது!” - மிருணாளினி
``எனக்கு முதல் பட வாய்ப்பு வந்தப்போ அப்பா, அம்மாகிட்ட பர்மிஷன் கேட்டேன். ‘ஏதோ டப்ஸ்மாஷ் பண்ணிட்டு இருக்கேன்னு பார்த்தா, இப்போ `படத்தில் நடிக்கவா?’ன்னு கேட்குற’ன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் நிறைய படங்களுக்கு ஹீரோயினா நடிக்கவும் வாய்ப்பு வந்தது. வீட்டுல திட்டுவாங்கன்னு விட்டுட்டேன். ஒருநாள் `சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கான வாய்ப்பு வந்தது. `அந்தப் படத்தோட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, தேசிய விருது பெற்றவர், இந்தப் படத்துல பெரிய நடிகர்கள் நடிக்கிறாங்க’ன்னு சில தகவல்கள் எனக்கு முன்னாடியே தெரியும். `அதுல நடிச்சா நல்லா இருக்கும்’னு தோணிச்சு. அப்பா, அம்மாகிட்ட, ‘சின்ன ரோல்தான். கொஞ்ச நாள்தான் ஷூட் இருக்கும். பெரிய நடிகர்கள் நடிக்கிறாங்க’ன்னு பேசி ஓகே சொல்லவெச்சேன். அந்த டாஸ்க்கைவிட, ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்குப் பெரிய டாஸ்க் காத்துக்கிட்டு இருந்தது.

அதுவரை என் ரூம்ல, என் மொபைல் முன்னாடி மட்டுமே நடிச்சிட்டிருந்தேன். தனியா இருக்கும்போதுதான் டப்ஸ்மாஷே பண்ணுவேன். ஆனா, ஷூட்டிங்கில் பல பேர் முன்னாடி நடிக்கணும்; பெரிய பெரிய கேமரான்னு கொஞ்சம் பயந்துட்டேன். ஒவ்வொரு டேக் நடிச்சு முடிச்சதும், டைரக்டர் மானிட்டர் பார்க்கவெச்சு, கரெக்ஷன் சொல்லுவார். அவர் ஒவ்வொரு சீனையும் விவரிச்சுச் சொல்றதே அவ்வளவு அழகா இருக்கும். நல்லபடியா அந்தப் படத்தை முடிச்சுட்டேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுக்கப்புறம் `நல்ல கதையா பார்த்து நடி’ன்னு அட்வைஸ் பண்ணினாங்க. `சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பார்த்துட்டுத்தான், சுசீந்திரன் சார் `சாம்பியன்’ படத்துல நடிக்கக் கூப்பிட்டார். ரொம்ப நல்லா வந்திருக்கு. ‘ஜிகர்தண்டா’ படத்தோட தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால உடனே ஓகே சொல்லிட்டேன். லட்சுமி மேனன் நடிச்ச ரோலில்தான் நான் நடிச்சேன். தெலுங்கில், அதர்வாவுக்கு ஜோடியா நடிச்சிருந்தேன். `அப்பாடா, நமக்கு சப்போர்ட்டா ஒரு தமிழ் ஆளு இங்கே இருக்கார்’னு அவர்கூடப் பேசிக்கிட்டே இருப்பேன். அவரும் என்னை மோட்டிவேட் பண்ணுவார். ஒரு ஷாட் பல டேக் போனா, ‘நம்ம தமிழ்நாட்டுப் பெருமையை நாமதான் நிரூபிக்கணும். விட்றாதீங்க... அடுத்த டேக்ல ஓகே பண்ணிடணும்’னு செமையா என்கரேஜ் பண்ணுவார். தெலுங்கில் என் முதல் படமே சூப்பர் ஹிட் படத்தோட ரீமேக்; அதர்வாவுக்கு ஜோடி; வருண் தேஜ் படம்னு பெருசா அமைஞ்சது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு’’ என்றவர், தீபாவளி பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
‘`தீபாவளி எங்க ஃபேமிலி மெம்பர்ஸ் ஒண்ணுகூடுற நாள். வருஷம் முழுக்க அப்பா, அம்மா, நான், தம்பின்னு நாலு பேரு மட்டும் பெங்களூருல இருப்போம். தீபாவளிக்குத்தான் பாண்டிச்சேரியில இருக்கும் பாட்டி வீட்டுக்குப் போவோம். எங்க சொந்தக்காரங்களும் அன்னிக்கு பாட்டி வீட்டுக்கு வருவாங்க. பாட்டி செஞ்சுவெச்சிருக்கும் ஸ்வீட்ஸை சாப்பிடுறது; புது ரிலீஸ் படத்துக்குப் போறதுன்னு எங்க தீபாவளி சூப்பராப் போகும்’’ எனச் சிரிக்கிறார் மிருணாளினி.

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்குப் பல நடிகைகள் நடிக்க வந்திருந்தாலும், சிலர் மட்டுமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அப்படி அண்மையில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் லிஜோமோள்.
“என் முதல் தமிழ்ப் படம் மறக்க முடியாதது!” - லிஜோமோள்
``நடிகையாகணும்னு நான் நினைச்சதே இல்லை. பாண்டிச்சேரியில போஸ்ட் கிராஜுவேஷன் படிக்கும்போது, ஃபஹத் ஃபாசிலோட `மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தில் நடிக்க ஒரு பொண்ணு வேணும்னு கேட்டிருந்தாங்க. நானும் விளையாட்டா என் போட்டோஸை அனுப்பிவெச்சேன். ஒரு மாசம் கழிச்சு எனக்கு போன் வந்துச்சு. ‘ஆடிஷன் வாங்க’ன்னு சொன்னாங்க. ஆடிஷனுக்கு முன்னாடியே, ‘எனக்கு நடிப்பு வராது; நீங்க பண்ணச் சொல்றதைச் செய்றேன்’னு சொன்னேன். அவங்களும் அந்தப் படத்தோட ஒரு சீனைக் கொடுத்து நடிக்கச் சொன்னாங்க. நானும் பண்ணினேன்; ஓகே சொல்லிட்டாங்க. அந்தப் படத்துல எனக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர்லாம் கிடையாது. ஆனால், முதல் படமே ஃபஹத் ஃபாசில் படமா அமைஞ்சது என்னால மறக்க முடியாதது.

இந்தப் படத்தில் எனக்கான முதல் சீனே, ஒரு துக்க வீட்டில் நடக்கும் சீன்தான். அதில் என் அப்பா கேரக்டரில் நடிக்கிறவரைப் பார்த்துச் சிரிக்கணும். அவ்வளவுதான். ஷூட்டிங்னா எப்படி இருக்கும்னே எனக்கு அன்னைக்குத்தான் தெரிஞ்சது. கேமரா எங்கே வச்சிருக்காங்க; கேமராவில் நான் எப்படித் தெரியுறேன்னு எதுவுமே தெரியாம நடிச்சேன். அந்த சீன் முடிஞ்சதும் எல்லாரும் கைதட்டிப் பாராட்டினாங்க. நான் ஒண்ணுமே புரியாம நின்னுட்டிருந்தேன். ஒரு சீன் டேக் போற வரைக்கும் எங்க பக்கத்துல நின்னு, ஃபஹத் சாதாரணமா பேசிட்டுத்தான் இருப்பார். ஷூட்னு வந்துட்டா அப்படியே மாறிடுவார். அதெல்லாம் பக்கத்துல இருந்து பார்க்க செமையா இருந்துச்சு.
ஆறு மலையாளப் படங்கள் பண்ணினதுக்கு அப்புறம்தான் எனக்குத் தமிழ்ப் படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பும் `மகேஷிண்டே பிரதிகாரம்’ படம் மூலமாத்தான் கிடைச்சது. அந்தப் படம் பார்த்துட்டுத்தான் என்னை ’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மலையாளத்தில் என் முதல் படம் எப்படி மறக்க முடியாததா அமைஞ்சதோ, அதே மாதிரி என் முதல் தமிழ்ப்படமும் அமைஞ்சது. சசி சார் மாதிரி ஒரு பெரிய இயக்குநர் படத்துல, ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவா, சித்தார்த்துக்கு ஜோடியா நடிப்பேன்னு நினைக்கவே இல்லை. படம் ரிலீஸானதுக்கு அப்புறம் பல பாசிட்டிவ் கமென்ட்ஸ் வந்துச்சு. என் நடிப்பைப் பாராட்டி பல பேர் மெசேஜ் பண்ணியிருந்தாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு’’ என்றவர், `தீபாவளி’ என்றதும் உற்சாகமாகிறார்.
‘`நான் பி.ஜி படிக்கிறதுக்காக பாண்டிச்சேரி போறவரைக்கும் தீபாவளிக் கொண்டாட்டம் எப்படி இருக்கும்னே எனக்குத் தெரியாது. கேரளாவில் தீபாவளியைப் பெருசா யாரும் கொண்டாட மாட்டாங்க. ஆனால், பாண்டிச்சேரிக்கு வந்தப்போதான் தீபாவளின்னா எப்படி இருக்கும்னு நேர்ல பார்த்தேன். காலையில 5 மணியிலிருந்து ராத்திரி வரைக்கும் பட்டாசுச் சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு. பாண்டிச்சேரியில இருந்த என் ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்குப் போனேன். விதவிதமா பலகாரங்கள், சாப்பாடு செஞ்சுவெச்சிருந்தாங்க. அதையெல்லாம் சாப்பிட்டுட்டு, கொஞ்சமா மத்தாப்பு வெடிச்சிட்டு வந்தேன். இதுவரைக்கும் என் வாழ்க்கையில நான் கொண்டாடிய தீபாவளி அது மட்டும்தான்’’ என முகம் மலர்கிறார் லிஜோமோள்.

சுசீந்திரன் இயக்கிய `கென்னடி கிளப்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மீனாட்சி. முதல் படத்திலேயே பாரதிராஜா, சசிகுமார், சுசீந்திரன் என மூன்று இயக்குநர்களோடு பணியாற்றிய அனுபவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் மீனாட்சி.
“என் தீபாவளி மைசூர்ப்பாகு!” - மீனாட்சி
``சுசீந்திரன் சார் நடிச்ச ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ பட இயக்குநர் ராம்பிரசாத்தின் வேறொரு படத்துக்காக ஆடிஷன் போயிருந்தேன். அந்தச் சமயம், ராம்பிரசாத் சார்கிட்ட `கென்னடி கிளப்’ படத்துக்காக ஒரு நடிகையைத் தேடிட்டு இருக்கிறதா சுசீந்திரன் சார் சொல்லியிருக்கார். அப்போ என்னைப் பற்றி ராம்பிரசாத் சார் சொல்ல, நான் நடிச்ச ஆடிஷன் வீடியோவைப் பார்த்துட்டு, என்னை `கென்னடி கிளப்’ படத்துக்காக செலக்ட் பண்ணினார். என் முதல் படத்திலேயே நான் மூணு இயக்குநர்களோடு வொர்க் பண்ணியிருக்கேன். பாரதிராஜா சார், சசிகுமார் சார், சுசீ சார்னு மூணு பேர்கிட்ட இருந்து நிறைய இன்புட்ஸ் வரும். மூணு இயக்குநர்கள் என்பதைத் தாண்டி, `இரண்டு காலகட்ட இயக்குநர்கள்’னு சொல்லலாம். பாரதிராஜா சார் பல நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கார். அவர்கூட உட்கார்ந்து பழைய விஷயங்களைப் பேசினது செம அனுபவம்.
முதல் படத்திலேயே கபடி ப்ளேயரா அதுவும் பெண்களை மையப்படுத்திய படத்தில் நடிச்சது பெருமையா இருந்துச்சு. படம் ரிலீஸானதும் நிறைய பேர் பாராட்டினாங்க. சில பட வாய்ப்புகளும் வந்துச்சு. சீக்கிரமே அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிடுவேன்’’ என்ற மீனாட்சிக்கு, தன் தாய்மொழி மலையாளம் என்பதால், மலையாளப் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வமாம்.

``நாங்க மலையாள ஃபேமிலியா இருந்தாலும், பல வருடங்களா சென்னையிலதான் இருக்கோம். அதனால, எல்லா வருட தீபாவளியையும் சிறப்பாகக் கொண்டாடுவோம். தீபாவளி அன்னைக்கு சொந்தக்காரங்க எல்லாரையும் வீட்டுக்கு வரச் சொல்லிடுவேன். அவங்களோடு அரட்டை அடிக்கிறதுதான் என்னோட மிகப்பெரிய பொழுதுபோக்கே. எல்லாரும் சேர்ந்து இருந்தாலே திருவிழாதானே. அதனால, தீபாவளி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். குறிப்பா, தீபாவளி அப்போ எங்க வீட்டுல செய்யற மைசூர்ப்பாகுக்காகவே தீபாவளி எப்போ வரும்னு வெயிட் பண்ணிட்டு இருப்பேன். மத்த நாள்களில் செய்யற மைசூர்ப்பாகில் அந்த டேஸ்ட் இருக்கறதில்லை. அதனாலேயே எனக்கு தீபாவளியை ரொம்பப் பிடிச்சிருக்கு’’ எனக் கண் சிமிட்டுகிறார் மீனாட்சி.

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகைகளில் ஒருவர் விஜி சந்திரசேகர். இவரின் மகள் லவ்லின் சந்திரசேகர், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய `ஹவுஸ் ஓனர்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
“அம்மா மாதிரி பேர் வாங்கணும்!” - லவ்லின்
``என் போட்டோவை ‘மை மிரர்’னு கேப்ஷன் போட்டு எங்க அம்மா சோஷியல் மீடியாவில் போஸ்ட் பண்ணினாங்க. அதைப் பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் மேம், அம்மாவுக்கு போன் பண்ணி, `அப்பாவியான ஒரு பாலக்காட்டுப் பொண்ணு கேரக்டருக்கு ஒரு நடிகை தேவைப்படுறாங்க. இப்போ நீ போஸ்ட் பண்ணின போட்டோவைப் பார்க்கும்போது, என் பட கேரக்டருக்கு சரியான சாய்ஸா உன் பொண்ணு இருக்கா. ஆடிஷனுக்குக் கூட்டிட்டு வர்றியா?’ன்னு கேட்டிருக்காங்க. அம்மாவும் என்னை அழைச்சுட்டுப் போனாங்க. `நீ வெளியே இரு’ன்னு எங்க அம்மாகிட்ட சொல்லிட்டு, என்னை மட்டும் ரூமுக்குள்ள கூட்டிட்டுப் போய் ஆடிஷன் பண்ணினாங்க. லட்சுமி மேடத்துக்கு என் நடிப்பு ரொம்பப் பிடிச்சுப்போனதால, `ஹவுஸ் ஓனர்’ படத்துல நடிக்கவெச்சாங்க.

முதல் நாள் ஷூட்டே, `முதலிரவு சீன்’னு சொல்லிட்டாங்க. அதனால செம பயத்தோடதான் ஷூட்டிங் போனேன். ஆனால், லட்சுமி மேடம் என்கிட்ட இருந்து என்னோட பெஸ்ட்டை எல்லாம் கேமராவுல எடுத்துக்கிட்டாங்க. படத்துல நான் நடிச்ச போர்ஷன் ஃப்ளாஷ்பேக்லதான் வரும்; அதுவும் பீரியட் போர்ஷன். அந்தக் காலத்துல மலையாளப் பெண்கள் எப்படி டிரஸ் அண்டு மேக்கப் போடுவாங்களோ அதே மாதிரி எனக்கும் மேக்கப் போட்டுவிட்டாங்க. அந்த கெட்டப்ல என்னைப் பார்க்க எனக்கே புதுசா இருந்துச்சு. இதுவரைக்கும் நான் அப்படியெல்லாம் டிரஸ்ஸிங் பண்ணினதே இல்லை. அந்த ஷூட்டிங் முழுக்கவே ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு.
`என் பொண்ணு நடிப்பான்னு நான் நினைக்கவே இல்லை. ஆனா, உங்க படத்துல நடிச்சிட்டா. ஒரு நடிகையோட நடிப்பு முழுமையா வெளிய தெரியணும்னா, அதுக்கு டப்பிங் ரொம்ப முக்கியம். நல்ல ஆளாவெச்சு டப்பிங் பண்ணுங்க’ன்னு லட்சுமி மேடம்கிட்ட அம்மா சொன்னாங்க. ஆனா, லட்சுமி மேடம் நான்தான் பேசணும்னு சொல்லி, என்னையே டப்பிங் பண்ணவெச்சாங்க. படம் பார்த்தபோது அம்மா ‘நீயா இவ்வளவு அழகா டப்பிங் பண்ணியிருக்கே’ன்னு ஆச்சர்யமா கேட்டாங்க. இந்தப் படம் மூலமா எனக்கு இப்போ சில வாய்ப்புகள் வந்திருக்கு. அதிலெல்லாம் நல்லா நடிக்கணும். அம்மா மாதிரி நல்ல நடிகைன்னு பேர் வாங்கணும்’’ என்ற லவ்லின், அவருடைய தீபாவளி எப்படி இருக்க வேண்டும் எனச் சொன்னார்.
‘`சின்ன வயசுல ஒவ்வொரு தீபாவளியும் செமையா என்ஜாய் பண்ணுவேன். ஆனா, இப்போல்லாம் தீபாவளியை ரொம்பப் பெருசா கொண்டாடுறதில்லை. ஏன்னா, பட்டாசு வெடிக்கிறதனால சுற்றுச்சூழல் மாசுபடுது. அதனால விதவிதமா பலகாரங்கள் சமைச்சு சாப்பிடுறதுக்கு மாறிட்டேன். ஈக்கோ ஃபிரெண்ட்லியா தீபாவளி இருந்தா, எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதை நோக்கி நாம போகணும்கிறது என் ஆசை’’ என்கிறார், லவ்லின் சந்திரசேகர்.