சினிமா
தொடர்கள்
Published:Updated:

“தனுஷ் படத்தில் டான்! ”

மகனுடன் வேல.ராமமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
மகனுடன் வேல.ராமமூர்த்தி

எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, இப்போது முழுநேர நடிகராகிவிட்டார்.

தெக்கத்தி சினிமாக்கள் என்றாலே கண்டிப்பாக டைட்டில் கார்டில் இடம்பெறும் பெயர் இவருடையது.

“எழுத்தாளர் வேல.ராமமூர்த்தியின் நேரத்தை சினிமா அதிகம் எடுத்துக்கொண்டதா?’’

“சினிமாவிற்கு வந்துவிட்டால் அலைச்சல்தான் அதிகம். அடிப்படையில் நான் எழுத்தாளர் என்பதால், சினிமா எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. சமீபகாலமாக சிறுகதைகளை எழுத முடியவில்லை. ‘அரியநாச்சி’, ‘குருதியாட்டம்’ போன்ற புத்தகங்கள்கூட முழுமை பெறாத புத்தகங்கள்தான். அது வாசகர்களுக்குத் தெரியாது, எனக்குத் தெரியும். 60 வருடத்திற்கு முன்பு இருந்த எங்கள் மூதாதையர்களின் வாழ்க்கையை இலகுவான எழுத்தாக எழுத முடியாது. அதனால், கடுமையான நேரத்தை எழுத்து வாங்குகிறது. நான் இறந்தாலும் நிலைத்து நிற்கக்கூடியது அவை. அதனால், ஏனோதானோவென்று எழுதிவிட மனமில்லை.”

‘`தொடர்ந்து எதிர்மறைக் கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறீர்களே... ஏன்?”

‘`மதயானைக் கூட்டம்’, ‘கிடாரி’, ‘சேதுபதி’யில்தான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தேன். மற்றபடி, ‘பாயும்புலி’யில் அப்பாவாக, ‘ரஜினி முருக’னில் பூசாரியாக, ‘கொம்பன்’ படத்தில் ஜாலியான சித்தப்பாவாக எனப் பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். என்னுடைய தோற்றம் அப்படி இருப்பதால், நெகட்டிவ் கதாபாத்திரங்கள் அதிகம் வருகிறது என்று நினைக்கிறேன். தவிர, என்னைத் தேர்வு செய்வது இயக்குநரின் முடிவு. அதில் நான் தலையிட முடியாதே! மற்றபடி, எனக்கு இயக்கும் எண்ணம் இருக்கிறது. என் படைப்பை, வாழ்க்கையைக் கண்டிப்பாகத் திரைப்படைப்பாகச் செய்வேன். தெக்கத்திக் கதைகளை இயக்குவதில் எனக்கு விருப்பம் அதிகம். ராமநாதபுரம், முதுகுளத்தூர், கமுதி வாழ்க்கை இன்னும் சினிமாவில் முழுமையாகப் பதிவாகவில்லை. எங்கள் மாவட்டத்தை மையப்படுத்திய படங்கள் நிறைய வந்திருக்கின்றன. ஆனால், ராமநாதபுரத்தின் வட்டார வழக்கு சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. தமிழ் சினிமாவில் செந்தில் ஒருவர்தான் எங்கள் மொழியைச் சரியாகப் பேசுவார். காரணம், அவர் எங்கள் ஊர்க்காரர்.’’

“சென்சார் போர்டில் இருந்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?’’

“சென்சார் போர்டில் ஒரு படத்தை ஐந்து பேர் சேர்ந்து பார்ப்போம். உறுப்பினர் ஆனதுமே எது இருக்க வேண்டும், இருக்கக்கூடாது என்ற விதிமுறைகளைக் கொடுத்துவிடுவார்கள். நான் பார்த்த படங்களில் பல கெட்ட வார்த்தைகள், சாதிப் பெயர்களை நீக்கியிருக்கிறேன். சிலர், பழங்குடியினரின் சாதிப் பெயர்களை, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்தின் பெயர்களைத் தெரியாமல் பயன்படுத்தி யிருப்பார்கள்.

“தனுஷ் படத்தில் டான்! ”

உதாரணத்திற்கு, ‘நாதாரி’ என்ற பெயர். அது ஒரு சாதிப் பெயர். இப்படிச் சில விஷயங்களைச் செய்திருக்கிறேன். மிக மோசமான, பார்க்க முடியாத பல படங்களும் வரும். யு, யு/ஏ, ஏ, எஸ் என நான்கு வகையான சான்றிதழ்கள் இருக்கும். ‘எஸ்’ என்பது ரிஜெக்ட் சான்றிதழ். அதைப் பெறும் படங்களை வெளியிட முடியாது. இப்படித் தீர்மானமாக படங்களை இறுக்கிப்பிடித்துதான் சான்றிதழ் கொடுப்போம். தற்போது, சென்சார் போர்டில் அரசியல் நுழைந்துவிட்டது.”

“மும்மொழிக் கொள்கை, புதிய கல்விக்கொள்கை போன்ற விஷயங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“நான் ராணுவத்தில் இந்தி, மலையாளம் போன்ற மொழிகளைக் கற்றுக்கொண்டேன். நிறைய மொழிகளைக் கற்பது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் இது நடக்கிறது. ஒற்றை மொழி, ஒற்றை தேசம் என்கிற நோக்கத்தில்தான் இதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!”

“சுயசாதிப் பெருமைப் பேசக்கூடிய படங்கள் இப்போது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நீங்கள் நடித்த படங்களே பெரும்பாலும் சுயசாதிப் பெருமை பேசுகிற படங்களாகத்தான் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?”

“அழகை மட்டுமே படம் எடுக்க முடியாது, அழுக்கையும் சொல்ல வேண்டும். அதுபோல, சாதியையும் சொல்ல வேண்டும். ஆனால், சாதிப் பெருமையைப் பேசித் திரியக்கூடாது. தமிழில் ஒரு தவறான டிரெண்டு வந்துகொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க சுயசாதியைப் பேசி, ஊடகம் மூலம் கவனம் பெறலாம் என நினைக்கிறார்கள். அனைத்துச் சமூகத்தின் வாழ்வியலையும் இயல்பாகச் சொல்லி, அதைக் கலையாக்கலாம்!

“தனுஷ் படத்தில் டான்! ”

நான் ஒரு நடிகன்தான். என் கேரக்டர் பற்றித்தான் எனக்குத் தெரியும். படத்தின் மொத்தக் கதையும் எனக்குத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற பல நடிகர்களுக்கும் ஒரு படத்தின் முழுக்கதையும் தெரியாது. ஹீரோவைத் தவிர! அதனால், அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. என்னுடைய எழுத்தில் அப்படியான படைப்புகள் வந்தால், அது தவறு. மற்றபடி, எல்லோருக்கும் ஒரு சுய அரசியல் இருக்கத்தான் செய்கிறது.”

“சமூக அவலங்களைப் படைப்பின் வாயிலாகத்தானே மாற்ற முடியும். அந்த மாற்றம் எப்போது நிகழும் என நினைக்கிறீர்கள்?’’

“அப்படி ஒரு நிலையே நிலைகுலைந்துவிட்டது. பொதுவுடைமைக் கட்சியிலிருந்து நாங்கள் வந்தோம். அதுவே, இப்போது பெரிய பின்னடைவில் இருக்கும்போது, எதை எடுத்துச் செய்ய முடியும்? மாநிலக் கட்சியும், தேசியக் கட்சியும் நாள்களை ஓட்டுகிறார்கள். எத்தனை எழுத்தாளர்கள், கலைஞர்கள் செய்தாலும் அரசியல்வாதி கையில்தான் சட்டம், அதிகாரம் இருக்கின்றன. அவர்கள்தான் மாற்றத்தைக் கொடுக்க வேண்டும்.”

“இப்போது என்னென்ன படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?”

“சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் நடித்திருக்கிறோம். இதில் பாரதிராஜாவின் மகனாக நடிக்கிறேன். எனக்கு மகனாக சூரி நடிக்கிறார். திருப்தியான கதாபாத்திரம். படம் முடியப்போகிறது. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் ஒரு படம் நடிக்கிறேன். தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், நடிக்கிறார். இதில் நான் டான் கேரக்டரில் நடிக்கிறேன். ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ தயாரிப்பில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அதேபோல வைபவ் நடித்திருக்கும் படம் மற்றும் ஆகஸ்டில் வெளியாகவுள்ள ‘மயூரன்’ என ஐந்து படங்கள் ரிலீஸுக்காகக் காத்திருக்கின்றன.’’