
100 ஆண்டுகளுக்கு முன், பால் வியாபாரி ஒருவர் கிணறு வெட்டப்போய் அதில் அட்சயபாத்திரம் ஒன்று கிடைக்கிறது.
100 ஆண்டுகளுக்குப் பின், அந்த அட்சயபாத்திரம் பற்றி அட்சயா எனும் ஏமாற்றுப் பேர்வழிக்குத் தெரியவருகிறது. `அடித்தது ஜாக்பாட்’ எனக் கூட்டாளியோடு சேர்ந்து ஆட்டையைப் போடக் கிளம்புகிறாள். அட்சயாவின் கைகளுக்கு அந்த அட்சயபாத்திரம் கிடைத்ததா, இல்லையா என்பதே `ஜாக்பாட்’ சொல்லும் கதை.

அட்சயாவாக ஜோதிகா, கம்பு சுற்றுகிறார், காமெடி பண்ணுகிறார், பறந்து பறந்து அடிக்கிறார், பன்ச் டயலாக் பேசுகிறார். மூன்றாவது முறையாக இந்தப் படத்திலும் மாஷாவாக ரேவதி. வழக்கம்போல் யோகிபாபு வருகிறார், வழக்கம்போல் உருவகேலி காமெடிகளை மலிவு விலைக்கு விற்றுவிட்டுச் செல்கிறார். படத்தில், பெரிய ஜாக்பாட் அடித்திருப்பது ஆனந்த்ராஜுக்குத்தான்! மானஸ்தன், மானஸ்தி என இரட்டை வேடங்களில் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார்.
மானஸ்தன் அடிக்கும் ஒன்-லைன்கள் மாஸ் என்றால், மானஸ்தியின் கெட் அப் கொல மாஸ்! சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான், தங்கதுரை, `நான் கடவுள்’ ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, அந்தோனி தாசன் என, படத்தில் தெரிந்த முகங்கள் ஏராளம். எல்லா முகங்களும் நம் முகங்களில் சின்னப் புன்னகையையாவது ஒட்டவைத்துச் செல்கின்றன.

முதற்பாதி முழுக்க, கதா பாத்திரங்களை அறிமுகப்படுத்து வதிலும் ஜோதிகாவின் மாஸ் பில்டப்புகளிலுமே முடிந்துவிடுகிறது. என்ன, கதை நகரவில்லை என்றாலும் கொஞ்சம் காமெடியாகவாவது நகர்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் கதை ஆரம்பித்த பின், காமெடி காணாமல்போகிறது. இன்டர்வெல் காட்சி அட்டகாசம்! அதை அப்படியே அட்சயபாத்திரத்துக்குள் எடுத்துப்போட்டுப் பெருக்கி, படம் முழுக்கப் பரப்பியிருக்கலாம்.
சின்னச் சின்ன சுவாரஸ்யமான காட்சிகளிலும், ஒட்டுமொத்தக் கதையையும் வட்டமெனத் திரைக்கதையாக அமைத்ததிலும் கவனிக்கவைக்கும் இயக்குநர் கல்யாண், மற்ற விஷயங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். விஷால் சந்திரசேகரின் இசை, சில இடங்களில் இனிமை; சில இடங்களில் இரைச்சல்! ஆர்.எஸ்.ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவு, கலர்ஃபுல். திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகளுக்கு விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு பரபரப்பு கூட்டுகிறது.
பில்டப்புகளைக் குறைத்து, காமெடியைக் கூட்டியிருந்தால் `ஜாக்பாட்’ ஜாலிபாட்டாக வந்திருக்கும்!