சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஜகமே தந்திரம் - சினிமா விமர்சனம்

தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
தனுஷ்

ஜகமே தந்திரத்தின் இரு மந்திரக்காரர்கள் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவும்.

பாண்டிய நாட்டுத் தலைநகரிலிருந்து இங்கிலாந்துத் தலைநகருக்குப் பயணப்படும் ரவுடி, புலம்பெயர்ந்த அகதிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வதே ‘ஜகமே தந்திரம்.’

மதுரையில் புரோட்டாவும் சால்னாவும் பிசைந்து அடித்த கையோடு தன் எதிரிகளையும் போட்டுத் துவைக்கும் ரவுடி சுருளி. அவரின் சாகசங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட லண்டன் தாதா பீட்டர் அவரை இங்கிலாந்திற்கு அழைக்கிறார். ஈழத்திலிருந்து வந்து லண்டனில் கோலோச்சும் ஷிவதாஸ் என்னும் பீட்டரின் எதிரியைப் போட்டுத்தள்ளும் அசைன்மென்ட் சுருளிக்குத் தரப்படுகிறது. அந்த அசைன்மென்டைச் சுருளி முடித்தாரா, அதற்கப்புறம் என்ன ஆனது என்பதை இரண்டே முக்கால் மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

சீரியஸான படங்களுக்கு நடுவே அவ்வப்போது ஜாலியாய் ஒரு சிக்ஸர் அடிப்பது தனுஷின் வழக்கம். இதிலும் ரகளையான சுருளியாய் ஆடிப் பாடி அதகளம் செய்கிறார். ஆனால் எதற்கும் அஞ்சாத புத்திசாலி ரவுடி பார்த்தவுடன் காதலில் விழுவது, ஒரு கதை கேட்டவுடன் மனம் திருந்திவிடுவது போன்றவற்றில் ஆழமில்லை.

பீட்டராக வரும் ஜேம்ஸ் காஸ்மோ நல்ல தேர்வு. நிறவெறிபிடித்த வெள்ளைக்கார வில்லனாய் சில காட்சிகளில் தனுஷுக்கு இணையாக நிற்கிறார். புலம்பெயர் தமிழர்களாக வரும் ஐஸ்வர்ய ல‌ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் போன்றவர்கள் உணர்ச்சிகளைச் சரியாகக் கடத்தினாலும் துருத்தி நிற்கும் ஈழத்தமிழ் டப்பிங் உறுத்துகிறது.

ஜகமே தந்திரத்தின் இரு மந்திரக்காரர்கள் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவும். ‘ரகிட ரகிட’ என இறங்கிக் குத்தி, ஈழ மண்ணில் கனமேற்றி, லண்டன் தெருக்களின் ஸ்டைலான பின்னணி இசையில் மயக்கி மாயம் செய்கிறார் சந்தோஷ். மறுபுறம் அட்சர சுத்தமான ப்ரேம்களின் வழியே நிலப்பரப்புகளை, அதன் பரபரப்புகளைக் கடத்துகிறார் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. தினேஷ் சுப்பராயனின் ஸ்டன்ட் வடிவமைப்பு படத்தின் டெம்போவை ஏகத்துக்கும் ஏற்றுகிறது.

ஜகமே தந்திரம் - சினிமா விமர்சனம்

உலககெங்கிலும் தலைவிரித்தாடும் நிறவெறி, இனவெறி, பாசிச அரசியல் மற்றும் ‘அகதிகள்’ என்றும் ‘வந்தேறிகள்’ என்றும் வசைபாடப்படும் ஏதிலிகளின் துயரங்களைக் கமர்ஷியல் சினிமாவில் பேச முயன்றதற்கு வாழ்த்துகள். ஆனால் படத்தில் காட்டப்படும் புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே துப்பாக்கியும் வெடிகுண்டுமாக அலைவது நெருடலை ஏற்படுத்துகிறது.

கிட்டத்தட்ட இங்கிலாந்து நாடாளுமன்றம் வரை செல்வாக்கு செலுத்தும் வில்லனுக்கு ஒரு தமிழ் மாபியாவின் ரகசியங்களை அறிவதோ அவர்களைக் கட்டுப்படுத்துவதோ அவ்வளவு கஷ்டமா என்ன? மதுரை தொடங்கி லண்டன் வரை கடமைக்குக்கூட போலீஸ் எட்டிப்பார்க்காமல் ஏகப்பட்ட லாஜிக் சொதப்பல்கள்.

நம்பகத்தன்மையைக் கூட்டி, இன்று உலகத்தின் மிக முக்கியமான பிரச்னையை இன்னும் சீரியஸாக அணுகியிருந்தால் இன்னும்கூட ரசித்திருக்கலாம்.