சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“பாலச்சந்தர் எனக்காக போட்டோ ஷூட் பண்ணார்!”

மணிகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
மணிகண்டன்

இது நிஜமாவே ஒருத்தருக்கு நடந்திருக்கு. நீங்க போதும், வலிக்குதுன்னு சொல்லிட்டிங்கன்னா, அந்த வலியை என்னால படம் பார்க்கறவங்களுக்குக் கடத்த முடியாது'ன்னு சொல்லிட்டார்

‘சினிமாவை மனப்பூர்வமாக நேசித்தால் சினிமா அவர்களை எப்போதும் கைவிடாது' என்ற நம்பிக்கை வார்த்தைகளை சினிமாவில் இருக்கும் பலர் சொல்லிக் கேட்டதுண்டு. அதற்கு இன்று நம் கண்முன்னே இருக்கும் உதாரணம், மணிகண்டன். வசனகர்த்தாவாகவும் நடிகராகவும் ‘விக்ரம் வேதா' இவருக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தாலும், ‘காலா' இவரை மக்களுக்குப் பரிச்சயமாக்கியது. தொடர்ந்து, ‘சில்லுக்கருப்பட்டி', ‘ஏலே', ‘நெற்றிக்கண்' ஆகிய படங்களில் யதார்த்த நடிப்பினால் கவர்ந்தவருக்கு, ‘ஜெய் பீம்' மிகப்பெரிய திருப்புமுனை.

``மணிகண்டன் டு ராஜாக்கண்ணு, ராஜாக்கண்ணு டு மணிகண்டன் எது ஈஸியா இருந்தது?’’

‘‘இது ரெண்டுக்கும் இடையில இன்னொரு காலகட்டம் இருந்தது. அதுதான் லாக்டெளன். பத்து நாள் ஷூட்டிங் முடிஞ்சதும் லாக்டெளன் வந்திடுச்சு. அந்த ஏழு மாசம் நான் இந்தக் கேரக்டரா மாற நிறைய படிச்சேன். தினமும் இயக்குநர் ஞானவேல் சார் எனக்கு நிறைய கட்டுரைகள், புத்தகங்கள் அனுப்புவார். அது எல்லாமே ரொம்ப உதவியா இருந்தது. ஓவர் நைட்ல ராஜாக்கண்ணுவா மாற முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயம் தெரிஞ்சுக்கிட்டு பேச்சு, உடல்மொழியில சேர்த்துக்கிட்டே இருந்தேன். அதுல நான் ஆடுற டான்ஸ் சும்மா கை, கால் ஆட்டுற மாதிரி இருக்கும். அதுக்குப் பெயர் ‘இருளராட்டம்.’ அதுக்கு முறையா சொல்லிக்கொடுத்தாங்க. அந்த இடம் அந்நியமா இருக்கக்கூடாதுன்னு முன்னாடியே போய் அங்க தங்கி அவங்களோடு பழகினோம். 22 நாள் எனக்கு ஷூட்டிங் முடிஞ்சது. அந்தக் கேரக்டரா இன்னும் கொஞ்ச நாள் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். உண்மையாவே, ராஜாக்கண்ணு கேரக்டர்ல இருந்து வெளியே வர்றது ரொம்ப சிரமமா இருந்தது.''

“பாலச்சந்தர் எனக்காக போட்டோ ஷூட் பண்ணார்!”

``என்னதான் சினிமாவா இருந்தாலும் நீங்க அடிவாங்குறதைப் பார்க்கவே கஷ்டமா இருந்தது. உங்களுக்குக் கொஞ்சம்கூட சிரமமாவோ அசெளகரியமாவோ இல்லையா?’’

‘‘ஞானவேல் சார் என்கிட்ட, ‘இது நிஜமாவே ஒருத்தருக்கு நடந்திருக்கு. நீங்க போதும், வலிக்குதுன்னு சொல்லிட்டிங்கன்னா, அந்த வலியை என்னால படம் பார்க்கறவங்களுக்குக் கடத்த முடியாது'ன்னு சொல்லிட்டார். அதனால, எவ்வளவு சிரமமா இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்ல வாயே திறக்கமாட்டோம். இன்னொரு விஷயம் என்னன்னா, நமக்கு டைரக்டர் ‘கட்' சொன்னா, அடிக்கிறதை நிறுத்திடுவாங்க. டீ, காபி தருவாங்க. நிஜ ராஜாக்கண்ணுவுக்கு அப்படியில்லை. அப்போ அந்தக் கதாபாத்திரத்துக்கு நம்மளால எப்படி நியாயம் சேர்க்க முடியுமோ, சேர்க்கணும். டேக் போகலாம்னு சொன்னவுடன் திடீர்னு ஒரு அமைதி நிலவும். அந்த லாக்கப்பும் அமைதியும் ரொம்ப பயத்தையும் பதற்றத்தையும் கொடுக்கும். அந்த டேக் ஆரம்பிச்சதிலிருந்து நம்ம மனநிலை கிட்டத்தட்ட ராஜாக்கண்ணுவா மாறிடும்.''

``படம் பார்த்துட்டு வீட்ல என்ன சொன்னாங்க?’’

‘‘என் அம்மாவுக்கு ரொம்ப பயம் வந்திடுச்சு. ‘நீ ஏன் இப்படி நடிக்கிற? என்னை ஏன் இந்தப் படத்துக்குக் கூட்டிட்டுப் போன?'ன்னு கேட்டாங்க. அப்பாவுக்கு படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. என் தங்கச்சிகிட்ட ஞானவேல் சார், ‘படம் எப்படி இருக்கு?'ன்னு கேட்டப்போ, அவளுடைய கர்ச்சீப்பை அவர்கிட்ட கொடுத்துட்டா. அழுது அழுது ஈரமா இருந்தது.''

“பாலச்சந்தர் எனக்காக போட்டோ ஷூட் பண்ணார்!”

``மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், ஆர்.ஜே., டப்பிங் ஆர்ட்டிஸ்ட், வசனகர்த்தா, நடிகர், இயக்குநர்னு உங்களுக்குப் பல முகங்கள் இருக்கே?’’

“என்னைப் பொறுத்தவரை இதெல்லாமே வெவ்வேறு முகங்கள் கிடையாது. எல்லாமே பெர்ஃபாமென்ஸ்தான். ஒரு நடிகன் ‘சார் இதை இப்படிச் சொல்லட்டுமா?'ன்னு கேட்கும்போது, ஒரு எழுத்தாளனாதான் இருக்கான். ஒரு இயக்குநர் ‘இப்படி நடிங்க’ன்னு நடிச்சுக்காட்டும்போது, ஒரு நடிகனா இருக்கார். ஒரு எமோஷனை பெர்ஃபாம் பண்ணணும். அது குரல் வழி, எழுத்து வழி, முக வழின்னு எப்படி வேணாலும் இருக்கலாம்.''

``இயக்குநர் பாலசந்தர், ஷார்ட் பிலிம்ல உங்க நடிப்பு பார்த்துட்டு, உங்களைக் கூப்பிட்டுப் பாராட்டினாராமே?’’

‘‘ ‘நாளைய இயக்குநர்'ல நான் நடிச்ச ‘You are my Angel' ஷார்ட் பிலிம் பார்த்துட்டு, என்னைப் பார்க்கணும்னு சொல்றார்னு அந்த ஷோ டைரக்டர் சொன்னார். எனக்கு செம சந்தோஷம். அவரைப் போய்ப் பார்த்தேன். அந்த ஷார்ட் பிலிம்ல நான் திக்கித் திக்கிப் பேசுற கேரக்டரா நடிச்சிருந்தேன். பாலசந்தர் சாரைப் பார்த்ததும் வார்த்தையே வரலை. ‘ஓ... உண்மையாவே உனக்கு அந்தப் பிரச்னை இருக்கா?'ன்னு கேட்டார். ‘இல்லை சார். உங்களைப் பார்த்ததும் வார்த்தை வரலை'ன்னு சொன்னேன். ‘என்ன பண்ணிட்டிருக்க?'ன்னு கேட்டார். சொன்னேன். ‘வசனம் எழுதியிருக்கன்னு சொன்னாங்க. நீ நடிக்கப் போறியா, இல்லை, வசனம் எழுதப் போறியா?'ன்னு கேட்டார். ‘தெரியலை சார்'ன்னேன். ‘சூப்பர். உன்னைச் சுருக்கிக்காதே. என்ன தோணுதோ பண்ணு'ன்னு சொன்னார். ‘சார், நீங்க ஏதாவது படங்கள் டைரக்ட் பண்ணுனா, எனக்கு வாய்ப்பு கொடுங்க சார்?'னு கேட்டேன். ‘நான் இதுக்குப் பிறகு, படம் இயக்குவேனான்னு தெரியலை. இப்போ உன்னை ஒரு போட்டோஷூட்டுக்கு டைரக்ட் பண்றேன்'னு அப்போவே என்னை வெச்சு ஒரு போட்டோஷூட் டைரக்ட் பண்ணினார். அந்தப் போட்டோவைப் பொக்கிஷமா வெச்சிருக்கேன். கிளம்பும்போது, ‘நீ நடிச்ச மாதிரியான கேரக்டர் நாகேஷ் ரொம்ப யதார்த்தமா பண்ணுவான்டா. அதுக்குப் பிறகு, நீ பண்ணினதுதான் எனக்குப் பிடிச்சிருந்தது. நல்லா பண்ணு'ன்னு சொன்னார். எனக்குக் கண் கலங்கிடுச்சு. வாழ்க்கையிலே மறக்க முடியாத மொமன்ட் அது.''

``டீக்கடை, ஷேர் ஆட்டோ இந்த இரண்டும் உங்க வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானதுன்னு கேள்விப்பட்டோம். அப்படியா?’’

‘‘ஆமா. ‘என்னன்னு தெரியலை. மனசு கஷ்டமா இருக்கு'ன்னு நான் இயக்குநர் ஹலிதாகிட்ட சொன்னா, ‘போ. ஏதாவது ஷேர் ஆட்டோ டிரைவர் இருப்பார் உனக்காக'ன்னு கிண்டலா சொல்வாங்க. ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மூலமா ஏதாவது ஒரு விஷயம் கிடைச்சுடும். நிறைய வித்தியாச அனுபவங்களும் பாடங்களும் எனக்கு ஷேர் ஆட்டோ கொடுத்திருக்கு. இப்போவரை ஷேர் ஆட்டோவுலதான் போய்ட்டிருக்கேன். நான் சிம்பிள் அப்படிங்கிறதுக்காகச் சொல்லலை. எனக்கு இது போதுமானதா இருக்கு. மதினா டீ ஸ்டால்தான் கடந்த 15 வருஷமா என் ஆபீஸ். இப்போ இருக்கிற நிறைய சினிமா ஆளுமைகள் அந்தக் கடையில டீ சாப்பிட்டிருக்காங்க. எங்கேயோ சிதறிப்போயிருந்த எல்லோரும் அவங்க கனவுகளைப் பத்திப் பேசுற இடம்தான் அது. கடையை ராத்திரி 11 மணிக்கு மூடி மறுநாள் காலையில 4 மணிக்குத் திறப்பாங்க. அதுவரை அங்கேயே நின்னு சினிமா பத்திப் பேசிட்டிருந்திருக்கோம்.''

“பாலச்சந்தர் எனக்காக போட்டோ ஷூட் பண்ணார்!”

``நம்ம ஊர்ல திரைக்கதையாசிரியர்களுக்கான முக்கியத்துவம் எப்படி இருக்குன்னு நினைக்கிறீங்க?’’

‘‘சமீபகாலமா எழுத்துக்கு முக்கியத்துவம் இருக்குங்கிறதை உணர்ந்து, திரைக் கதையா சிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னு சந்தோஷமா இருக்கு. ஆனா, இது போதாதுன்னு நினைக்கிறேன்.''

``பல படங்களுக்கு உதவி இயக்குநராகவும் ‘நரை எழுதும் சுயசரிதம்’னு ஒரு பைலட் பிலிமுக்கு இயக்குநராகவும் இருந்திருக்கீங்க. மெயின் ஸ்ட்ரீம் சினிமாவுல உங்களை இயக்குநரா எப்போ பார்க்கலாம்?’’

‘‘சில காரணங்களால தள்ளிப் போய்க்கிட்டிருக்கு. எப்போன்னு தெரியலை. ஆனா, நிச்சயம் படம் இயக்குவேன்.’’