
‘ஆதியில் தோன்றிய முதல் கானுயிர் ஒரு மழைநாளின் பின்னிரவில் வேட்டையாடப்பட்டது.
வெட்டியெறியப்பட்ட அதன் குளம்புகள் சேற்றில் மரணத்தின் சுவடுகளாய் ஊன்றி நின்றன. சகலமும் அடங்கியபின் வழிந்து காய்ந்திருந்த ரத்தப்பொருக்குகளிலிருந்து ஒரு மந்தையினம் தோன்றியது. அவன் தனக்கு மனிதன் எனப் பெயர் சூட்டிக்கொண்டான்!’
- படம் பார்த்த ஒருவரின் பின்னூட்டம் இது!
மனிதன் அவனது ஆதிகால வன்மத்தையும் குரூரத்தையும் வெளிப்படுத்த ஓர் எருமையின் தப்பித்தல் போதுமானதாய் இருக்கிறது என்கிறது ‘ஜல்லிக்கட்டு’ மலையாளப்படம்.
கிராமம் ஒன்றில் தினமும் எருமைக்கறியை வெட்டி விற்கிறார் வர்கீ. ஊர் முழுக்க இவரது எருமை இறைச்சியில் ருசி காண்கிறது. ஒரு நாள் வெட்டவிருக்கும் தறுவாயில் எருமை காட்டுக்குள் ஓடிவிடுகிறது. அதன்பின் நடக்கும் ஒவ்வொரு நகர்வும் பல கவிதைகளை நமக்குள் போகிற போக்கில் விதைக்கிறது, இறுதியில் விருட்சமாய் வீற்றிருக்கிறது ஒரு மாமிசக்கிடங்கு. சேறும் குருதியுமாய்க் குழைத்து எழுதப்படும் ஜல்லிக்கட்டின் போஸ்டரே நமக்கு ஒரு கதை சொல்கிறது.

கெட்ட வார்த்தை பேசினால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனச் சொல்லிய சில நிமிடங்களில் கெட்ட வார்த்தைகளை வெள்ளமெனப் பொங்கச் செய்யும் முதியவர்; அரசு அதிகாரத்தின் கோர முகத்தினைத் தீக்கிரையாக்கும் ஊர் மக்கள்; பெண்கள்மீது ஆண்கள் நிகழ்த்தும் அதிகார அத்துமீறல்கள்; எதுவும் செய்யவிட்டாலும் எல்லாவற்றிலும் பங்கு கேட்கும் பூமாலை கிராமத்தின் குடிகார மாந்தர்கள்; முளைத்திருக்கும் போலி வரலாறுகளைக் கிழித்தெறியும் டீக்கடைக்காரர், வதந்திகளைக் கசியவிடும் கப்பக்கிழங்கு சீவும் பெண்கள்; போத்திறைச்சி செய்யும் லாகவம் சொல்லி நமக்கு எச்சில் ஊற வைக்கும் ரப்பர் எஸ்டேட் முதலாளி; கடைசி மூச்சை உதிர்க்கக் காத்திருக்கும் வயதானவர்; காட்டில் இரண்டு கால் மிருகங்களின் கதை சொல்லும் பெரியவர் எனக் கதைசொல்லிகள் நமக்கு ஆயிரம் கதைகளை ஜல்லிக்கட்டில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டில் வரும் எருமையின் இடத்தில் நாம் எதை வேண்டுமானாலும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். அங்கிருக்கும் கடைகளை உடைத்துச் செல்லும் விலங்கை வெட்டியெறிய அனைவரும் முடிவுசெய்கிறார்கள். ஒவ்வொரு முறை தப்பிக்கும்போதும், எருமை தளர்ந்துபோகிறது; மனிதன் இன்னும் அதிகமாய் மூர்க்கமாகிறான். தனது நாகரிக மேல்பூச்சை உதறித் தள்ளுகிறான். அஸ்திவாரம் நிலைகுலைய, அந்தச் சவக்குழிக்குள் அன்றுவரை நின்றிருந்த காமம், பாசம், நட்பு என அனைத்தும் வீழ்ந்து, விழுந்து நொறுங்குகின்றன. பிடிப்பவனுக்கே எருமை சொந்தம் என்னும் அதிகார அரசியலும் எட்டிப்பார்க்கிறது. நரம்புகள் புடைக்க எருமையை நோக்கி ஓடுகிறார்கள். எதிர்ப்படுபவர்கள் சரிகிறார்கள். மனிதன் தன் சுயரூபமான ஆதிமிருகமாகிறான்.
எஸ். ஹரீஸ் எழுதிய ‘மாவோயிஸ்ட்’ என்னும் சிறுகதையைத் தழுவி இயக்கியிருக்கிறார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. அவரது முந்தைய படமான ‘அங்கமாலி டைரீஸ்’ போல், இதிலும் பெரும்பாலான நடிகர்கள் திரைத்துறைக்குப் புதியவர்கள். அவர்களின் லிப் சிங் போதாமைகளும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன. ஆனால், அதையெல்லாம் கடந்து அவர்களை வைத்து ஆச்சர்யங்கள் நிகழ்த்துகிறார் இயக்குநர். ஒரு வைக்கோல்போர் தீப்பிடித்து எரிகிறது. (மனிதனின் அத்தனை கண்டுபிடிக்குமான ஆதித்தாய் தீதானே!). தீப்பரவும் வேகத்திலேயே அதை ஊர் முழுக்கச் சொல்லிக்கொண்டே செல்கிறான் ஒருவன். அவனது பார்வையில் வீட்டின் பரணில் ஒருவன் அசந்து தூங்குகிறான். அவன் அங்கிருந்து இறங்கி அந்த வைக்கோல்போர் நோக்கி ஓடி வருகிறான். ‘இங்க வாழக்கூட முடியாதா’ எனப் பெருஞ்சீற்றம் கொள்கிறான். கிட்டத்தட்ட ஒரு நிமிடம் வரும் இந்தக் காட்சி சிங்கிள் ஷாட். இப்படியாகப் படத்தில் மனிதர்களின் பின் தொடர்ந்து பயணிக்கும் கிரிஷ் கங்காதரனின் கேமராக்கண் நம்மையும் அந்தக் காடுகளுக்குள் ஓடவிடுகிறது. ஒரு போருக்கான ஆரவாரப் பெருங்கூச்சலுடன் ஓடும் ஜனத்திரள் காட்சியை இவ்வளவு அசுரத்தனமாய் இதற்கு முன்பு இந்திய சினிமாக்களில் கண்டதில்லை.

இசை என்பது வெறும் கருவிகள் அல்ல என்பதை உணர்வுபூர்வமாக உணர்த்துகிறது ‘ஜல்லிக்கட்டு.’ மனிதர்களின் ஓலத்தையும், அச்சூழலின் இசையையும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஜெஸ்வின் மாத்யூ, கண்ணன் கன்பத், ரங்கனாத் ரவி இவர்களின் சவுண்டு மிக்ஸிங்கும், சவுண்டு டிசைனிங்கும் படத்தின் பலங்கள். இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைக்கிறது பிரசாந்த் பிள்ளையின் அக்கபெல்லா (வாத்தியக்கருவிகளற்ற) இசை. பெரும்பாலான காட்சிகளில் பின்னணி இசை என்பது மனிதர்களின் குரல்கள் மூலம் ஒலியாக, இசையாக நமக்குள் செலுத்தப்படுகிறது. நம்மைத் திடுக்கிட வைக்கிறது. நம்மையும் அந்த ஜனத்திரளில் மூச்சிரைக்க ஓட வைக்கிறது. எருமையின் மூச்சிரைப்பும், மனிதனின் சுவாசமும் இணைந்து உறுமும் ஒலி நம்மைப் பதற வைக்கிறது. கூர்மையான ஒலி அமைப்புகளுக்கும், அச்சமூட்டும் ஓங்கார ஓலங்களுக்கும் ஒத்திசைத்துச் செல்கிறது தீபு ஜோசப்பின் படத்தொகுப்பு. படத்தின் தொழில்நுட்பக் குழுவை இந்த ஆண்டின் விருது நிகழ்ச்சிகளில் அடிக்கடி பார்க்கலாம்.
படத்தின் தொழில்நுட்ப ஆச்சர்ய களுக்காகவும், புதுமையான கதை சொல்லல்களுக்காகவும் இந்த ஜல்லிக்கட்டு விழாவினை தாராளமாய்க் கண்டு ரசிக்கலாம்.