
நாமதான் பெரிய ஆளுங்கிற மனநிலைல சிலர் இருக்காங்க. எல்லா மனுஷங்ககிட்டயும் எல்லா குணமும் இருக்குது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பி.ஜே.பி ஆகிய மூணு கட்சி ஆட்களின் குறைகளையும் சொல்லியிருக்கேன்.
“கொரோனா லாக்டௌனுக்கு அப்புறம் வாழ்க்கையே இருண்ட மாதிரி இருந்தது. சினிமாவை விட்டுட்டு வேற ஏதாவது வேலைக்குப் போயிடலாம்னு இருந்தப்போ என் அசிஸ்டன்ட் டைரக்டர் நஷித் முகமது பேமி கூட சேர்ந்து இந்தப் படத்தோட கதையை எழுதினேன். ஸ்கிரிப்ட் எழுதும்போது என் மனைவிகிட்ட நிறைய பேசினேன். கணவன்கிட்ட மனைவி ஏதாவது கேள்வி கேட்டாகூட ‘வீட்டுக்குள் சட்டம் பேசாத’ன்னு பலர் சொல்லிடுறாங்க. படத்தில் சொன்ன மாதிரி ஹோட்டலுக்குப் போனாகூட ‘இது நல்லாருக்கும், சாப்பிடு'ன்னு தனக்குப் பிடிச்சத மனைவிக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணுற கணவர்கள்தான் அதிகம். இப்படி எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்குற விஷயங்களை எடுத்து திரைக்கதை எழுதினோம். எல்லாக் கணவர்களுக்குள்ளேயும் ராஜேஷ் கேரக்டர் சின்னதா இருக்குன்னு நினைக்கிறேன்'' என சொல்லிச் சிரிக்கிறார் விபின் தாஸ். மலையாளத்தில் வெளியாகி, சமீபத்திய ஓ.டி.டி ரிலீஸுக்குப் பின் அதிகம் பேசப்படும் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தின் இயக்குநர்.

“நடிகர்களை எப்படி செலக்ட் பண்ணுனீங்க?”
“திலீஷ் போத்தன் இயக்கின ‘ஜோஜி' படம் பார்த்தப்போ பாசில் ஜோசப் ஒரு தனித்துவமான சீரியஸ் கேரக்டர் நல்லா பண்ணியிருந்தார். இதனால, ராஜேஷ் கேரக்டருக்கு ஜோசப் சரியா இருப்பார்னு தோணுச்சு. அதே மாதிரி ஜெயபாரதி கேரக்டருக்கு தர்ஷனா சரியா இருப்பாங்கன்னு நினைச்சேன். நாம சின்னதா படம் பண்ணிட்டு இருக்கோம். இதுல தர்ஷனா நடிப்பாங்களான்னு ஒரு டவுட் இருந்தது. ஆனா, ஸ்கிரிப்ட் கேட்டுட்டு உடனே ஒத்துக்கிட்டாங்க. மத்தபடி படத்தில் நடிச்சிருந்த வேற கேரக்டர்கள் எல்லாரும், நான் நினச்சத தாண்டி சரியா பொருந்தியிருந்தாங்க. ‘எனக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லயே’ன்னு நிறைய பேர் வருத்தப்படுற அளவுக்கு ஜெயாவோட அண்ணன் கேரக்டர் எல்லோருக்கும் பிடிச்சிருந்தது.”
“கம்யூனிஸ்ட் கேரக்டரைப் படத்தில் நெகட்டிவ் டோன்ல காட்டியிருந்தீங்களே?”
“நாமதான் பெரிய ஆளுங்கிற மனநிலைல சிலர் இருக்காங்க. எல்லா மனுஷங்ககிட்டயும் எல்லா குணமும் இருக்குது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பி.ஜே.பி ஆகிய மூணு கட்சி ஆட்களின் குறைகளையும் சொல்லியிருக்கேன். ஜெயாவோட அப்பா காங்கிரஸ், வாத்தியார் கேரக்டர் கம்யூனிஸ்ட், ராஜேஷின் அண்ணன் பி.ஜே.பி. இந்த மூணுவிதமான சிந்தனை உள்ள மக்களின் மனநிலையக் காட்டியிருக்கேன். ராஜேஷும் பி.ஜே.பி சார்ந்த மனநிலைல இருக்கும் நபர்தான். கோர்ட் காட்சிகளின் போது ராஜேஷ் பேசுற கலாசாரம், பொம்பளைங்க குழந்தையைப் பார்த்துட்டு வீட்ல இருக்கணும்னு சொல்றது எல்லாமே அதன் வெளிப்பாடுதான். முதல் பாதியில் தர்ஷனா கராத்தே பண்ணி ராஜேஷ அடிச்சிருப்பாங்க. படத்தின் அடுத்த பாதியில ஆடியன்ஸோட ஆர்வம் அதிகமாகணும்னு நினைச்சிட்டுதான் எழுதினேன்.’’

“இது ‘கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் தழுவல்னு விமர்சனங்கள் வந்துச்சே?”
“அப்படி இல்லை. என் படத்துல வர்ற ராஜேஷ் கேரக்டர் எப்போதும் மாறக் கூடியது கிடையாது. அந்தப் பொண்ணுக்கும் அப்பா, அம்மா, மாமான்னு யாருமே சப்போர்ட் பண்ண மாட்டாங்க. ஜெயாவோட அம்மா ஹாஸ்டல்ல பேசுற வசனங்கள் எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. பெரும்பாலான அம்மாக்கள் இப்படிதான் இருக்காங்க. இந்தக் காட்சியை எடுக்கும்போதுகூட ஓவரா இருக்குன்ற மாதிரியான எண்ணம் இருந்தது. ஆனா, ஆடியன்ஸுக்குப் பிடிச்சிருந்தது. அதேமாதிரி படத்தோட க்ளைமாக்ஸ் காட்சியில் வர்ற நீதிபதி கேரக்டர் நல்லாருந்ததுன்னு பலரும் சொன்னாங்க.’’

“இந்தப் படத்தின் ஓ.டி.டி ரிலீஸுக்குப் பிறகு தமிழ் ஆடியன்ஸ் பார்த்துட்டு சோஷியல் மீடியால எழுதுறாங்க. தமிழ் சினிமாவிலிருந்து யாரெல்லாம் பேசினாங்க?”
“எடிட்டர் பிரசன்னா, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் மோகன் பேசினாங்க. சூர்யா, ஜோதிகா பாராட்டி மெசேஜ் போட்டாங்க.”
“உங்களுக்கு ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' வெற்றி எப்படி இருக்கு?”
“எனக்கான செகண்ட் வாழ்க்கையை படம் கொடுத்திருக்கு. வரதட்சிணைக் கொடுமையால இறந்த விஸ்மயா வழக்கு கேரளாவில் ரொம்ப பிரபலம். கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்குப் போய் நிறைய கொடுமைகளை அனுபவிச்சிருக்காங்க. பொறந்த வீட்டு சப்போர்ட்கூட அவங்களுக்குக் கிடைக்கல. காலமும் பெரிசா மாறிடல, பல பெண்களோட வாழ்க்கையும் மாறிடல. ஜெயா மாதிரி கஷ்டப்பட்டுட்டிருக்குற பொண்ணுங்க ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்துக்குப் பிறகு தைரியமா வெளியே வரணும்னு நினைக்கிறேன்.”